• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 23

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
56
தனக்கு பிறந்த நாள் என்பது கூட மறந்து போனது.. முன்போல் குருவோடு இயல்பாக பழக முடியாத சோகமே நெஞ்சில் இரும்பு குண்டாக கனத்துப் போக.. கண்களை மூடியிருந்தாலும் உறங்க முடியவில்லை அவளால்..

எப்போதும் கதவை தாழிட்டு உறங்கும் பழக்கம் இல்லை யாதலால்.. சன்னல் வழி அத்து மீறி புகுந்த காற்றில் கதவு அசைவதாக நினைத்துக் கொண்டுதான் கண்களை திறக்க வில்லை அவள்.. ஆனால் அத்து மீறி நுழைந்தது காற்றல்லவே..

"ஹாப்பி பர்த் டே அம்முகுட்டி".. காதோரம் அவன் கிசுகிசுப்பான குரலில் அடித்து பதறி எழ முயல.. காதோரம் வாழ்த்து சொல்ல வேண்டி அவள் மேனியில் படாமல் குரு சாய்ந்திருந்த விதத்தில் அவன் நெஞ்சில் மோதி மீண்டும் படுக்கையில் விழுந்தாள்..

"ஓய்.. என்ன.. தூக்க கலக்கமா" என்று சிறிய புன்னகையுடன் தள்ளி அமர்ந்து.. கரம் கொடுத்து எழுப்பி அவளை அமர வைத்திருந்தான் அவன்..

ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் காதோரம் மெதுவாக வாழ்த்துக் கூறி அவளை எழுப்பி விடுவான்.. சில நேரங்களில் தூங்குவது போல் நடித்து அருகே நெருங்கியிருந்தவனின் காதை கடித்து வைத்த சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது.. அப்போதெல்லாம் சகஜமாக தெரிந்த விஷயம் இப்போது ஏனோ அசாதாரணமாக தோன்றியது.. அதுவும் குருவின் நெருக்கம்.. மூச்சுக்காற்று உரசும்படி வாழ்த்து சொன்ன விதம் உள்ளுக்குள் ஏதோ இனம் புரியாத உணர்வுகளையெல்லாம் போகிற போக்கில் தட்டி எழுப்பிவிட்டுச் சென்றது.. முதன் முதலில் பூப்பெய்திய போது.. இப்படித்தானே பதட்டமும்.. பயமும் சொல்லத் தெரியாத உணர்வுகளும் மனதை ஆக்கிரமித்தன.. கிட்டத்தட்ட அதே போல் ஏதோ ஒன்று.. என்னவென்று அறிய இயலாமல்.. மனதில் கருமேகமாய் சூழ்ந்திருந்த குழப்பத்துடன்.. தன்னிச்சையாக அவளது கரங்கள்.. தன் சட்டையை சரி செய்து கொண்டிருக்க.. அவனோ அதையெல்லாம் கண்டு கொண்டான் இல்லை..

வழக்கம்போல அவள் தோள் மீது கை போட்டு.. தன் பக்கம் இழுத்துக் கொண்டவன்.. அவள் தலையை தோள் மீது சாய்த்துக் கொண்டு.. அவள் வலக்கரத்தை தன் கரத்தோடு பிணைத்துக் கொண்டான்..

"இந்த வருஷமும் எப்பவும் போல ஆராக்குட்டி சந்தோஷமா இருக்கணும்.. நீ நினைச்சது எல்லாம் நடக்கணும்.. கேட்டது எல்லாம் கிடைக்கணும்.. உனக்காக எப்பவுமே இந்த குரு இருப்பான்.. என் கூட எப்பவுமே நீ இருக்கணும்.. உனக்குள்ள என்ன ஓடிக்கிட்டு இருக்குன்னு எனக்கு தெரியல.. ஆனா நான் ஏதாவது உன்னை ஹர்ட் பண்ணி இருந்தா.. என்னை மன்னிச்சிடு.. எல்லாத்தையும் மறந்திடு.. இன்னைல இருந்து எப்பவும் போல துள்ளி குதிச்சி பட்டாம்பூச்சியா பறக்கிற ஆராவைதான் நான் பாக்கணும்".. என்று அணைப்போடு ஊஞ்சல் போல் தன் தோள்களை மெதுவாக இடம் வலமாய் ஆட்டிக்கொண்டிருந்தவன் அவள் கன்னத்தில் மென்மையாய் தட்டிக் கொண்டே கூறிக் கொண்டிருக்க.. அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.. நெஞ்சில் முள்தைத்த வலி. .இப்படிப்பட்ட பேரன்பாளனை எப்படி தவிர்ப்பது என்றே புரியவில்லை அவளுக்கு..

