கண்ணன் விலாஸ்..
செட்டிநாடு அரண்மனை போல் மிகப்பெரிய வீடு.. அத்தனை தூண்களையும் ஜன்னல்களையும் 10 பேராக சேர்ந்து துடைத்து எடுத்தாலும் வேலை முடிய முழுதாக ஒரு வாரம் பிடிக்கும்.. பூர்வீக வீடு பூர்வீக சொத்து.. என அந்த ஊரிலேயே கொடிகட்டி வாழும் பணக்கார குடும்பம் அது..
அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை கண்ணபிரான்.. அந்த ஊரின் சேர்மன்..
அந்த கால செட்டிநாடு வீடுகளின் சிறப்பம்சமான மழை வெயிலை நடு வீட்டினுள்ளே அனுமதிக்கும் முற்றத்தின் நடுவே 10 பேருக்கு மத்தியில் நடுநாயகமாக.. திமிராக தோரணையும் தெனாவட்டான பார்வையுடன் அமர்ந்திருக்கிறானே இவன்தான் கண்ணபிரான்..
கஞ்சி போட்ட வெடவெடப்பான வெண்ணிற சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து நெற்றியில் கீற்றாக குங்கும பொட்டோடு அமர்ந்திருக்கும் இவன் பார்ப்பதற்கு நல்லவன் போல் தெரிந்தாலும்.. அக்மார்க் அயோக்கியன்.. தன் சுயநலத்திற்காக தர்மங்களை மீறி எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவன் .. எதிலும் தோற்றுப் போகக்கூடாது என்ற பிடிவாதம் கொண்டவன்..
35 வயதிற்கு மிகாமல் கின்னென்று உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவனுக்கு வெண்ணிற சட்டை பாந்தமாக பொருந்தி கூடுதல் வசீகரத்துடன் எடுத்துக்காட்டியது..
துர்குணங்கள் கொண்ட சாத்தான் கூட அழகாகத்தான் இருக்குமாம்.. அதுபோலத்தான் இவனும்..
குடும்ப கவுரவத்தை இழுத்து பிடிக்க கொலை செய்யவும் தயங்க மாட்டான்.. ஒரே ஒரு நல்ல குணம் உண்டெனில் அதை தங்கை வஞ்சிக் கொடி மீது அவன் வைத்திருக்கும் கண்மூடித்தனமான பாசம் மட்டுமே..
இரு விரல்களை தேய்த்தபடி யோசனையாக அமர்ந்திருந்தான் கண்ணபிரான்..
தூணுக்கு மறைவில் நின்று கொண்டிருந்தாள் வஞ்சிக்கொடி..
பொதுவாக இதுபோன்ற அரசியல் சம்பந்தப்பட்ட பேச்சுகளில் அவள் பெரிதாக அக்கறை கொள்வதில்லை..
ஆனால் இன்று அவர்கள் யாரைப் பற்றி தீவிரமாக கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்களோ அவன் வஞ்சிக் கொடியின் வாழ்க்கையில் முக்கியமான நபர்..
கண்களில் கலக்கமும் நெஞ்சில் படபடப்புமாக.. அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..
"எவ்வளவோ கேட்டு பாத்துட்டேன் தம்பி.. முடியவே முடியாதுன்னு மறுத்து சொல்லிட்டாங்க..!" என்றார் வட்டமாக அமர்ந்திருந்த அந்த 10 பேரில் ஒருவர்..
"எப்படி சம்மதிப்பாங்க..! விளைச்சலுக்கு தகுந்த கூலி.. வெயில் காலத்துல வறட்சியில பயிர் வாடி போகாமல் இருக்க.. நீரோட்டத்துக்கு கிணறெடுத்து எக்காலத்துலயும் தண்ணி கிடைக்க ஏற்பாடு செஞ்சு வச்சுருக்காப்புடி.. மழைக்காலத்துல பயிர் அழுகி விளைச்சல் நாசமா போனாலும் நஷ்ட ஈடு சரியா கணக்கு பார்த்து தர்றாங்களாமே..! சவுரியமான வாழ்க்கை.. விவசாயம் பண்றவனுக்கு முன்ன மாதிரி சோத்துக்கு அல்லாட வேண்டிய அவசியம் இல்ல பாருங்க.."
