அம்மா..! கத்திக்கொண்டே ஓடி வந்தான் பொய்கை வடிவேலன்..
சுகாதார மையத்தின் பின்பக்கம் புல்வெளிகளை சுத்தம் செய்து அதன் நீள அகலத்தை அளந்து கணக்கெடுத்த அதிகாரிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த கண்ணகி குரல் கேட்ட திசையில் திரும்பி தன்னை நோக்கி ஓடி வரும் மகனை கண்டு வியப்பிலும் உவகையிலும் விழி விரித்து சிலையாக நின்றாள்..
நெடுநாள் கழித்து பெற்ற தாயிடம் பேச வந்த குஷியில் கீழே முளைத்து நின்ற கற்கள்.. முட்கள் மேட்டுப்பாதை எதையும் கவனிக்கவில்லை பொய்கை வடிவேலன்..
இரு கைகளை விரித்தபடி அவன் ஓடி வந்த தோரணையில் கட்டி வைத்திருந்த வீம்பு கோட்டைகள் மொத்தமாக சரிந்து உள்ளுக்குள் ஏதோ உருகியது..
"வடிவேலா..!" குரலும் கூட நடுங்கி போய்விட ஐந்தே வினாடிகளில் கடந்து வரும் தூரத்தை கூட பொறுக்க முடியாதவளாய்.. அந்த மேடு பள்ளங்களில் வேகமாக ஓடினாள் கண்ணகி..
நெருங்கி விடும் தூரத்தில் கீழே விழப் போன மகனை தாங்கி பிடித்து இறுக அணைத்துக் கொண்டாள் அவள்..
விளக்கங்கள் வேண்டாம் மன்னிப்பு வேண்டாம் அவன் பேசுவதை கூட கேட்க வேண்டாம்.. கண் கலங்கும் போது தவறி விழுந்த கண்ணீர் துளிகளை உள்ளுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாளே அந்த ஏக்கத்தை முதலில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.. மகனை ஆசை தீர தழுவி முத்தமிட்டு கொஞ்சி.. அவன் முகத்தை இரண்டு நிமிடங்களாவது இமை சிமிட்டாமல் பார்த்து மனதுக்குள் நிரப்பி கொள்ள வேண்டும்.. எத்தனை நாளாயிற்று மகனை மடியில் அமர வைத்து சோறூட்டி.. பால் வாசம் வீசும் அவன் கன்னத்தோடு கன்னம் இழைந்து..
அன்னையின் கழுத்தை கட்டிக்கொண்டு அவள் முத்தமிடும் போதெல்லாம் இரண்டு கன்னங்களையும் மாறி மாறி காட்டி கன்னம் குழிய சிரித்தான் பொய்கை வடிவேலன்..
அவளுக்குள் கனத்துப் போயிருக்கும் அதே பாசம் அவள் பெற்ற மகனுக்குள்ளும் உண்டல்லவா..!
அம்மா கிட்ட என்னைக்காவது பேசட்டுமா அப்பா என்று நாள் தவறாத நச்சரிப்பும் அவன் வேண்டாம் என்று சொல்லும்போது வாடிய முகத்தோடு தலை தாழ்ந்தபடி பள்ளிக்கு செல்லும் சோக சரித்திரமும் கண்ணகிக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை..
ஆசை தீர பிள்ளையை அணைத்துக் கொஞ்சிய பிறகு மீண்டும் முகாமிட்டுக்கொண்டது அந்த சின்னஞ்சிறு கோபம்..
"இப்ப மட்டும் அம்மா மேல என்ன திடீர் அக்கற..! என்கிட்ட பேச சொல்லி உன் அப்பா அனுமதி குடுத்துட்டாரா என்ன.." கண்ணபிரான் மீது நம்பிக்கை இல்லை.. விளையாட்டாக தான் கேட்டாள்..
"அம்மா.. அப்பா தான் உங்ககிட்ட பேச சொன்னாரு.."
"விளையாடாதே வடிவேலா..!" அவன் இரு கன்னங்களை லேசாக கிள்ளி செல்லமாக உலுக்கினாள்..
"உண்மையைத்தான் சொல்லுறேன்..! அம்மா கிட்ட இன்னைக்காவது பேசட்டுமா.. ரொம்ப ஆசையா இருக்குப்பா.. அப்படின்னு அப்பாவோட கையை பிடிச்சுகிட்டு கெஞ்சி கேட்டேன்னா..! அப்பா சரி போய் பேசிக்கோன்னு சொல்லிட்டார்.." என்றதும் ஏமாற்றத்தில் வடிந்து போனது அவள் முகம்..
