• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அனிச்சம் 1

Joined
Jul 31, 2024
Messages
67
மேளதாளமும் நாதஸ்வர இசையும் மங்கள நாதமும் முழங்க.. திருமண வைபவத்திற்கு உண்டான அனைத்து இலட்சணங்களோடு மிளிர்ந்தது அந்த மிக பிரம்மாண்ட கல்யாண மண்டபம்..

பணக்கார செழுமை மண்டபத்தின் ஒவ்வொரு செங்கலிலும் வளமாகவே தெரிய.. வாவ்.. எவ்வளவு பிரம்மாண்டம் என்று வாயைப் பிளக்கும் அளவிற்கு சாமான்ய மக்கள் யாரும் திருமணத்திற்கு அழைக்கப் படவில்லை.. வந்திருந்த அனைவரும் பணக்கார வர்க்கத்தை சேர்ந்த உயர்த்தட்டு மக்களே..

அரிமா வேந்தன் வெட்ஸ் கீர்த்தனா..

பல வருடங்களாக பெருமுயற்சியெடுத்து இன்று மண்டபம் வரை வந்த திருமணம் இன்னும் சற்று நேரத்தில் நிற்கப் போகின்றது.. ஆம்..

திருமணத்தை நிறுத்தப் போகிற நபர்.. இவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன்.. இல்லாவிட்டால் உயிர் துறப்பேன்.. என்று தற்கொலை வரை சென்று விரும்பிய காரியத்தை சாதுர்யமாக சாதித்துக் கொண்ட மணப்பெண் கீர்த்தனாதான்.. பெற்றோரையும் உறவினர்களையும் அழைத்து சபையில் நிற்க வைத்து இந்த திருமணம் வேண்டாம் மாப்பிள்ளை எனக்கு பிடிக்கல என்று மறுத்துக் கொண்டிருக்கிறாள்..

"ஏய் என்னடி பேசுற.. உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. மூணு வருஷமா நீ படுத்தின பாடு தாங்க முடியாம தான்.. நானும் அம்மாவும் போராடி படாத பாடுபட்டு வேந்தன் கிட்ட கெஞ்சி கூத்தாடி இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கோம்.. வெண்ணெய் பொங்கி வர்ற நேரத்துல பானையை உடைச்ச மாதிரி.. எல்லாம் கூடி வந்து இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் கையால உன் கழுத்துல தாலி ஏற போகுது.. இப்ப வந்து இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்ற.. முன்னாடியே சொல்லி தொலைச்சிருக்க வேண்டியதுதானே".. இந்த திருமணம் வேண்டாம் என்று அனைவரையும் முன்னிலையிலும் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்த தங்கையை ஒருவழியாக்கிக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் இரண்டாவது மருமகளும் கீர்த்தனாவின் அக்காவுமான ராதிகா..

முகூர்த்தத்திற்கு ஒரு மணி நேரமே பாக்கியிருக்க.. அனைவரையும் அழைத்து திருமணம் வேண்டாம் என்று வந்து நிற்கும் மணப்பெண்ணை கண்டு அவளின் பெற்றோர்களும் வேந்தனின் பெற்றோர்களும் மற்றவர்களும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க.. இந்த வைபவத்தின் நாயகனும் மாப்பிள்ளையுமான அரிமா வேந்தன்.. அவன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று பெயருக்கேற்றார் போல் அரிமாவாக எந்தவித உணர்வுகளையும் காட்டாது.. பின் கை கட்டியவாறு தன் கத்தி போன்ற கூர்மையான பார்வையால் கீர்த்தனாவை துளைத்துக் கொண்டிருந்தான்..

வேந்தனின் ஊடுருவும் பார்வை உடல் முழுக்க நடுக்கத்தை பரவச் செய்தாலும் வேறு வழி இல்லாது.. அவன்பக்கம் பார்வையை திருப்பாமல் "அக்கா அப்போ இருந்த சிச்சுவேஷன் வேற.. இப்ப இருக்கிற சூழ்நிலை வேற.. புரியாம பேசாதே.. நான் ஒரு மனுஷனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்.. உணர்ச்சிகள் இல்லாத எந்திரத்தை இல்ல".. கீர்த்தனாவின் பேச்சில் அதிர்ந்து போனாள் அவள்..

என்ன அவன் முன்னாடியே இப்படி சொல்லிட்டா.. என்று ராதிகா கலவரத்துடன் வேந்தனை பார்க்க அவனோ எவ்வித சலனமும் இல்லாமல் கீர்த்தனாவைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.. "வேந்தன் மாமாவை தான் கட்டுவேன் இல்லனா செத்துப் போறேன்" என்று அழுது அடம் பிடித்த கீர்த்தனாவா இவள்.. நம்ப முடியாது கண்முன் நின்றவளை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்..