"சரியா சொன்னீங்க போங்க.. அதுவும் இல்லாம இந்த ஊர்ல இருக்கற முக்காவாசி பொம்பளைங்க அவனோட ஃபேக்டரியிலதான வேலை செய்யறாங்க..! படி அளக்குற முதலாளி கால வாரிவிட்டா அவங்க பொழப்பும் பாதிக்குமா இல்லையா.. அப்புறம் மூணு வேளை தான் வீட்ல எப்படி அடுப்பெரியும்னு யோசிப்பாங்கள்ல?"
"ஆனா அந்த பய வயசுல சின்னவனா இருந்தாலும் எல்லாத்தையும் திட்டம் போட்டு தெளிவா பண்ணி வச்சுட்டான்.. ஒவ்வொரு வீட்டு ஆம்பளையும் நிலத்துல பாடு பட்டு செடிய வளர்த்து தக்காளியை அறுவடை செஞ்சு மொத்தமா பொருளை கொண்டு போய் அவகிட்ட கொள்முதல் பண்றானுங்க.. வீட்டு பொம்பளைங்க அவனோட ஃபேக்டரிலேயே சம்பளத்துக்கு வேலை செய்யறாங்க.. இரட்ட வருமானம்.. ஊர் ஜனங்களோட வாழ்வாதாரம் ஒரு படி முன்னேறி போயிருக்குதுன்னா அதுக்கு காரணம் அந்த கிருஷ்ணா பயதான.. அப்புறம் அவனுக்கு எதிரா பொருள தர மாட்டேன்னு போராட்டம் பண்ண ஜனங்க எப்படி ஒத்துக்குவாங்கங்கறேன்.. நஷ்டம் அவங்களுக்கு தானே..!"
"நியாயமா ஊர் சேர்மன் இதையெல்லாம் நீங்க எடுத்து செஞ்சிருக்கணும்.." இன்னொரு பெரியவர் வாய்க்குள் முணுமுணுக்க.. கண்ணபிரானின் நிலைத்த பார்வை அக்னியை அவர் மீது கக்கியது..
"நான் தப்பா எதுவும் சொல்ல வரல தம்பி.. சேர்மன் நீங்க மக்களுக்கு தேவையான வசதிகளை ஒழுங்கா செஞ்சு குடுத்திருந்தா இந்நேரம் அவங்க நமக்கு ஆதரவா நம்ம பக்கம் வந்து நின்னிருப்பாங்க..! இப்போ அந்த கிருஷ்ணா ஜெயிக்க சாதகமான சூழ்நிலையை நாமளே உருவாக்கி குடுத்துட்ட மாதிரி ஆகுதுல்ல.. அதைத்தான் சொன்னேன்..!"
"அப்படியெல்லாம் எதுவும் ஆகாது.. கண்ணபிரான் வாய் திறந்தான்.. மற்றவர்கள் அமைதியாகினர்..
"எலக்ஷனுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்குதுல்ல..! இந்த ஒரு வருஷ காலத்துக்குள்ள நல்லதை கெட்டதா மாத்தலாம்.. கெட்டதை நல்லதா மாத்தலாம்.. மறதி ஒண்ணும் மக்களுக்கு புதுசு இல்லையே..! நெருக்கத்துல என்ன செய்யணும்னு நான் சொல்றேன் இப்ப இந்த விஷயத்தை அப்படியே ஆற போடுங்க.." என்றான் அழுத்தமான குரலில்..
"அப்பாடியோ.. இப்போதைக்கு பிரச்சனை எதுவும் இல்லை.." என்ற நிம்மதியுடன் விழிகள் மூடி நீண்ட பெருமூச்செறிந்தாள் வஞ்சிக்கொடி.
யாருக்காக இப்படி கவலை படுகிறாளாம் இவள்?
"சரி தம்பி அப்படியே ஆகட்டும் நாங்க கிளம்புறோம்.." வீட்டுக்கு வந்த ஊர் பெரியவர்கள் எழுந்து நிற்க..
"அதுக்குள்ள புறப்பட்டா எப்படி..? இருந்து எல்லாரும் சாப்பிட்டுதான் போகணும்..! உட்காருங்க.." என்றவன் "கண்ணகி..!" என உரத்த குரலில் அழைத்தான்..
இரண்டு மூன்று நிமிடங்களில் அங்கு வந்து நின்றாள் கண்ணகி.. அவன் மனைவி..
