• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 18

Member
Joined
Jan 11, 2023
Messages
62
T
காலையில் சுப்ரியா கண்விழித்து பார்க்கும்போது தர்மன் வீட்டில் இல்லை.. ஒருவேளை சீக்கிரமாகவே வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டாரோ என்று யோசனையுடன் குளித்து உடைமாற்றிக் கொண்டு காபி போட்டு குடித்துவிட்டு அங்கிருந்த ஒரு பழைய பையை எடுத்து துடைத்து சுத்தம் செய்து தனது உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்..

முந்தைய நாள் இரவில் "உனக்கு தேவையானதை எடுத்து வச்சுக்க.. ஈவினிங் நான் வந்த உடனே கிளம்பனும்" என்று சொல்லியிருந்தான் தர்மன்..

பையில் துணிமணிகளை மடித்து அடுக்கிக் கொண்டிருந்தாலும் அவள் கண்கள் அடிக்கடி வீட்டை சுற்றி வட்டமிட்டன.

சின்ன வீடு ஆனாலும் எத்தனை உயிர்ப்போடு கொஞ்சும் குழந்தையாக தன்னோடு ஐக்கியமாகிவிட்டது.‌

சில விஷயங்கள் நம் நினைவுகளை விட்டு என்றுமே அகலாது தூங்கும்போது கூட கனவுகளாக அடிக்கடி விசிட் செய்து அடிமன நியாபகங்களை தூசு தட்டி எழுப்பி விடும்.

பள்ளி படிக்கையில் சுற்றுலா போன இடங்கள்.. அல்லது போக வரும் பகுதியில் அமைந்திருக்கும் வித்தியாசமான கட்டிடங்கள் என ஏதோ ஒன்று நினைவடுக்குகளில் ஏதோ ஒரு மூலையில் தேங்கி என்றோ ஒரு நாள் ஞாபகத்தில் வரும் போதெல்லாம் ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும்..

அப்படித்தான் இந்த இடமும்.. மிகச்சில நாட்களில் இந்த வீடு தன்னோடு இப்படி பழகிப் போகும் என்று அவள் நினைக்கவில்லை..

கட்டிடங்களுக்கு உயிர் இல்லையா யார் சொன்னது..?

வேதனையில் கலங்கி அழும்போது ஒரு இதமான அரவணைப்பை இங்கே உணர்ந்திருக்கிறாள்..

கோவிலுக்குள் அமைதியை உணர்வதை போல்.. இந்த நான்கு சுவற்றுக்குள்ளும் அவள் மனம் நிம்மதி அடைகிறது..

கடவுளின் சிலை இருக்கும் கர்ப்ப கிரகம் கோவில்..

தர்மன் வாழ்வதால் தான் இந்த வீடு இத்தனை அமைதியை தருகிறதா..?

அப்படியானால் இந்த வீட்டை தாண்டி தனக்குள் ஆழமாய் நிறைந்திருப்பவன் தர்மனா..? கடிவாளமற்ற குதிரையாக தன் எண்ணங்களின் ஓட்டத்தில் திடுக்கிட்டு போனாள் சுப்ரியா..

கையில் ஒரு கவரோடு உள்ளே வந்தான் தர்மன்..

இரவில் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்குள் நுழைந்தாலும் அவன் முகத்தில் வழக்கமாக பிரகாசிக்கும் ஏதோ ஒன்று.. இன்று மிஸ்ஸிங்..

மாடிப்படி ஏறும்போதே அந்த சோர்ந்த விழிகள் துருதுருவென்று ஏதோ ஒன்றை தேடும்.. இன்றோ அவன் கண்களில் சலிப்பு.. கோபம்..

"வீட்டை விட்டு துரத்தறதுன்னு முடிவு பண்ணியாச்சு.. அப்புறம் எதுக்கு இப்படி சிடுசிடுப்பு நாடகம்.. நல்லபடியா சிரிச்சுகிட்டே அனுப்பி வைக்க வேண்டியதுதானே.. நான் இல்லைனா சந்தோஷமா இருக்கலாமே.. செலவும் மிச்சம்.."