கௌரி வேகமாக வந்து கீர்த்தனாவை முரட்டுத்தனமாக பற்றி தன் பக்கம் திருப்பியவள்.. "என்னடி எந்திரம் அது இதுன்னு.. இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தத்தை வச்சுக்கிட்டு என்ன பேச்சு பேசிட்டு இருக்க.. பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு.. நீதானே இந்த மாப்பிள்ளை தான் வேணும்னு ஒத்த கால்ல நின்னே.. எவ்ளோ கஷ்டப்பட்டு கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி இருக்கோம்.. இப்ப வந்து பிடிக்கலைன்னு சொன்னா எப்படி? மரியாதையா போய் ரெடியாகி வா.. இல்ல நடக்கிறதே வேற" என்று மிரட்டி கீர்த்தனாவின் கையைப் பிடித்து இழுக்க முயல தாயின் கரத்தை பட்டென உதறினாள் அவள்.. ஏற்கவே தலைக்கு மேலே தானாக வந்து அமரப் போகின்ற மகாராணி கிரீடத்தை முட்டாள்ப்பெண் இப்படி அருமை தெரியாமல் தட்டி விடுகின்றாளே என்று கோபம் வேறு கண்ணை மறைக்க.. சொல் பேச்சு கேளாமல் முரண்டு பிடிக்கும் மகளை பளாரென்று அறைந்திருந்தாள் கௌரி ..

அனைவர் முன்னிலையிலும் அறை வாங்கிய ஆத்திரத்துடன் "அம்மாஆஆ".. கீர்த்தனா சத்தம்போட..

"கத்தாதே.. தொலைச்சிருவேன்.. அங்கே பியூட்டிஷியன்ஸ் வந்து உனக்காக காத்திருக்காங்க ..போய் கிளம்பி வர்ற வழியை பாரு.. வேற எதுவும் பேச வேண்டாம்".. கௌரி தன் மகளை அடக்க முயல.. நாராயணனோ.. "கௌரி மெதுவா பேசு.. பிள்ளையை ஏன் இப்படி அடிக்கிறே".. என்று மகளுக்கு பரிந்து கொண்டு வந்தார்.. அவருக்கும் கீர்த்தனாவின் திடீர் செயல்பாடுகள் கோபத்தை வரவழைத்திருந்தாலும்.. நட்ட நடு சபையில் பாச மகள் அடி வாங்குவதில் நெஞ்சம் பதைபதைத்துப் போனார்..

"அம்மா.. உனக்கு நான் எப்படி சொல்லி புரிய வைப்பேன்.. அவர் பக்கா மேல் டாமினென்ட்.. அவரோட என்னால குடும்பம் நடத்த முடியாது".. என்றாள் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு..

"ஓஹோ.. அதெல்லாம் இப்பதான் தெரியுமா.. ஏன்.. என் புள்ள தான் வேணும்னு ஒத்த கால்ல நின்னு தற்கொலைக்கு முயற்சி பண்ணுனியே.. அப்ப தெரியலையா அவன் குணம்".. அவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த வேந்தனின் தாய் ராணி கலா.. சீறிக் கொண்டு வர.. "அத்தை நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க.. அவ சின்ன பொண்ணு நான் பேசி புரிய வைக்க முயற்சி பண்றேன்".. என்று தன் மாமியாரை சமாதானப்படுத்த முயன்றாள் ராதிகா.. தன் வாழ்க்கையும் இதில் அடங்கி இருக்கிறதே.. பதமாகத்தானே கையாள வேண்டும்.. தன்னையும் பெற்றவர்களையும் இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் கொண்டு வந்து நிறுத்திய கீர்த்தனாவை பார்வையால் எரித்தாள் ராதிகா..

"என்ன பேசி புரிய வைக்க போற.. வாய்க்கு வந்தபடி என் புள்ளைய பத்தி என்ன பேச்சு பேசுறா.. பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றியா.. நாங்களா உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னு இவதான் என் மருமகளா வேணும்னு தவமிருந்து கேட்டோம்.. இதோ நிக்கிறாளே உன் தங்கச்சி.. வேந்தன் மாமா தான் வேணும்னு எவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணினா.. இப்ப என்ன வந்துச்சாம் இவளுக்கு.. மூளையில ஏதாவது கோளாறு ஆயிடுச்சா.. இவ என்ன வேண்டாம்னு சொல்றது.. என் புள்ளைக்கு இவ வேண்டாம்.. நான் சொல்றேன் " என்று கோபம் குறையாமல் கத்திக் கொண்டிருந்தாள் ராணி..