விவரம் தெரிந்த நாட்களிலிருந்து.. இந்த குட்டி பறவைக்கு நிழல் கொடுத்த மரம் அவன் தோள்கள்.. உடலின் ஒரு அங்கமாக அவளோடு கலந்து போனவன் குரு.. அவனோடு நட்புக் கொள்வதோ.. சிரித்து பேசுவதோ.. தவறு என்று யாருமே சொன்னதில்லையே.. மீனாட்சி கூட இதுவரை அளவுக்கு மீறி பழகியதாய் குற்றம் சாட்டியதில்லை.. வரைமுறை விதித்து எச்சரித்ததில்லை..

பார்கவியின் வாய்மொழியாக.. அர்த்தமில்லாத உங்கள் உறவின் வாயிலாக அவனுக்கு கேடு தான் வரும் என்று கேட்ட பிறகு.. நீ அவன் தோளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் வரை அவனுக்கு நல்ல காரியமே நடக்காது என்று உரக்க சொன்ன பிறகு.. அதை தொடர்ந்து வந்த கேலிப் பேச்சுகள் யாவும் பூதக்கண்ணாடியின் மூலம் பார்த்தது போல் பெரிதாக தோன்ற ஆரம்பித்துவிட்டது அவளுக்கும்..

"ஆரா.. உன் பிறந்தநாள் அதுவுமா எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணி குடுப்பியா".. என்று தன்மையாக பேசிய குருவை வினோதமாக பார்த்தாள் ஆரா..

எப்போதும் அவள் ஜடையை பிடித்து இழுப்பதும் காதை திருகுவதும்.. மண்டையில் கொட்டுவதும் வம்பு இழுப்பதுமாக இருப்பவன்.. கல்லூரியில் அதற்கு நேர் மாறாக கண்டிப்பும் கறாறுமாக மிரட்டுபவன்.. ஆராவை பொறுத்த வரையில் குருவின் கோணங்கள் இவ்வளவுதான்..

"குரங்கே.. கையில் அடிபட்டு இருக்கு.. எங்க போய் விழுந்து வாரி வச்ச".. என்று மருந்து போட்டுக் கொண்டே அக்கறையை கூட இதுவரை திட்டுக்களாக வெளிப்படுத்தி தானே பழக்கம்.. உருகும் கேட்டகரி இல்லை அவன்..

இன்றோ.. குழைந்த குரலில் அவன் பேசிய விதம் அவளுக்குள் ஏதோ ஒரு கிளர்ச்சியை தோற்றுவித்திருக்க.. "ம்ம்.. சொல்லு குரு" என்றாள் இயல்பான குரலில்..

ஆழ்ந்த மூச்சோடு அவள் கரத்தை அழுந்த பற்றிக் கொண்டவன்.. "நமக்கு இடையில யார் வந்தாலும் சரி.. என்ன நடந்தாலும் சரி.. நீ எப்பவும் போல என்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டு சகஜமா பழகணும்.. என்னை விட்டு தள்ளி நிக்க கூடாது புரிஞ்சுதா".. என்று பார்கவியை மனதில் வைத்துக்கொண்டு வேண்டுகோள் விடுக்க.. தயக்கத்துடன் விழிகளை தாழ்த்திக் கொண்டாள் அவள்.. ஆராவின் இந்த விலகல்.. பத்து நாட்களில் அவன் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டிருந்தது.. அதிலும் இந்த மௌனம் அவனுக்குள் குறைந்து கொண்டே வரும் உயிர்காற்று.. இனி மொத்த வாழ்க்கைக்கும் போதாது.. என்பதை போல்.. மனதுக்குள் அச்சத்தை தோற்றுவித்ததோ என்னவோ!!.. இனிவரும் நாட்களை இதே ரீதியில் கடத்த முடியுமா என்று தெரியவில்லை..