நிமிர்ந்து அவளைப் பார்த்தவனின் விழிகளில் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வராமல் இப்படித்தான் ஆடி அசைந்து வந்து நிற்பாயா என்ற கோபம்..!
"சமையல் ஆச்சுதா..?"
"ஒரு பத்து நிமிஷம்.. முடிஞ்சிடும்.." திணறலோடு சொன்னாள் கண்ணகி..
அதற்கும் அவனிடமிருந்து முறைப்பு..
"சீக்கிரமாகட்டும் மாடசாமி கிட்ட சொல்லி இலை அறுக்க சொல்லு..!"
என்றவன் மறுபக்கம் திரும்பி ஊர் பெரிய மனிதர்களோடு பேச ஆரம்பித்து விட.. அவசரமாக சமையற்கட்டை நோக்கி நடந்தாள் கண்ணகி..
கண்ணகி வயது 29 இல் நிற்கிறாள்.. நடக்க கூடாத சம்பவம் ஒன்றினால் சூழ்நிலை கைதியாகி கட்டாயத்தின் பேரில் கண்ணபிரானுக்கு மனைவியாக்கப்பட்டவள்..
திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் முடிவடைந்திருந்த நிலையில் ஒருநாளும் இந்த கண்ணபிரான் மனைவி கண்ணகியை மரியாதையுடன் நடத்தியதாக நினைவில்லை..! அவளும் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை..
ஆறு வருட திருமண வாழ்க்கையின் விளைவாக இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உண்டு.. பொய்கை வடிவேலன்.. ஐந்து வயதாகிறது..
அவசரமாக சமையல் கட்டுக்குள் நுழையப் போனவளின் கைப்பற்றி நிறுத்தினாள் வஞ்சிக்கொடி..
"ஏன் அண்ணி காலையில தான் உடம்புக்கு முடியல.. காய்ச்ச வர மாதிரி இருக்குன்னு கசாயம் குடிச்சிட்டு படுத்து கடந்தீங்க.. அடுத்த பத்தாவது நிமிஷம் அண்ணன் கூப்பிட்டு பத்து பேருக்கு சமைக்கணும்னு சொன்னதும் புடவை இழுத்துச் சொருகிகிட்டு நீங்க பாட்டுக்கு ஓடுறீங்க.. முடியாது எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா வாயிலிருந்து முத்துக்கொட்டிடுமா.." சற்று காட்டமாகவே கேட்டாள் வஞ்சிக்கொடி..
பதில் சொல்லாமல் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு அவள் கையை விடுவித்துக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள் கண்ணகி..
சமையலுக்கு உதவி செய்ய அங்கே வேலைக்கார பெண்மணிகள் உண்டு என்றாலும் முழுப்பொறுப்பும் கண்ணகியுடையது.. சமையல் முடியும் வரை அங்கு தான் நிற்க வேண்டும்.. பிறகு சமையலில் ஏதேனும் குற்றங் குறை நேர்ந்துவிட்டால் கண்ணபிரானின் கோபத்திற்கு ஆளாகப் போவதும் அடி வாங்க போவது அவள் தானே..!
கண்ணகி பதில் சொல்லாமல் சென்றதால் கடுப்போடு வஞ்சிக்கொடியும் அவளை பின்தொடர்ந்து சமையலறைக்குள் புகுந்தவள்.. "நான் கேட்டுகிட்டே நிக்கறேன் பதில் சொல்லாம உங்க பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்.. நீங்க இப்படி எல்லாத்துக்கும் தலையாட்டி கிட்டு அமைதியா இருக்கறதுனாலதான் அண்ணன் ஓவரா பண்ணுது..! என்றாள் எரிச்சலாக..
"ஆமா இவ வாய தொறந்துட்டாலும்.. கல்யாணமாகி இந்த வீட்ல அடி எடுத்து வச்ச நாள்ள இருந்து ஆமா இல்லைங்கிறத தவிர வேற எதுக்காவது அவன்கிட்ட வாயை திறந்திருக்காளா இவ..! புருஷன் கிட்ட மரியாதை இருக்கலாம் ஆனா பயம் இருக்க கூடாது..! சொல்லிச் சொல்லி நானும் அலுத்து போயிட்டேன்.." தேங்காய் மூடியை அழுத்தி அருவாள் மனையின் முனையில் துருவியபடி சலித்துக் கொண்டவள் கண்ணகியின் மாமியார் பாக்கியம்..