மனம் அவனைத் திட்டி தீர்த்துக் கொண்டிருக்க கோபத்தில் துணிகளை தாறுமாறாக உள்ளே அடுக்கி வைத்தாள்..

அவனும் ஏதும் பேசவில்லை முகம் இறுகிப் போயிருந்தது.. அவள் பக்கத்தில் அந்த கவரை வைத்தான்.

"நீங்க வாங்கி தந்த இந்த துணிமணிகளையெல்லாம் எடுத்துப் போகலாமா..?" கடுப்பான குரலில் அவள் கேட்க.. நின்று நிதானமாக அவளை பார்த்தவன்

"எடுத்துட்டு போறதும் வச்சுட்டு போறதும் உன்னோட இஷ்டம்.. ஒருவேளை எடுத்துட்டு போறதுன்னு முடிவு செஞ்சா இந்த அவரையும் சேர்த்து வச்சுக்க.." கடின குரலில் அவன் உரைத்து விட்டு செல்ல.. சுப்ரியாவின் மனம் உடைந்து போனது..

"இதென்ன பேச்சு.. உன்னை எடுத்துட்டு போ ன்னு சொல்லணும் இல்லனா வச்சுட்டு போனு சொல்லணும்.. இப்படி எதுலயும் பட்டுக்காம உன் இஷ்டம்ன்னு சொன்னா.. அவ்வளவு எரிச்சலா என் மேல..!" கண்கள் கரித்துக் கொண்டு வந்தது..

வேண்டா வெறுப்பாக அந்த பாலிதீன் கவரை திறந்து பார்க்க அதில் உடம்பு அளவுக்கேற்ற தளர்வான நான்கு காட்டன் நைட்டிகள்..

எரிச்சலை தாண்டி அவள் கண்களில் ஆச்சரியம்..

"நான் போய் இந்த டியூப் லைட்டை ஹவுஸ் ஓனர் வீட்ல பிக்ஸ் பண்ணிட்டு வரேன்.." என்று குச்சியாய் நீண்டிருந்த அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான் தர்மன்..

கதவு திறந்திருந்தது..

"அக்கா.." என்று குரல் கொடுக்க ஒரு தொள தொள நைட்டியும் மேல் துண்டுமாக வெளியே வந்தார் ராஜி..

"வா தர்மா உனக்காகத்தான் கதவை திறந்து வச்சேன்.." என்றவர் கோலமாவு டப்பாவும் துடைப்பமுமாக வெளியே சென்று விட டியூப் லைட் பெட்டியோடு உள்ளே சென்றான் தர்மன்..

அவனாகவே ஸ்டூல் போட்டு ஏறி பழைய நீள் விளக்கை கழட்டிவிட்டு புதுவிளக்கை மாட்டிக் கொண்டிருந்தான்..

வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து பட்டையாய் நாலு இழுப்பு இழுத்து நட்சத்திர கோலம் போட்டுவிட்டு வீட்டுக்குள் வந்தார் ராஜி..

"என்ன தர்மா லைட் பிக்ஸ் பண்ணிட்டியா..!"

"பண்ணிட்டுதானே இருக்கேன்.. பார்த்தா தெரியல.." அவனிடம் ஒரு அலட்சிய போக்கு..

"என்னடா இப்படி பேசுற.. காலையிலேயே என்ன ஆச்சு உனக்கு..!"

"ப்ச்..!" அவ்வளவுதான் அவன் பதிலாக இருந்தது.

லைட்டை சரியாக மாட்டி விட்டு "சுவிட்ச் போடுங்க" என்றான் சிடுசிடுப்பான குரலில்..

அவனை வித்தியாசமாக பார்த்துக் கொண்டே விளக்கை உயிர்ப்பித்தார் ராஜி..