அவள் பதில் தாராமல் போகவே.. சட்டென எழுந்து நின்றவன் அவள் அமர்ந்திருந்த உயரத்திற்கு குனிந்து.. அவள் கன்னங்களை தன் உள்ளங்கைகளில் தாங்கி.. "என் ஆராக் குட்டிக்கு என்ன பிரச்சினை.. நீ என் செல்லம்தானே.. அப்படி என்ன என் மேல கோபம்?.. நீ இப்படி விலகி போனா என்னால எந்த வேலையும் சரியா செய்ய முடியாது டி.. ஏதோ வாழ்க்கையோட ஒட்டாம நான் மட்டும் தனியா இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது.. எட்டு வயசுலருந்து உன் கூடவே வாழ்ந்து பழகிட்டேன்.. திடீர்னு இப்படி பண்ணாதே ஆரா!!.. எனக்கு கோபமா வருது.. இன்னிக்கு உனக்கு பிறந்தநாள்.. அதனால ரொம்ப அமைதியா பொறுமையா பேசிட்டு இருக்கேன்.. இல்லைன்னா காதைப் புடிச்சு திருகி.. ஏண்டி என்கிட்ட பேச மாட்டேங்கறன்னு நாலு அரை விட்டு என் வீட்டுக்கு இழுத்துட்டு போயிருப்பேன்".. என்று அன்பாக ஆரம்பித்து உரிமையான கோபத்தில் முடித்திருந்தான் குரு..

பதில் சொல்லாமல் முகம் சுருங்க அமர்ந்திருந்தவளை கோபத்தில் தலையில் நாலு கொட்டு வைக்க தோன்றியது..

"நான் உனக்கு யாரு குரு".. திடீரென அவள் கேட்ட கேள்வியில் புருவம் சுருங்க.. குழப்பத்துடன் பார்த்தவனோ..

"என்னடி கேள்வி இது யூ ஆர் எவெரிதிங் டு மீ.. நீதானே எனக்கு எல்லாம்".. என்றதும் அந்த பதிலில் திருப்தி அடையாதவளாக..

"ப்ச்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா".. என்று கேட்டிருந்தாள் சட்டென.. மேகத்தை கிழித்து வெளிப்பட்ட மின்னலென இப்படி ஒரு கேள்வியை எதிர் பார்த்து இருக்க வில்லை குரு.. சிரிப்புதான் வந்தது.. ஒருவேளை விளையாடுகிறாளோ என்று கூட தோன்றியது.. ஆனால் முகத்தில் அதற்கான அறிகுறியே இல்லையே!!..

"என்ன போண்டா.. விளையாடுறியா.. சின்ன குழந்தைக்கு இந்த மாதிரி ஆசையெல்லாம் வரலாமா.. லூசு.. என்ன பேசறதுன்னு விவஸ்தை இல்ல?".. என்று செல்லமாக கண்டித்து தலையில் கொட்டினான் பொங்கி வந்த சிரிப்புடன்.. தலையை தேய்த்துக்கொண்டு அவளும் முறுவலித்தாள்..

"சும்மா விளையாட்டுக்கு" என்று கண்களை சிமிட்டி சிரித்தாள்.. திடீரென மனதில் தோன்றிய கேள்வி வெளிப்படையாக கேட்டு விட்டாள்.. ஆனால் அந்த கேள்விக்கு அர்த்தமே இல்லை என்று.. அடுத்த சில வினாடிகளில் உணர்ந்து கொண்டு பின் வாங்கி விட்டாள் போலும்..