இந்த வீட்டில் மாமியாரும் நாத்தனாரும் நல்லவர்கள் தான்.. அதுவரையில் கண்ணகி ஓரளவு கொடுத்து வைத்தவள்..
"வாய தொறக்கணும்னா என்ன அர்த்தம் உங்க புள்ளைய எதிர்த்து பேசனுமா..?" விரக்தி புன்னகையோடு கேட்டுக் கொண்டாள் கண்ணகி..
"ஏன் எதிர்த்து பேசினா என்ன தப்பு.. அண்ணி நீங்க இந்த வீட்டுக்கு மருமகளா வந்த நாள்ல இருந்து அண்ணன் உங்களை கொத்தடிமை மாதிரி தான் நடத்துது.. நீங்க எல்லாத்துக்கும் அடங்கி போறதுனால தான் உங்களை ஓவரா ஆட்டுவிக்கனும்னு நினைக்குது..! துணிஞ்சு எதிர்த்து நின்னா அண்ணன் அதுவா அடங்கி போய்டும்னு நினைக்கிறேன்.." என்றாள் வஞ்சிக்கொடி.. அடுப்பில் கொதித்து கொண்டிருந்த பெரிய ஆட்டுக்கறி குழம்பு பாத்திரத்தை கீழே இறக்கி வைத்தபடி..
"ப்ச்.. நீ எதுக்காக இதைல்லாம் செய்யற வஞ்சி.. இத பாத்துட்டு உன் அண்ணன் வந்து என்னய கத்தனுமா.. முதல்ல வெளில போ.." என்றாள் கண்ணகி..
"சும்மா இருங்க அண்ணி.. அண்ணனால உங்கள தான் மிரட்ட முடியும்.. என்னை ஒன்னும் செய்ய முடியாது..!"
"அதையேதான் நானும் சொல்றேன் உன்னால நான் அடி வாங்கணுமா.. இங்க இருந்து போடி.." என்றாள் கண்ணகி கெஞ்சலும் வேதனையுமாக..
"ஆமாடி.. உன் முகம் வேர்த்து போனா இவ முகம் சிவந்து போயிடும்..! உங்க அண்ணன பத்தி உனக்கு தெரியாதா.. நீ வேற எதுக்காக இங்க வந்து நின்னு அவளுக்கு வேதனையை கூட்டுற வெளியில போ.." என்றாள் பாக்கியம்..
"ரெண்டு பேரும் அண்ணனுக்கு ரொம்ப தான் பயப்படறீங்க..! அவர் எனக்கு நல்ல அண்ணனா இருக்கலாம் ஆனா உங்க கிட்ட நல்ல புருஷனா நடந்துக்கலையே..! உங்க இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா என் அண்ணனுக்கு இரண்டே நாள்ல பெரிய கும்பிடு போட்டு வீட்டை விட்டு ஓடியிருப்பா..!" வஞ்சி கண்களை உருட்டினாள்..
"ஏன்.. நீ மட்டும் உன் மேல உயிரையே வச்சிருந்த புருஷனோட நூறு வருஷம் வாழ்ந்து குப்பை கொட்டிட்டியா என்ன..! அவரோட பிரச்சினைன்னு சண்டை போட்டுக்கிட்டு அம்மா வீட்டுக்குதானே வந்திருக்க.. ஆனா நான் ஒன்னும் என் புருஷன அப்படி விட்டுட்டு போயிட மாட்டேன்.. அடிச்சாலும் புடிச்சாலும் எனக்கு அவர் மட்டும்தான் ஆதரவு.." கண்ணகியின் வார்த்தைகள் கூர்மையான ஊசியாக வஞ்சிக்கொடியின் நெஞ்சில் இறங்கியது..
பாக்கியம் கூட கண்ணகி வெடுக்கென்று பேசியதில் மகளின் முகம் போன போக்கை கண்டு சங்கடத்தோடு நின்று கொண்டிருந்தார்..
முனுக்கென்று கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டு வஞ்சிக்கொடி அறையை விட்டு வெளியே வர.. எதிரே கண்ணபிரான் நின்று கொண்டிருந்தான்..