"என்னது என் பொண்ணு வேண்டாமா!!" நெஞ்சம் பதறிய கௌரி "ஐயோ சம்மந்தியம்மா அப்படியெல்லாம் பேசாதீங்க.. சின்ன பொண்ணு ஏதோ உளர்றா.. இவ இப்படி ஒரு குண்டை தூக்கி போடுவான்னு நாங்களும் எதிர்பார்க்கல.. கொஞ்சம் பொறுங்க பேசலாம்.. கௌரி பணிவாக பேசி.. ராணியின் கோபத்தை தணிக்க முயல.. வேந்தனின் தந்தை ராஜேந்திரன்.. எனக்கும் இந்த சம்பவத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது போன்று பேசுபவர்களின் வாயை ஆவென பார்த்துக் கொண்டிருந்தார்..

"அடேங்கப்பா கல்யாணம் நிக்க போகுதா.. எப்படியாவது அத்தைகிட்டே பேசி தாஜா பண்ணி.. என்னோட தங்கச்சி ஷாலினியை இந்த வீட்டு மருமகளா கொண்டு வந்துடனும்.. இதுதான் நல்ல வாய்ப்பு பயன்படுத்திக்கோ ஆர்த்தி".. என்று மனதுக்குள் பொங்கிய உற்சாகத்துடன் வெளிப்புறத்தில் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் மூன்றாம் மருமகள் ஆர்த்தி..

அண்ணனுக்கு முன்.. சம்சார சாகரத்தில் இணைந்த இரு தம்பிகளான ஆனந்த்.. முத்து அரவிந்த் இருவரும் காட்டுக்கு ராஜா போல் வீட்டின் அரசனான அண்ணனின் முன் பேசுவது.. அவமரியாதை என்ற கருதியோ என்னவோ வாயை திறக்கவே இல்லை..

மொத்த குடும்பத்தினரும் ஆளுக்கொரு பக்கம் சலசலத்துக் கொண்டிருக்க.. "போதும் நிறுத்துங்க.. இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. இதோட விட்ருங்க.. வற்புறுத்தாதிங்க".. என்று கீர்த்தனா தன் உரிமையை நிலை நாட்ட "

"அப்படியா"..

என்ற கணீர் குரலில் அனைவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்பியது..

முன்னே வந்தான் அவன்.. அரிமா வேந்தன்.. நெடு நெடுவென ஆறடி உயரத்தில் அதற்கேற்ற உடல் வாகுடன்.. அந்த கட்டுக்கோப்பான உடலை வெளிப்படையாக காட்டும் பட்டுச் சட்டையும் நீண்ட கால்களை கழுவி இடுப்பில் அமர்ந்திருந்த வேட்டியும்.. வேந்தனை அக்மார்க் ஆணழகனாக காட்ட.. கம்பீரமாக நடந்து வந்தவனின் பார்வையில் கத்தியின் கூர்மை.. அதே துளைத்தெடுக்கும் விழிகளுடன்
அவன் அருகே நெருங்கி வர கீர்த்தனா தடுமாறினாள்..

"நிச்சயமா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு ஆனா அதுக்கு என்ன காரணம்னு சொல்ல வேண்டிய கடமையும் உனக்கு இருக்கு கீர்த்தனா" என்றான் அழுத்தமாக..

"அது.. அது".. திக்கித் திணறி தடுமாறியவள்.. "ஏன்னா ஏன்னா.. நீங்க ஆம்பளையே இல்ல".. என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒருவாறாக சொல்லி முடிக்க கூட்டம் மொத்தமும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றது..

"என்ன சொன்னே?".. வேந்தன் ஒற்றை புருவத்தை வளைத்து.. செவிகளை கூர்மையாக்கி கேட்க..

அழுத்தமாக விழிகளை மூடி திறந்து.. "எஸ் யூ ஆர் இம்போர்ட்டண்ட்.. உங்களை கட்டிக்க எந்த பொண்ணும் விரும்ப மாட்டா".. அந்த அறையே அதிரும் அளவிற்கு கத்தினாள் கீர்த்தனா..

பாவாடை தாவணி தூக்கிப் பிடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தாள் பைரவி..

இதுவரை கிழிந்ததையும் கந்தலையும் மட்டுமே அணிந்து கொண்டிருந்தவள்.. முதலாளியின் திருமணத்தை முன்னிட்டு தொழிலாளிகள் அனைவருக்கும் புது துணி எடுத்துக் கொடுக்கப் பட்டதை முன்னிட்டு .. தனக்கு பிடித்த வானின் நீல வண்ண பாவாடை ரவிக்கையும்.. மஞ்சள் நிறப்பட்டு தாவணியும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதில் அவ்வளவு ஆனந்தம்.. இருபது வயதே நிரம்பிய பட்டாம்பூச்சியாக.. பிரபஞ்சம் போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அகன்று விரிந்திருக்கும் அந்த மாபெரும் மண்டபத்தை.. மகாராஜாவின் அரண்மனையை போன்று விழி விரித்து பார்த்தவாறு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தவளை கை பிடித்து நிறுத்தினாள் கேசவி..