பளீரென எரிந்தது நீள்விளக்கு. "அம்மாடியோ.. லைட் எரியுது.. ரெண்டு நாளா இந்த விளக்கை போட முடியாம ரூமே இருளடிச்சு போய் கிடந்தது.." அவர் நிம்மதியாக சிரிக்க உணர்வற்ற முகத்துடன் ஸ்டூலிலிருந்து கீழே இறங்கியவன் எடுத்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்துவிட்டு.. போய் வருகிறேன் என்று கூட சொல்லிக் கொள்ளாமல் வாசலை நோக்கி நடக்க..

"தர்மா இருடா காபி குடிச்சிட்டு போ..!" என்றார் ராஜீ..

"வேண்டாம்.."

"ஒரு நிமிஷம் நில்லு.. ஏன் எது கேட்டாலும் சிடுசிடுன்னு பதில் சொல்ற..? என்ன ஆச்சு உனக்கு.. என் மேல அப்படி என்ன கோவம்..!" வெளிப்படையாகவே கேட்டுவிட..

"உங்க மேல எனக்கென்ன கோபம் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.." தோள் குலுக்களுடன் எங்கோ பார்த்துக் கொண்டு பதில் சொன்னான் தர்மன்..

"சரி ஹாஸ்டல் போய் பாத்தியா..? என்ன ஆச்சு அவங்க என்ன சொன்னாங்க.." பேச்சை மாற்றினால் அவன் இறுக்க மனநிலை மாறும் என்று நினைத்தார்..

"எல்லாம் பார்த்தாச்சு.. இன்னைக்கு சாயந்திரமே அந்த பொண்ணு ஹாஸ்டலுக்கு போயிடுவா.. அப்புறம் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது" கடைசி வார்த்தைகளை வாய்க்குள் முனகியபடி அவன் சொன்ன பதில் கூட ஒட்டுதல் இல்லாமல் ஆர்வமற்று உதிர்ந்தது..

"ரொம்ப நல்லது.. நல்ல ஹாஸ்டல்டா.. இந்த மாதிரி வேற இடம் அந்த பொண்ணுக்கு கிடைக்காது.."

"வேற ஏதாவது தெரிஞ்சுக்கணுமா நான் வேலைக்கு கிளம்பனும்.. நேரமாச்சு.." சொல்லிக்கொண்டே அவர் முகத்தை கூட பார்க்காமல் மாடிப்படியேறினான்..

"என்ன ஆச்சு இந்த பையனுக்கு.. வந்த நாளிலிருந்து முகம் சுழிக்காம எவ்வளவோ வேலை செஞ்சு கொடுத்திருக்கான்.. இன்னைக்கு இவன் நடந்துக்கற விதமே சரியில்லையே.. ஏன் எது கேட்டாலும் இப்படி கோபப்படுறான்.." வாசலில் நின்று பாரா முகமாக மேலே ஏறியவனின் முதுகை வெறித்துக் கொண்டிருந்தார் ராஜி.

சுப்ரியாவிடம் கூட முகத்தை திருப்பிக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டு சென்று விட்டான்..

சுப்ரியாவிற்கு மனதே தாங்கவில்லை.. பிரியப் போகும் நேரத்தில் ஏன் இந்த மனக்கசப்பு.. புன்னகையோடு நாலு நல்ல வார்த்தைகள் சொல்லி விடை தந்து அனுப்பலாமே..! ஏன் இப்படி முகத்தை தூக்கி வைத்து கோபத்தை காட்ட வேண்டும்.. என் மீது அவ்வளவு வெறுப்பா..? நானா ஹாஸ்டல் வேணும்னு கேட்டேன் வேலை மெனக்கெட்டு ஹாஸ்டல் பாத்துட்டு வந்து பெட்டிய கட்டுன்னு சொன்னது இவர் தானே.. எல்லாத்தையும் செஞ்சுட்டு எதுக்காக முகத்தை தூக்கி வச்சுக்கணும்.. ஒருவேளை செலவுக்கு மேல செலவு வைக்கிறதால வெளியே சொல்ல முடியாம இப்படி கோபத்தை காட்டறாரோ..! நிதானமில்லாத மனம் நாலையும் யோசித்து குழம்பிப்போனது..