"அப்ப நீயா வந்து என்கிட்ட பேசல.. உன் அப்பா சொன்ன பிறகு தான் என்கிட்ட ஓடி வந்துருக்க..!" சட்டென மாறிப்போன தாயின் முகம் கண்டு அவசரமாக மறுத்தான் வடிவேலன்..
"உங்க கிட்ட பேசணும்னு ஆசையா இருந்ததால தானே தினமும் அப்பாவை தொந்தரவு பண்ணி இன்னைக்கு அனுமதி வாங்கினேன்.."
"அப்பா சொல்லாம ஐயா என்கிட்ட பேச மாட்டீங்களோ.. சரிதான்.. அப்பா மேல அம்புட்டு மரியாதை.. ஆனா அம்மா மேல கொஞ்சம் கூட பாசமே இல்லையே..!" பொய் கோபத்தோடு கீழ்க்கண்ணால் தன் மகனை முறைத்தாள்..
"அப்பாவுக்கு மரியாதை தரணும் அவர் பேச்சைக் கேட்கணும்னு நீங்கதானே சொல்லித் தந்தீங்க.. உங்க மேல ரொம்ப பாசம் இருக்குது.. அதனால அப்பாகிட்ட விடாம தொந்தரவு பண்ணி உங்க கிட்ட பேசணும்னு அனுமதி வாங்கிட்டு ஓடி வந்தேன்" என்ற மகனை ஆரத் தழுவி கொண்டாள் கண்ணகி..
ஆனாலும் மனதுக்குள் அதிசயமாக இருக்கிறதே..! மரண பயம் இறுமாப்போடு எடுத்த தீர்மானங்களை ஒவ்வொன்றாய் உடைத்துக் தள்ளுகிறதோ..! சமீபமாக சில நாட்களாக கண்ணபிரானிடம் தென்படும் மாற்றங்கள் பளிச் பளிச்சன சங்கிலி தொலைக்காட்சிகளாக அவள் கண் முன் வந்து போயின..
"அப்பா மறுபடியும் பேசக்கூடாதுன்னு சொன்னா நீ என்கிட்ட பேசவே மாட்டே.. அப்படித்தானே..!" கண்ணகி சோகச் சாயலோடு கேட்க இல்லையென தலையசைத்தான் வடிவேலன்..
"இனி அப்பா அப்படி சொல்லவே மாட்டாரு..!"
"ஏனாம்..!"
"நீங்க ரொம்ப நல்லவங்களாம்.." குழந்தையின் பேச்சில் கண்களை சுருக்கினாள் கண்ணகி..
வடிவேலன் தொடர்ந்தான்..
"நான் தான் ரொம்ப கெட்டவன்.. இனி உன் அம்மா என்ன சொல்லுறாங்களோ அதை மட்டும்தான் நீ கேக்கணும்.. உன் அம்மா எது செஞ்சாலும் அது சரியா இருக்கும்னு நீ நம்பனும்.. நானே வந்து அம்மா தப்புன்னு சொன்னா கூட நீ என் பேச்சைக் கேட்கவே கூடாதுன்னு அப்பாவே சொல்லிட்டார்.." குதுகலித்தான் அவன்..
இதைக் கேட்டு கண்ணகி ஒன்றும் பெரிதாக மனமகிழ்ந்து ஆனந்த கண்ணீர் விடவில்லை.. இதழ் கீற்றாக வளைந்து கொண்டது.. அது விரக்தி சிரிப்பா.. சந்தோஷ புன்னகையா..? என்னை ஏமாற்றவே முடியாது என்ற கர்வத்தின் வெளிப்பாடா.. அவளுக்கே வெளிச்சம்..
அரை மணி நேர வேலைகளுக்கு விடுமுறை விட்டு மகனை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த கடைக்கு சென்று அவன் கேட்டதையெல்லாம் வாங்கி தந்து ஆசை தீர பேசிக் கொண்டிருந்தாள் கண்ணகி..
அந்த குட்டி பையனுக்கு தாயிடம் பேச அத்தனை விஷயங்கள் இருந்தது போலும்..
பள்ளியில் நடந்த பென்சில் சண்டையில் துவங்கி உறங்கும்போது கண்ட கலர் பலூன் கனவுகள் வரை அத்தனை விஷயத்தையும் மூச்சு விடாமல் ஒப்பித்த பிறகே ஓய்ந்து இளைப்பாறினான்..