வஞ்சிக்கொடிக்கு மூச்சே நின்று போனது.. தனக்காக யோசிக்கவில்லை.. கண்ணகியை நினைத்துதான் கவலைப்பட்டாள்.. உள்ளே மூவருமாக பேசிக் கொண்டிருந்ததை அண்ணன் கேட்டிருப்பானோ.. மிரட்சியோடு அவனைப் பார்க்க.. மென்மையாக புன்னகைத்தான் கண்ணபிரான்..
"அடுப்படியில உனக்கென்ன வேலை நான் தான் இந்த பக்கம் உன்னை வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனே..!" செல்லமாக மிரட்டினான்..
"இல்ல அண்ணிக்கு கூடமாட ஒத்தாசையா இருக்கலாம்னு.."
"என்ன ஒத்தாசை.. அவளுக்கு இந்த வேலையெல்லாம் செஞ்சு பழக்கம்தானே..! 100 பேருக்கு சமைக்கற அளவு அவ உடம்புல தெம்பு இருக்கு.. உனக்குதான் இந்த நெருப்பு அனல் புழுக்கம் இதெல்லாம் ஆகாது கண்ணு.." என்று பாக்கெட்டிலிருந்த தன் கைக்குட்டையை எடுத்து தங்கையின் முகத்தை துடைத்து விட்டான்..
"நீ ரூமுக்கு போ.. சோறு சாப்பிடும்போது மட்டும் கீழே வந்தா போதும்.. புரியுதா..!" அவன் அன்பான கட்டளையில் சரி என்று தலையசைத்தாள் வஞ்சிக்கொடி..
தங்கை அவ்விடம் விட்டு நகரும் வரை சிரித்துக் கொண்டிருந்தவன் அடுத்த கணம் முகம் மாறி
"ஏய்.. கண்ணகி.." என்று உரத்த குரலில் அழைக்க.. கையில் வைத்திருந்த பாத்திரத்தை அப்படியே போட்டு விட்டு வெளியே ஓடி வந்தாள் கண்ணகி..
"என்னங்க..!"
பளாரென்று ஒரு அறை..!
சமையலறையில் இருந்து பதறி கொண்டு ஓடி வந்தாள் பாக்கியம்..
"டேய் கண்ணா.. இப்ப எதுக்குடா அவளை அடிக்கற.. பாவம் அவளே காலையிலிருந்து காய்ச்சல்ல சுணங்கி போய் கெடக்கறா.. வேலைக்காரி மாதிரி வூட்டு வேலை அத்தனையும் இழுத்துப் போட்டு செய்யறதோட உன்கிட்ட அடி வேற வாங்கணுமா..?" படபடப்போடு மருமகளுக்காக தன் மகனிடம் வாதம் செய்ய.. கன்னத்தில் கை வைத்து தரை தாழ்ந்த படி கண்ணீரை உள் இழுத்துக்கொண்டு அமைதியாக நின்றாள் கண்ணகி..
கண்ணகிக்கு காய்ச்சலோ காமலையோ.. அதெல்லாம் கண்ணபிரானுக்கு ஒரு பொருட்டே அல்ல..
"அம்மா நீங்க பேசாதீங்க.. போய் வேலைய பாருங்க.." அவன் கண்களின் சிவப்பில் வார்த்தைகள் மறந்து அமைதியாக நின்றார் பாக்கியம்..
"உங்களை தான் சொல்லுறேன் போய் வேலைய பாருங்க.." அதிகரித்த அவன் குரல் தொனியில் கண்ணகியை பரிதாபமாக பார்த்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொண்டார்..
"என்னடி திமிரா..! நரிக்கு நாட்டாம கொடுத்தா கிடைக்கு எட்டாடு கேக்குமாம்.. நான் கட்டுன தாலிய சுமக்கறதுனால இந்த வீட்டுக்கு முதலாளின்னு நினைப்போ.. என்னைக்குமே நீ வேலைக்காரிதான்டி.. நியாபகம் இருக்கனும்.. என் தங்கச்சி இந்த வீட்ல தங்கக்கூடாதுன்னு சொல்ல நீ யாருடி வேலைக்கார நாயே..!"
"ஐயோ நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லைங்க.."
"வாய மூடு..!" மீண்டும் கை ஓங்கினான்.. அமைதியாக நின்றாள் கண்ணகி..
"இது என் தங்கச்சியோட வீடு.. ஆயுசு பூரா அவ இங்கன தான் இருப்பா.. நீ யாருடி கேக்கறதுக்கு.. அடிமைகளுக்கு அறிவுரை சொல்லவும் எதிர்த்து பேசவும் சுதந்திரம் இல்ல புரியுதா..?" அவன் பற்களை கடிக்க.. அடக்கி வைத்திருந்த கண்ணீர் கொட்டியது..