என்ன ஆச்சு இந்த தர்மனுக்கு..! என முழு மருத்துவமனையும் கூடி பேசுமளவிற்கு அன்று அவன் நடவடிக்கை இருந்தது..

"தம்பி ஸ்கேன் ரூம் இங்க இருக்கு நீ எங்க என்னை நேரா அழைச்சிட்டு போற..!" ஸ்ட்ரக்சரில் படுத்திருந்த வயதான பெண்மணி வாய் திறந்து கேட்கும் அளவிற்கு எங்கோ நினைவுகளில் மூழ்கி பாட்டியை ஆபரேஷன் தியேட்டர் நோக்கி தள்ளி சென்று கொண்டிருந்தான்..

"பில் கவுண்டர்ல போய் ரெஜிஸ்டர் எடுத்துட்டு வர சொன்னா காபி கொண்டுவர்ற.." இதய மருத்துவர் ரகுநாதன் திருதிருவென விழித்தார்..

"கூப்பிட்டீங்களா டாக்டர்.." காயத்ரியிடம் போய் நிற்க நான் கூப்பிடவே இல்லையே என்று அவனை ஆழ்ந்து பார்த்தார் அவர்..

"வரச் சொல்லி எவ்வளவு நேரம் ஆச்சு இந்த தர்மன் எங்கே போனான்.." என ஒரு கட்டு ஃபைலை வைத்துக்கொண்டு அவனுக்காக காத்திருந்தார் வேதா..

"தர்மா உனக்கு உடம்பு சரி இல்லையா..‌ பேசாம இன்னிக்கு ஒரு நாள் லீவு எடுத்துக்கோயேன்.." சீஃப் டாக்டர் தீனதயாளன் அவனை அழைத்து விசாரித்தார்.

"இல்ல டாக்டர் நான் நல்லாத்தான் இருக்கேன்.. லீவ் வேண்டாம்.. நான் வேலை பார்க்கறேன்.." என்றவனை கூர்மையாக நோக்கினார்..

"நீ பார்க்க ரொம்ப டிஸ்டர்ப்டா தெரியற.. மனசும் உடம்பும் ஒரே இடத்துல நிலையா இருக்கணும் அப்பதான் ஒழுங்கா வேலை செய்ய முடியும்.. இது ஹாஸ்பிடல்.. ஏற்கனவே கவன குறைவாக ஒரு முறை செஞ்ச தப்பையே இன்னும் சரி செய்ய முடியல. நாம செய்ற சின்ன தப்பும் எப்படிப்பட்ட விபரீதத்தில் போய் முடியும் நான் சொல்லி நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை.. நீ பொறுப்பானவன் சொன்னா புரிஞ்சுக்குவ.." நாசுக்காக எச்சரித்து அனுப்ப.. காலையிலிருந்து தான் நடந்து கொள்ளும் பொறுப்பேற்ற முறை உள்ளுக்குள் சம்பட்டியால் அடித்து உண்மையை புரிய வைக்க.. மீண்டும் ஒரு அலட்சியத்தால் வேறு எவரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற உறுதியோடு தன் பிழை உணர்ந்து மீண்டும் கவனத்தோடு வேலை செய்ய ஆரம்பித்தான் தர்மன்..

மாலையில் வேலை முடிந்த பிறகும் வீட்டுக்கு போகாமல் மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்திருந்தான்..

"என்ன தர்மா ஷிப்ட் முடிஞ்சதில்ல வீட்டுக்கு போகலையா.." செக்யூரிட்டி வந்து கேட்ட பிறகுதான் அங்கிருந்து நகர்ந்தான்.. பைக்கில் வெகு நேரம் எங்கெங்கோ சுற்றிவிட்டு இருள் கவ்விய பிறகு வீடு வந்து சேர.. துணிப்பையோடு கட்டிலில் அமர்ந்து அவனுக்காக காத்திருந்த சுப்ரியா எழுந்து நின்றாள்..