"அதான் தெரியுமே!!.. என் குரங்கு குட்டிக்கு இப்படித்தான் அடிக்கடி மூளை தாறுமாறா வேலை செய்யும்.. இருடி.. நீ ஏடாகூடமா கேள்வி கேட்டதுல ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன்".. என்று ஜன்னல் பக்கமாக ஓடியவன்.. அங்கிருந்து கலர் பேப்பர் சுற்றிய ஒரு பரிசு பொருளை எடுத்து வந்தான்..

அருகே அமர்ந்து கொண்டு.."ஹாப்பி பர்த்டே என் குரங்கு குட்டி".. என்று மீண்டும் அவள் பக்கவாட்டு நெற்றியில் முத்தமிட..

அந்த நெற்றி முத்தம் வழக்கத்திற்கு மாறாக உள்ளுக்குள் சிலீர் உணர்வை தோற்றுவித்திருந்ததை பொருட்படுத்தாது.. "என்ன கிப்ட் வழக்கம் போல.. ஏதாவது போரிங் புக்கா.. தயவு செஞ்சு இந்த ஃபாரின் ஆத்தர் பிசிக்ஸ் புக் மட்டுமே வேண்டாம்.. படிக்கவே முடியல.. தலை வலிக்குது" என்று சலிப்புடன் அந்த பரிசு பொருளை திறந்தவளுக்கு.. வியப்பில் கண்கள் வெளியே வந்து விழும் அளவிற்கு விரிந்து போயின.

லேட்டஸ்ட் மாடல் ஐ போன் 14 அவளுக்கு பிடித்த பர்ப்பிள் நிறத்தில் தகதகத்துக் கொண்டிருக்க.. "வாவ்".. என்று ஆச்சரியம் குறையாது வாயப் பிளந்தவள்.. ஃபோனை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள்..

"அச்சோ.. நான் ஆசைப்பட்டு வாங்கணும்னு நினைச்ச ஃபோன்.. இந்த எக்ஸாம்ல டிஸ்டிங்ஷன் வாங்கினாதான் அண்ணன் வாங்கி தருவேன்னு சொல்லிட்டான்.. அதுக்குள்ள நீயே வாங்கி கொடுத்துட்ட.. தேங்க்ஸ் குரு.. ஐ அம் சோ ஹாப்பி" என்று அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் குதூகலத்துடன்.. தள்ளி நிற்க வேண்டும்.. எல்லைக்குள் பழக வேண்டும் என்று நிபந்தனைகளெல்லாம் அடிக்கடி மறந்து போய் விடுகின்றது அவளுக்கு.. ஆராவை தோளோடு அணைத்துக் கொண்டவன்..

"எல்லாம் சரிதான் அதுக்காக போனே கதின்னு.. படிப்பை கோட்டை விட்டு விடாதே.. முக்கியமான ரெஃபரன்ஸ் எல்லாம் எடுத்து ஒழுங்கா படிக்கத்தான் புது போன் வாங்கி கொடுத்தேன்.. வரப்போகிற எக்ஸாம்ல ஒரு மார்க் கம்மியா போனாலும்.. தொலைச்சு கட்டிடுவேன்.. ஞாபகம் வச்சுக்கோ" என்று திடீர் ப்ரொபசராக மாறியிருந்தான் அவன்.. அவன் கண்டிப்பு வார்த்தைகள் எதுவும் அவள் காதில் ஏறவில்லை.. மொபைல் ஃபீச்சரினுள் மூழ்கி விட்டாள்..

"ஏய் தள்ளிப்போடா அந்த பக்கம்".. இரையைப் பிடிக்க வந்த முதலைப் போல் படுக்கையில் தவழ்ந்து கொண்டே வந்த மீனாட்சி.. தன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது குருவை கீழே தள்ளி விட்டிருந்தாள்.. "ஹாப்பி பர்த்டே என் செல்ல குட்டி".. என்று கட்டிக்கொண்டே பரவச நிலையை அடைந்து.. அவளும் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்க ஆரா நல்ல வேளையாக அவள் காலை பிடித்துக் கொண்டாள்.. மீனாட்சியின் தலை குருவின் வயிற்றுப் பகுதியில் முட்டியதில்.. படாத இடத்தில் பட்டு பிராணம் போய்விட.. "அம்மாஆஆ".. என்று அலறினான் அவன்..