"அம்மா உங்க போன் குடுங்களேன்.."
"எதுக்கு..?"
"குடுங்கம்மா..!"
இத்தனை நாட்களாக அலைபேசி என்பதையே அறியாதவள் ஒரு வாரத்திற்கு முன்புதான் வேலைகளை முடிக்க கட்டாயம் போன் தேவை என்று கண்ணபிரானிடம் கேட்டு புத்தம் புது செல்போனை வாங்கி இருந்தாள்..
மனைவி கேட்டவுடன் ஒரு முறைப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் புது அலைபேசியை வரவழைத்து தந்திருந்தான் கண்ணபிரான்.. இப்போது அந்த அலைபேசி தான் அவள் கைகளில் ஒயிலாக விளையாடிக் கொண்டிருக்கிறது..
இணையத்தின் மூலம் எத்தனை தகவல்களை தெரிந்து கொண்டு மருத்துவமனையை விஸ்தாரப்படுத்த வந்திருக்கும் அதிகாரிகளுக்கே பாடம் எடுக்கிறாளே இப்போது..
புதுப்புது புத்தகங்களை ஆர்டர் செய்து வாங்கி படிக்கிறாள்..
முதல் இரண்டு புத்தகங்கள் படித்தவுடன் படிக்கும் ஆர்வம் கூடி போய்விட.. புத்தகங்களின் பெயர்களை எழுதிக் கொடுத்து வேலையாட்களை பக்கத்து ஊர்களுக்கு அனுப்பி கட்டு கட்டாக நூல்களை வாங்கி வந்து அலமாரியில் அடுக்கி வைத்துக் கொள்கிறாள்..
இப்போது அவள் அலமாரியில் தன்னம்பிக்கை புத்தகங்கள்.. கவிதை புத்தகங்கள்.. ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் புத்தகங்கள்.. கதை புத்தகங்கள் என ரகவாரியாக இடம் பிடித்திருக்கின்றன..
பொய்கை வடிவேலன் தாயின் செல்போனை வாங்கி இருவரையும் சேர்த்து வைத்து ஒரு செல்பி எடுத்தான்..
"இத அப்பாவுக்கு எப்படி அனுப்புறது..!" கையில் போனை வைத்துக் கொண்டே தாயிடம் சந்தேகம் கேட்க..
"எதுக்கு உன் அப்பாவுக்கு அனுப்பனும்.." முகம் சுருங்கினாள் கண்ணகி..
"அப்பாதான் அனுப்ப சொன்னாரு.. சொல்லுங்கம்மா.." அவன் நிற்காமல் பரபரக்க.. வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியாக அந்த படத்தை எப்படி அனுப்புவது என்று சொல்லிக் கொடுத்தாள் கண்ணகி..
பளிச்சென ஒளிர்ந்த அலைபேசியின் பக்கம் திரும்பி பார்த்தான் கண்ணபிரான்..
இரண்டு கரிய ஆங்கில வரிகள் குறுஞ்செய்தி வந்ததை தெரிவித்திருக்க.. அலைபேசியை எடுத்து அந்த செய்தியை திறந்து பார்த்தான்..
சிரித்தபடி அவன் மனைவியும் மகனும்..!
படத்தை பெரிதாக்கி கண்ணகியின் முகத்தை மென்மையாக வருடி கொடுத்து புன்னகைத்தான் கண்ணபிரான்..
"என்ன விளையாடுறீங்களா அங்க ஏகப்பட்ட வேலை இருக்குது..! நான் போகாமல் எதுவும் முடியாது..?"
கனகவல்லி ஒரு ஓரமாக நின்று அழுது கொண்டிருக்க.. கத்தியபடி வீட்டை விட்டு புறப்பட்டவனை தடுத்து நிறுத்தினாள் சஞ்சனா..
"இந்த மாதிரி நேரத்துல நீங்க ஓய்வெடுக்கணும் தேவரா.. வேலைகளை அப்புறம் பாத்துக்கலாம்.. இல்லனா பொறுப்பான யார்கிட்டயாவது ஒப்படைங்க.. இதை விட்டா இப்போதைக்கு வேற வழி இல்ல.."