அவள் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தலை தாழ்ந்திருந்தவன் ஒரு முடிவோடு நிமிர்ந்து தீர்க்கமாக அவளை பார்த்தான்..

"ஹாஸ்டல் போகணும்னு சொன்னீங்க..! போன் அடிச்சாலும் எடுக்கல இவ்வளவு லேட்டா வர்றீங்களே இதுக்கு அப்புறம் எப்படி..?" சுப்ரியா தயக்கத்தோடு கேட்க அவள் வார்த்தைகளில் இடைமறித்து

"சுப்பு.. உனக்கு கண்டிப்பா ஹாஸ்டல் போய்தான் ஆகனுமா..?" என்றான் படபடப்போடு..

கண்கள் சுருக்கி வித்தியாசமாக பார்த்தாள் சுப்ரியா..

"ஹாஸ்டல் போகணும்னு நான் சொல்லல.. நீங்க தான் என்னை கேக்காம யார் யார்கிட்டயோ விசாரிச்சு ஹாஸ்டல் போய் பாத்துட்டு கடைசியா என்கிட்ட வந்து போறியான்னு கேட்டீங்க."

"உனக்கு விருப்பமில்லைனா நீ போக மாட்டேன்னு சொல்லி இருக்கலாமே..!"

"இது உங்க வீடு.. நீங்களே எல்லாம் ஏற்பாட்டையும் பண்ணிட்டு வந்து போக சொல்லும் போது நான் என்ன சொல்ல முடியும்.."

"ஹவுஸ் ஓனரோட தொல்லை.. அவங்கதான் தெரிஞ்சவங்க நம்பர் கொடுத்து ஹாஸ்டல் பத்தி விசாரின்னு சொன்னாங்க.. வேற வழியில்லாம விசாரிச்சேன்.. இப்படி ஒரு நல்ல ஹாஸ்டல் இருக்குன்னு உன்கிட்ட சொல்ல வேண்டியது என் கடமை.. உனக்கு இங்கே தங்கறதுல விருப்பம் இருக்கோ இல்லையோ தெரியல.. நாளைக்கு பின்னாடி நான் தான் உன்னை கட்டாயப்படுத்தி இங்க தங்க சொன்னதா வந்துட கூடாது இல்லையா..? உன் விருப்பத்தை தெரிஞ்சுக்க நினைச்சேன்.. போக இஷ்டம் இல்லைன்னு சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன்.. ஆனா நீதான் பட்டுன்னு போறேன்னு சொல்லிட்டியே..?"

சுப்ரியாவின் கண்கள் கனிந்து நெஞ்சம் உருகியது..

"இப்ப நீங்க சொல்லுங்க நான் போகணுமா வேண்டாமா..!"

எச்சில் கூட்டி விழுங்கியபடி அவளை ஆழ்ந்து பார்த்தான்..

"உனக்கு போக இஷ்டம் இல்லைனா போகாத..!"

"நான் உங்களுக்கு தொல்லையா இருக்க விரும்பல.."

"நான் என்னைக்குமே உன்னை தொல்லையா நினைச்சதில்ல நீ இங்க இருந்தா நான் சந்தோஷப்படுவேன்.. அப்புறம் உன் இஷ்டம்.." கொடியில் காயப்பட்டிருந்த துண்டை எடுத்துக்கொண்டு அவன் வெளியேற குறுக்கே வந்து வழிமறித்தாள் சுப்ரியா..

"இப்ப கூட பட்டுப்படாமலும் தான் பேசறீங்க.. போகாதே.. இங்கேயே இருன்னு ஒரு வார்த்தை சொல்லலாமில்ல.."

"உன்னை கட்டாயப்படுத்தி இங்கே இருக்க சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கு சுப்பு.. நீ விருப்பப்பட்டு என்கூட இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.. இதைவிட வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கற..?"

"ஹவுஸ் ஓனர்..? அவங்கள எப்படி சமாளிப்பீங்க.."