"அம்மா தான்டா.. அதுக்கு ஏன் இப்படி கத்தி கூப்பாடு போடறே.. அவன் வந்து தொலைச்சிட போறான்.. வாயை மூடு".. என்று ஏடாகூடமான போஸில் எழுந்திருக்க முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தாள் அவள்.. எங்கிருந்தோ வந்து இன்னொரு கரம் கொடுத்து தூக்கியிருந்தாள் துவாரகா.. ஆரா.. துகி.. இருவருமாக சேர்ந்து மீனாட்சியை தூக்கி நேராக அமர வைத்தனர்..

அவள் பரபரவென மூச்சு வாங்கிக் கொண்டிருந்த வேளையில்.. "ஹாப்பி பர்த்டே ஆரா".. என்று மென்மையாக அணைத்து வாழ்த்து சொன்னாள் துவாரகா..

"ஏய் அதை கொண்டு வந்தியாடி".. மீனாட்சி அவசரப்படுத்த.. இதோ எடுத்துட்டு வந்துட்டேன்" என்று.. கட்டிலின் பின் பக்கத்திலிருந்து ஒரு பெரிய பார்சலை தூக்கிக் கொண்டு வரவும்.. குரு ஸ்டூலை இழுத்து போட்டு.. அந்த பார்சலை பிரித்து உள்ளிருந்த பர்த்டே கேக் எடுத்து ஸ்டூல் மீது வைத்திருந்தான்..

அவளுக்கு பிடித்த கிரீமி வைட் ஃபாரஸ்ட் பட்டர்ஸ்காட்ச் ஃபிளேவர்.. வித் ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் டாபிங்..

குரு மெழுகுவர்த்தியை கேக்கின் மீது ஏற்றி வைத்து.. "ம்ம்.. இப்போ ஊது".. என்றும் அவள் ஊதப் போகும் நேரத்தில்..

"அம்மா.. தள்ளிப் போ.". இன்று ஆராவின் அருகே அமர முயல.. "முடியாது நான் இங்கதான் உட்காருவேன்" என்று அடம் பிடித்தாள் மீனாட்சி.. "துகி நீ தள்ளிப் போ" என்று தங்கையை அதட்ட.. அவளும் நோ வே என்றாள்.. பலமாக தலையை ஆட்டி..

"ர்ர்ர்".. என்று இருவரையும் கடிப்பது போல் பாவனை செய்தவன்.. கட்டில் மீது ஏறி ஆராவின் முதுகு பக்கமாக முட்டி போட்டவாறு அமர்ந்து கொண்டான்.. "ம்ம்.. சீக்கிரம் கட் பண்ணு" என்று அவள் இரு கைகளையும் பிடித்து உலுக்கவும்.. மெழுகுவர்த்தியை அணைத்து கேக்கை வெட்டியவள்.. முதல் துண்டை மீனாட்சிக்கு ஊட்டுவதற்காக எடுத்து வந்த நேரத்தில் இருவருக்கும் நடுவே புகுந்து.. ஆஆ.. என வாயைப் பிளந்து.. தனக்கான உரிமையை அபகரித்துக் கொண்டான் குரு.. அவள் தோள் மீது கை போட்டு அணைத்தவாறே இன்னொரு துண்டு கேட்டை வெட்டி எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டு.. மிச்சத்தை தன் வாயில் போட்டுக் கொண்டு நகர்ந்து நின்றான்..