"சஞ்சனா நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்.. வீட்ல யார்கிட்டயும் இந்த விஷயம் பத்தி சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கி இருந்தேனா இல்லையா..! ஏன் இப்படி செஞ்சீங்க.." தேவராயனின் முகம் குளிர்காலத்து வறட்சியை காட்டியது.. உதடுகள் உலர்ந்த போயிருக்க கண்களோ மஞ்சள் குளித்து.. நோய் அறிகுறிகளை வெளிப்படையாக காட்டத் துவங்கி இருந்தன..
"ஒரு டாக்டரா இந்த விஷயத்தை நான் உங்க வீட்டுல மறைக்கவே முடியாது தேவரா..! ப்ளீஸ் கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணுங்க.."
"டாக்டர் உங்களுக்கு புரியல.. எனக்கு ஒண்ணும் இல்ல.. வீட்ல படுத்துட்டே இருந்தா தான் நோய் அதிகமாகும்.. எதையெதையோ யோசிச்சு.." என்றவன் அத்தோடு நிறுத்திவிட்டு.. "என்னால வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்க முடியாது டாக்டர்.." என்றான் உறுதியான குரலில்..
"நீ எதுக்காக இப்படி கடந்து அலையுறேன்னு எனக்கு தெரியும்டா..! டாக்டரோட சேர்ந்து கைகோர்த்துக்கிட்டு அங்கனயும் இங்கனயும் சுத்துற மாதிரி உன் பொண்டாட்டிய சைட் அடிக்கதானே இந்த பாடு..!" இடுப்பில் கை வைத்து நின்று கேட்டு அழகியை முறைத்தான் அவன்..
"முறைக்காத..! நீ பண்ற கோக்கு மாக்கு வேலையெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா..! உனக்குள்ள இருக்கிற அதே தவிப்பும் காதலும் அவளுக்கு இருந்தா உன்னைய எங்கே வந்து பார்க்கட்டும்.."
"கொலைவெறியில இருக்கேன் அப்பத்தா.. ஓடிரு"
"இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. அட உள்ள போங்கறேன்..! உனக்கு வேணா உன் பொண்டாட்டி முக்கியமா இருக்கலாம் ஆனா எங்களுக்கு நீ தான் முக்கியம்.. நீ இல்லனா நாங்க இல்ல.." அழகியின் கண்களில் நீர் தழும்பி கொண்டு வந்தது..
அவஸ்தையாக அப்பத்தாவை பார்த்தபடி வீட்டுக்குள் செல்ல முடியாமல் அங்கேயே நின்றிருந்த நேரத்தில்.. ரிதமாய் கேட்ட கொலுசு சத்தம் அவன் கவனத்தை இருந்தது..
பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்து நின்றிருந்தவன் நிமிர்ந்து பார்த்தான்..
அவன் எதிரே வந்து நின்றிருந்தாள் வஞ்சி..
"டேய் தேவரா..! உன் பொண்டாட்டி வந்துட்டாடா..! இனியாவது அங்கே இங்கேயும் வெயில்ல சுத்தாம அக்கடான்னு வீட்டுல இருடா..! கண்ணெல்லாம் மஞ்ச பூத்து.. என் நெஞ்செல்லாம் பதறுதுடா.." அழகி குரல் தழுதழுத்து கதறினாள்..
எதிலும் கருத்தில்லாமல் தன் கண்முன்னே நின்றிருந்தவளை உருத்து விழித்தவன் அங்கிருந்து மாடியேறி தன்னறைக்கு சென்றிருந்தான்..
கனகவல்லி ஒரு பக்கம் அழுது கொண்டிருக்க அழகியோ இன்னொரு பக்கம் தலை தாழ்ந்து நின்றிருந்தாள்..
"இனி உன் புருஷன நீயே பாத்துக்கோ வஞ்சி..!" சஞ்சனா சொன்னதும் ஈரம் காய்ந்த விழிகளுடன் அவளை கடந்து வேகமாக மாடியேறி சென்றிருந்தாள் வஞ்சிக் கொடி..
முன்னேறாமல் முரண்டு பிடித்த காரை பிடிவாதமாக இயக்க முயன்று கொண்டிருந்தார் ஓட்டுநர்..
"என்னாச்சு அண்ணே..!" என்றாள் கண்ணகி..
வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள்..
"தெரியலமா..! எஞ்சின் சூடாகிடுச்சு போலிருக்கு.. நான் என்னன்னு பாக்கறேன்.." அவர் இறங்கினார்..
"சரிண்ணா.. நீங்க என்னன்னு பாத்துட்டு வண்டியை சரி பண்ணி வீட்டுக்கு கொண்டு வந்துடுங்க.. நடந்து போறேன்.."