"ஏய் என்ன பெரிய மகாராணி மாதிரி அங்கேயும் எங்கேயும் திரிஞ்சிட்டு இருக்கே.. தலைக்கு மேல வேலை இருக்கு.. அங்க கிப்ட் எல்லாம் பேக் பண்ணி எடுத்து வைக்கணும்.. முகூர்த்தத்துக்கு மாப்பிள்ளையும் பெண்ணும் தயாராகிட்டு இருக்காங்க.. உன்னை பொண்ணு பக்கத்துல போய் நின்னு ஏதாவது உதவி வேணுமான்னு கேட்க சொன்னேனா இல்லையா!!.. புது டிரஸ் போட்டதும் மேடமுக்கு வேலைக்காரிங்கிறது மறந்து போச்சோ.. அந்த காண்ட்ராக்டர் கனகரத்தினம் வரட்டும்.. நீ செய்ற வேலையோட லட்சணம் பத்தி நல்ல போட்டு கொடுக்கிறேன்".. நாற்பத்தி ரெண்டு வயதான கேசவி.. பைரவியை போட்டு தாளிக்க..

"வேண்டாம்.. வேண்டாம்.. காண்ட்ராக்டர்கிட்ட சொல்ல வேண்டாம்.. நீங்க சொல்றதையெல்லாம் கேக்கிறேன்".. என்று கரங்களைக் காற்றில் அசைத்து சைகையின் மூலம் தன் வேண்டுகோளை உணர்த்தி விழிகளால் கெஞ்சிக் கொண்டிருந்தாள் பைரவி..

ஆம்.. அவளுக்கு வாய் பேச வராது.. ஆனால் இதழால் உணர்த்த வேண்டியதை விழிகளால் அழகாக உணர்த்தும் திறமை அவளுக்கு உண்டு.. நர்த்தனமாடும் அழகிய குண்டு விழிகள் இடம் வலமாக மேலும் கீழுமாக உருண்டு ஆயிரம் கதை பேசுமே!!.. பழைய உடைகளிலும் கூட பளிச்சென்று இருப்பவள்.. இன்று புது உடையில் பேரழகியாக வலம் வந்ததே.. கேசவியின் புகைச்சலுக்கு காரணம்.. அவளும் பைரவியும் வேந்தன் வீட்டு வேலைக்கார பெண்கள்.. திருமணத்திற்கு கூடமாட ஒத்தாசைக்காக இங்கே அழைத்து வரப் பட்டிருக்கின்றனர்.. வந்த இடத்தில் பைரவி சிறுபிள்ளைத்தனமாக மண்டபத்தை சுற்றி பார்க்க கிளம்பி விடவே இந்த மண்டகபடி..

"அக்கா.. ப்ளீஸ் மாட்டி விட்டுடாதீங்க".. என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கண்களை கெஞ்சுவதாக சுருக்கினாள் பைரவி..

சீனியர் பெண்ணாக பாவம் பார்த்து பெரிய மனதுடன் "சரி சரி போய் வேலையை பாரு.. வலது பக்கம் மணப்பெண் அறை.. கீர்த்தனா மேடமுக்கு அலங்காரம் பண்ண ஆரம்பிச்சிருப்பாங்க.. உன்னை தான் தேடுவாங்க சீக்கிரம் போ".. என்று அவசரப்படுத்தி அனுப்பி விட்டு லட்டு.. ஜிலேபியை பதுக்கி வைத்து தன் குடும்பத்தினருக்கு எடுத்துப் போவதற்காக சமையல் கட்டுப் பக்கம் சென்றுவிட்டாள் கேசவி..

பைரவியோ கேசவி கொடுத்த கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு.. பட்டுப்பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு பிடித்துக் கொண்டு பட்டாம் பூச்சியாக வேகமாக ஓடியிருந்தாள் இன்னும் சிறிது நேரத்தில் தனது சிறகுகள் வெட்டப்பட போவது தெரியாமல் ..

தொடரும்..
ஆரம்பமே ட்விஸ்ட்டா ரைட்டு ரைட்டர் மேடம் ஆரம்பிச்சிட்டாங்க அவங்க கேம 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄அச்சோ வாய் பேசாத பொண்ணா
என்ன நடக்க போதோ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Top