"பத்து நிமிஷம்னு சொல்லி கால் மணி நேரம் ஆச்சு.. எல்லாரையும் வேலை ஏவிட்டு மகாராணி கணக்கா கதை அடிச்சுட்டு ஜாலியா இருக்கீங்களோ.. தொலைச்சிடுவேன் தொலைச்சு.. போய் வேலையை பாருடி.."
அடுத்த கணம் தலை நிமிராமல் ஓடி வந்து சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் கண்ணகி..
"என்னமா ரொம்ப அடிச்சிட்டானா வலிக்குதா..!" பாக்கியம் கவலையோடு அவள் கன்னத்தை ஆராய.. அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு
"அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்த.. வழக்கமா வாங்கறதுதான" என்று மீண்டும் சமையல் வேலையில் கவனம் செலுத்தலானாள்..
எப்பேர்பட்ட அருமையான பொண்ணு பொண்டாட்டியா கிடைச்சிருக்கு.. இந்த விளங்காதவனுக்கு கொஞ்சம் கூட மதிப்பு தெரியலையே..! பாக்கியம் மனதுக்குள் அங்கலாயித்தாள்..
"இந்தா நீ இப்படி உட்காரு.. மத்ததை நான் பாத்துக்கறேன்.. நீ எல்லாத்தையும் கொண்டு போய் வைச்சு பரிமாறினா மட்டும் போதும்.."
"ஐயோ வேண்டாம் அத்தை.. அவர் என்னை கொன்னே போட்டுருவார்.."
"அதான் நான் சொல்றேன்னுல.. உட்காரு இப்படி.." ஸ்டூலை இழுத்துப் போட்டு மருமகளை அமர வைத்தாள்..
"செல்வி அடுப்பில பால வை.."
"இப்ப எதுக்கு பால வைக்க சொல்றீங்க.. யாருக்காவது டீ போடணுமா.. இருங்க நான் போட்டு தாரேன்.."
"உட்காருடி.. டீ உனக்கு தான்.. உன் புருஷன் சாப்பிட்டு முடிச்சு நீ சாப்பிடுறதுக்குள்ள பசியில வயிறு கருகியே போயிடும்.. காய்ச்சல் கொதிக்குதுடி பாவி மகளே.. இந்த நேரத்துல வயித்த காய போடக்கூடாது.. இந்த மாத்திரயோட கொஞ்சம் காபி தண்ணிய குடிச்சுபுட்டு வேலைய பாரு.." என்ற மாமியாரை நன்றியோடு பார்த்தாள் கண்ணகி..
"வஞ்சிக்கொடியை காயப்படுத்தனும்னு அப்படி சொல்லல அத்தை.."
"ஆமா நீ விளக்கம் வேற சொல்லனுமாக்கும்.. எனக்கு தெரியாதா..? நீ என்ன நினைக்கறியோ அதையேதான் நானும் நினைக்கிறேன்.. நாம ரெண்டு பேரும் ஆசைப்பட்டா மட்டும் போதுமா கடவுள் மனசு வைக்கணுமே..! என் பொண்ணு வாழ்க்கை இப்படியே முடிஞ்சு போயிடுமானு பயமா இருக்கு.." பாக்கியம் கண்ணை கசக்கினாள்..
"அழாதீங்க அத்த.. அப்படியெல்லாம் எதுவும் ஆகாது.. நாம ரெண்டு பேரும் எதுக்கு இருக்கோம்.. எப்படியாவது வஞ்சியை அவ புருஷன் கூட சேர்த்து வச்சுடலாம்.. கவலைய விடுங்க.." என்று மாமியாரின் கண்ணை துடைத்து விட்டாள் கண்ணகி..
நடக்காது என்று தெரிந்தும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ளத்தான் முடிந்தது..
வஞ்சியின் வாழ்க்கை சீரழிந்து நிற்பதற்கு காரணமே கண்ணபிரான் தானே..
தனக்கு இணையான எதிரி என்று பாவித்து கண்ணபிரான் அழிக்க துடிப்பது வஞ்சியின் கணவனைத் தான்..
கிருஷ்ணதேவராயன்..
தேவரா..
தொடரும்..