மீனாட்சியும் துவாரகாவும்.. ஆராவிற்கு கேக் ஊட்டி முடித்திருக்க.. வாசலில் கைகட்டி நின்றபடி.. அத்தனை காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ்.. தங்கை மகிழ்ச்சியாக இருக்கிறாள் வேறென்ன வேண்டும்.. வருடாவருடம் நடக்கும் கூத்துதானே இது.. தடுக்க நினைத்து பல முயற்சிகள் செய்து.. ஆராவை கடத்திக் கொண்டு போய் பிறந்தநாள் கொண்டாடிய வருடங்கள் எல்லாம் உண்டு.. அதற்குப்பின் அவன் எந்த முயற்சிகளும் எடுப்பதில்லை.. ஆனால் அவள் பிறந்து இத்தனை வருடங்களில்.. ஒரு முறை கூட முதலில் தன் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதே இல்லை.. குருவும் மீனாட்சியும் முந்திக்கொண்டு.. போட்டிக் குதிரைகளைப் போல்.. பாசத்தோடு ஓடி வரும் வேளையில்.. அவர்களுக்கு வழிவிட்டு விலகி நின்று கொள்வான்.. முதலில் வாழ்த்தை உரைத்தால்தான் பாசம் கொண்டவன் என்று அர்த்தமாகுமா என்ன.. அவளுக்கான மகிழ்ச்சி பாதையை தடை செய்யாமல் வழிவிட்டு நிற்பதே அன்பின் சுவடுதான்..

"நம்மை சுற்றி சிசிடிவி கேமரா ஒன்னு வட்டம் போடுது போலிருக்கே".. குரு கேக்கை சுவைத்துக் கொண்டே தன் அம்மாவிடம் சொல்ல..

"ஆமா ஆமா.. இதுக்கு மேல இங்க நின்னா கேமரா வெடிச்சிடும்.. வந்த வேலை முடிஞ்சதுன்னா கிளம்பலாம்".. என்று மீண்டும் ஆரா கன்னத்தில் முத்தமிட்டு.. அவளை மனதார ஆசிர்வதித்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள் மீனாட்சி..

"வழக்கம்போல ஒரு சரவெடி வந்து உன்னை தோண்டி துருவி விசாரிக்கும்.. உன் ரூம் பூரா சர்ச் பண்ணும்.. யாரும் வரல.. ஃபெயரி கார்ட் மதர் வந்து கேக்கை வெச்சிட்டு போச்சு.. எப்படி நடந்துச்சுன்னு எனக்கே தெரியாது.. அப்படின்னு ஏதாவது பொய் சொல்லி சமாளி.. நானும் கிளம்புறேன்.. ஒன் அகெய்ன் ஹேப்பி பர்த்டே என் போண்டா குட்டி".. என்று அவள் இரு கன்னங்களையும் வலிக்க கிள்ளி நெற்றி முட்டி விட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான் குரு..

"டேய்.. டுபாகூர் அண்ணா.. ஒரு வருஷமாவது எனக்கு இப்படி பிறந்தநாள் கொண்டாடி இருப்பியாடா நீ".. அவன் முதுகின் பின்னே கத்திய வார்த்தைகள் யாவும் காற்றோடு கரைந்து போயின..

"இதுக்கு மட்டும் எப்பவும் இவன்கிட்டேருந்து பதிலே வராதே".. என்று நீண்ட பெருமூச்சு விட்ட துவாரகா.. "சரி அப்ப நானும் கிளம்புறேன்.. அம்மாவும் அண்ணாவும், உன் பேர்ல அபிஷேகம் பண்றதுக்காக கோவிலுக்கு போறாங்க.. நான்தான் அப்பா தூக்கத்திலிருந்து எழுந்திருக்காம சமாளிக்கணும் வரேன்".. என்று அங்கிருந்து ஓடியவள்.. மீண்டும் திரும்பி வந்து..