"ஐயோ ஒரு பத்து நிமிஷம் நில்லுங்கம்மா சரி பண்ணிடறேன்..!"
"பரவாயில்லை.. பக்கத்துலதான வீடு.. நான் நடந்தே போறேன்.." என்றவள் அவர் பதிலுக்கு காத்திருக்காமல் திரும்பி நடக்க.. ஐந்து நிமிட நடைக்கு பின் அவர் முன்னால் எதிர்ப்பட்டான் பசுபதி..
"என்ன கண்ணகி சௌக்கியமா இருக்கியா..?" வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அவள் முன்பு எகத்தளமாக நின்றான்..
கண்ணகி கலங்கவில்லை பயப்படவில்லை.. கூர்மையான கண்களின் மூலம் தகிக்கும் கனல் பார்வையை அவன் மீது வீசியிருந்தாள்..
"என்னென்னமோ கேள்விப்பட்டேனே.. உன் புருஷனுக்கு பதில் எல்லா வேலையும் நீ தான் செய்யறியாம்.. பொம்பளைய பொழப்புக்கு அனுப்பிட்டு பொட்டையாட்டம் வீட்ல உட்கார்ந்து தூங்கறானா அந்த சேர்மன்.. ஒழுங்கா வேலை செய்ய துப்பில்லாட்டி எதுக்காக எலக்சன்ல நிக்கணும்.. பிச்சை கேட்டு ஓட்டு வாங்கணும்.. அதான் மக்களுக்கு சேவை செய்ய நாங்க இருக்கோம்ல.. சரி அத விடு.. நம்ம விஷயத்துக்கு வருவோம்.. வீட்டை விட்டு வெளியே வந்தாச்சு.. இனி அடுத்து வசதியும் வாலிபமுமான ஆம்பளையா பார்த்து வாட்டமா ஒதுங்க வேண்டியதுதானே.." தொங்கு மீசையை நீவி விட்டபடி வக்கிரமாக புருவங்களை உயர்த்திய வேளை.. மூக்கில் ஒரு குத்து விழுந்தது..
என்ன நடந்தது என்று யூகிக்கும் முன் ரத்தம் கொப்பளித்த மூக்கை தொட்டு பார்த்தவன்.. அதன் பிறகு தான் எதிரே நின்ற ஆளை கவனித்தான்..
வேட்டியை மடித்து கட்டிய படி கண்ணபிரான்..!
பலகீனமாக கட்டிலுக்குள் அடங்கி இருந்தவன்.. இன்று அதற்கு நேர் மாறாக ஆக்ரோஷமாக எதிரே நின்றிருந்தவனை வழக்கமான வீரத்தோடு அடித்து துவைத்திருக்க.. கண்ணபிரான் பிரசன்னத்தை எதிர்பார்த்திராத பசுபதி பின்னங்கால் பிடரியிலடிக்க அங்கிருந்து ஓடியிருந்தான்..
அவன் சென்ற அடுத்த கணமே முதிர்ந்த கிழவன் யாரோ உடம்புக்குள் ஊடுருவியதை போல் தளர்ந்து வளைந்து தடுமாறி அங்கிருந்த கல்லின் மீது அமர்ந்தான் கண்ணபிரான்.. நெஞ்சை குமட்டியது..
அவன் அருகே வந்து நின்றாள் கண்ணகி..
"கோபம் என் மேலயா இல்ல அவன் மேலயா..?"
கேள்வி நக்கலாக வந்து விழுந்தது..
"என் சக்திக்கு மீறி அவனோட சண்டை போட்டு அடிச்சு விரட்டி இருக்கேன்.. இப்பவும் எம்மனசு உனக்கு புரியலைன்னா நான் விளக்கி சொல்லியும் எந்த பிரயோஜனமும் இல்ல..!" என்றவனை தோளில் கை கொடுத்து தூக்கினாள் கண்ணகி..
"வாங்க போகலாம்..!" கை தாங்கலாக அவனை அணைத்துக் கொண்டு கண்ணகி நடக்க.. நல்ல நேரமாக அந்தப் பாதையில் அவள் வந்த கார் வந்து நின்றது..
இருவருமாக பின் இருக்கையில் ஏறிக்கொண்டனர்..
கண்கள் இருட்டிக் கொண்டு வர கண்ணகியின் தோளில் சாய்ந்தான் கண்ணபிரான்..
தொடரும்..