"பாத்துக்கலாம்.. ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்.. ஆனா என்ன சூழ்நிலை வந்தாலும் நீ இங்கருந்து போகாதயேன்.. ப்ளீஸ்.. அட்லீஸ்ட் குழந்தை பிறக்கற வரைக்குமாவது இங்க இரு.. கூடவே இருந்துட்டு திடீர்னு கிளம்பி போறேன்னு சொன்னா மனசெல்லாம் என்னமோ பண்ணுது. காலையிலிருந்து வேலையே ஓடல தெரியுமா. சாப்பிடாம பட்டினியா கூட பல நாள் இருந்திருக்கேன்.. இப்படி ஒரு மோசமான நாளை என் வாழ்க்கையில் நான் கடந்து வந்ததே இல்லை.."

சுப்ரியாவின் கண்கள் அவன் பேச்சில் படபடத்தன..

"நானா போறேன்னு சொன்னேன்.. நீங்க தான் என்னை விரட்ட பாக்கறீங்க..?" உதட்டை சுழித்தாள்..

அவன் மென்மையாக சிரித்தான். "விரட்டுறதா..? உன்னை வீட்டை விட்டு அனுப்பவே இஷ்டம் இல்லைங்கறேன்.. உனக்கு இங்க தங்க விருப்பமில்லாம வெளியே போகணும்னு நினைச்சாலும் உன் கைய பிடிச்சு இங்கிருந்து போகாதன்னு சொல்லணும்னு தோணும். ஆனா உன் எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் நாம் மதிப்பு கொடுக்கணும் இல்லையா..?"

"இப்ப தெரிஞ்சுகிட்டீங்களா இனிமே என்னை தொந்தரவு பண்ண மாட்டீங்களே..!" அவள் கண்களை உருட்டி அதட்டுவது போல் கேட்க.. அந்தப் பார்வைக்கு அடிபணிந்தவனாக மாட்டேன் என தலையசைத்தான்.

சுப்ரியா சிரிக்க அவனும் சேர்ந்து சேர்ந்து சிரித்தான்..

"சரி போய் குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கறேன்.. சேர்ந்து சாப்பிடலாம்.. டென்ஷன்ல இன்னிக்கு முழுக்க சரியாக சாப்பிடலை.. ஒரே பசி"

"எவ்வளவு டென்ஷன் கவலை இருந்தாலும் வயத்த காயப்படாதே, உன்னை நம்பி உனக்குள்ள இன்னொரு ஜீவன் இருக்குன்னு எத்தனை வாட்டி சொல்றது.. ஏன் இந்த விஷயத்துல மட்டும் என் பேச்சை மதிக்கவே மாட்டேங்கற நீ.." அவன் கண்களில் சிறிதாய் கோபம் உருவெடுக்க..

"ஐயோ பேசிகிட்டே நிக்கறீங்களே.." இடுப்பில் கை வைத்து சலித்தாள் சுப்ரியா..

"இதோ அஞ்சே நிமிஷம்.. குளிச்சிட்டு வந்துடறேன் நீ எல்லாத்தையும் எடுத்து வை.." மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி சந்தோஷத் துள்ளலுடன் நடந்தான் தர்மன்..

தொடரும்..
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
114
அப்பாடா இரண்டு பேரும் மனசில உள்ளத சொல்லிட்டாங்கப்பா. 👍👍👍👍👍👍

இந்த எபி படிக்கிற வரைக்கும் எனக்கும் மண்டை காஞ்சிருச்சு. தர்மா ராஜிம்மா கிட்ட உன்னோட கோபம் வேற லெவல். 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪 அந்த அம்மாவே யோசிக்கிற அளவுக்கு பண்ணிட்ட.

இரண்டு பேரும் ஒன்னா இருந்து நிறைய புரிஞ்சுக்கனும். ஏதாவது ஏடாகூடா ட்விஸ்ட் வைக்குமே நம்ம சனா டியர். 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Top