"நாளைக்கு.. அம்மா எடுத்துக் கொடுத்த அந்த கிரீன் கலர் சுடிதார் போட்டுக்கோ.. இல்லனா மனசு ரொம்ப கஷ்டப்படுவாங்க.. ஒன்ஸ் அகைன் ஹாப்பி பர்த்டே" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடியிருந்தாள்.. துவாரகா ஓடிய திசையை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆரா நிறைவான மனதுடன்.. பெருமூச்சு விட்டு.. கேக்கை எடுத்து குளிர்சாதன பெட்டியில் பத்திரப்படுத்திவிட்டு மீண்டும் கட்டிலில் வந்து அமர.. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்

"ஹாப்பி பர்த்டே பாப்பா" என்று உள்ளே வந்தான் தமிழ்.. "தேங்க்யூ அண்ணா" என்று இதழ் விரித்த புன்னகையுடன்..அவனை கட்டிக் கொண்டவள்.. கண்கள் சுருங்கி யோசனையாக அவன் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்னடா குட்டிமா.. அப்படி பாக்குற உன் பார்வையை சரி இல்லையே.. அந்த கொள்ளை கூட்டம் இன்னிக்கும் வந்து இறங்குச்சா!!.. கேக் வெட்டி நல்லா திருப்தியா கொண்டாடுனீங்களா.. சரி விடு இன்னைக்கு பிறந்தநாள்.. உன்னை எதுவும் திட்ட விரும்பல.. ஆனா இனிமே இது கண்டினியூ ஆகாம பாத்துக்கோ" என்று தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல் கண்டிப்பு குரலில் மிரட்டியிருந்தவன்.. "என்னடா அப்படி பாக்குற" என்று ஆராவின் பார்வை புரியாமல் புருவம் இடுங்கினான்..

"நீ சொன்னதெல்லாம் சரிதான்.. கேக் நாங்க இங்க வெட்டுனோம்.. ஆனா உன் மீசைல எப்படி கேக் வந்துச்சு".. என்று அவன் மீசையில் ஒட்டியிருந்த க்ரீமை விரலால் வழித்து அவனிடம் காட்ட.. திருட்டு முழி முழித்தான் டாக்டர்..

" அது நானும் உனக்காக கேக் வாங்கி வச்சிருந்தேன்ல" என்று சமாளிக்க..

"அப்படியா எங்கே?.. எடுத்துட்டு வா" என்றாள் ஆர்வமாக..

எந்த கேக்கை எடுத்து வருவது.. வாங்கியிருந்தால்தானே?.. காலங்காலமாக கேக் வாங்கி வெட்டுவதெல்லாம் குரு வீட்டு வழக்கம்.. ஆருஷி இருந்தால் பால் பாயாசம் ஸ்வீட் ஏதாவது செய்து தருவாள்.. அவன் சரித்திரத்தில் கேக் வாங்கிய சம்பவம் எல்லாம் கிடையவே கிடையாது.. அப்படி என்றால் அவன் மீசையில் கேக் எப்படி?..

அவனை காப்பாற்றுவதற்காகவே போன் ஒலித்தது அந்நேரத்தில்.. "இதோ போன் அடிக்குது பாரு.. நல்ல சகுனம்ல" என்று அசடு வழிந்து.. வீடியோ காலை ஆன் செய்தான் தமிழ்..

அங்கே ஆருஷி.. "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்ல குட்டி".. புன்னகைத்துக் கொண்டே வாழ்த்துக்கள் கூறவும்..

"தேங்க்ஸ் அக்கா".. என்று பதில் சொன்ன வேளையில்.. தமிழ்.. ஆரா.. இருவருமே அதிர்ந்து போயினர்.. ஆருஷி கையில் பூரிக்கட்டை.. அவள் தலைக்கு மேல் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்த வீராவின் கிழிந்து போன சட்டை..

"என்னக்கா மாமாவுக்கு அடி பலமா".. தமிழ் சிரித்துக் கொண்டே கேட்க..

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. வீதியில கொசு மருந்து அடிச்சிட்டு போனாங்க.. கோவில் சாவியை கொடுக்க வந்த ஊர் பெரியவரே புகைமூட்டத்துல உங்க மாமானு நினைச்சு பூரிக்கட்டையால அடிச்சுப் புட்டேன்.. அவரை தூக்கிக்கிட்டு உங்க மாமா ஆஸ்பத்திரி போயிருக்காங்க என்றாள் சர்வ சாதாரணமாக.. "அப்போ அந்த சட்டை".. என்று ஆரா கேட்க.. அது.. "எலி கடிச்சிருச்சு" என்றாள் சலிப்புடன் ..

பூனைபோல் உள்ளே நுழைந்து "பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா" மீசைய முறுக்கிபடி.. ஆருஷியோடு நெருங்கி நின்று வாழ்த்துக்கள் சொன்னான் வீரபாண்டியன்..

"நன்றி மாம்ஸ்".. என்றாள் ஆரா.. "ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல".. என்று உதட்டை சுழித்து.. முகத்தை வெட்டிக் கொண்டாள் ஆருஷி..

"என்ன ஆச்சு மாம்ஸ்.. அக்கா கோவமா இருக்கு".. தமிழ் கட்டிலில் அமர்ந்து காலை ஆட்டிக்கொண்டே கேட்டான்..

"அது ஒண்ணும் இல்லைடா.. நம்ம ஊருக்கு வர்றது ஒரே பஸ்.. அந்த பஸ் டிரைவர் வண்டியை ஓரமா நிறுத்திப்புட்டு தூங்கிட்டு இருந்தாரு.. எவனோ ஒருத்தன்.. அவர் தலையை வாரி தென்னை மரக் குடுமி போட்டு.. பூ வைச்சு போட்டோ எடுத்து பேஸ்புக்ல போட்டு விட்டானாம்.. அது ஒரே கலவரமா போய்.. எவன் இந்த மாதிரி குடுமி போட்டான்னு தெரியிற வரைக்கும் இந்த ஊருக்கு பஸ் விட மாட்டேன்ன்னு சொல்லிப்புட்டாங்க.. அதுக்கு உங்க அக்கா என் மேல கோவமா இருக்கா.. என்னது இதெல்லாம் சின்ன புள்ளத்தனமா இல்ல?".. என்று வேடிக்கையாக சிரித்தான் சுருட்டை முடிக்காரன்..

"ஆஹான்.. அப்படியா.. எங்கே அந்த facebook போட்டோவை காட்டுங்க" என்றாள் ஆருஷி.. வீரபாண்டியனும் மிதப்பாக அந்த புகைப்படத்தை திறந்து காட்டவும்.. அதை ஜூம் செய்து காட்டினாள் அவள்..

"தென்ன மரக் குடுமியும் பூவுமாக.. அந்த டிரைவர் உறங்கிக் கொண்டிருந்த கண்ணாடியின் பின்புறம்.. சீப்புடன் நின்று கொண்டிருந்தான் வீர பாண்டியன்..

"மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டேனோ" வீரபாண்டியன் ஜெர்க் ஆக.. "கொண்டை இல்ல மாமா குடுமியை மறந்துட்டீங்க".. என்று சத்தம் போட்டு சிரித்தனர் ஆராவும்.. தமிழும்..

ஆருஷி இடுப்பில் கைவைத்து முறைத்து கொண்டிருக்க..

"சும்மா முறைக்காதடி.. ஒழுங்கா நீ ஒரு பொம்பள புள்ள பெத்து கொடுத்திருந்தேனா.. நான் எதுக்கு அந்த டிரைவருக்கு.. குடுமி போட்டு அழகு பார்க்க போறேன்.. எல்லாம் உன் தப்புதான்.. மாமனை ஏங்க விட்டதால வந்த விளைவு எங்க வந்து நிக்குது பாத்தியா.. இனியாவது என் மனசு புரிஞ்சு அனுசரனையா நடந்துக்க பாரு".. என்று அவளை குழப்பி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி இருந்தான் வீரு..

தொடரும்..
 
Member
Joined
May 3, 2025
Messages
35
😂 வீர மாம்ஸ் what a performance....,😅😅 அப்டியே எஸ்கேப் ஆயிரு பாண்டியா...

தமிழு தமிழு என்ன நடந்தாலும் உங்க graph sheet மட்டும் fill ஆயிட்டே இருக்கே...

ஆரா வாய்விட்டு கேட்டுடா...இந்த மக்கு வாத்திக்கு எப்போ புரியுமோ...,,😬😬😬
 
Top