• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 14

Active member
Joined
Jan 16, 2023
Messages
140
அடுத்தவரிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயத்தை நாமும் அவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும்.. திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதைவிட முதலில் கொடுக்க வேண்டும் என்பதுதானே முறை.. அன்பு.. விட்டுக் கொடுத்தல்.. காதல்.. கனிவு அக்கறை அனுசரணை எதுவாக இருப்பினும் ஈகோ பார்க்காமல் கொடுக்க வேண்டும்.. பின்புதான் பெற நினைக்க வேண்டும்.. எதைக் கொடுத்தாலும் பல மடங்காக திருப்பிக் கொடுக்கும் பிரபஞ்சத்தில் அன்பு மட்டும் மட்டாகவா கிடைக்கும்..

வயிறு நிறைந்து போனால் அடுத்தவனின் பசி புரியாது.. வலி மரத்துப்போனவனுக்கு அடுத்தவனின் வேதனை தெரியாது.. பசியை உணர வைக்க வேண்டும்.. வலியை புரிய வைக்க வேண்டும்.. அன்பின் ருசி அறிந்தவன் நிச்சயம் காதலிப்பான்.. குடும்ப உறவுகளில் எதற்கு கூச்சம்.. முயற்சி இல்லாமல் பலன் ஏது..? பத்மினி தெரிந்தோ தெரியாமலோ இதை செய்தாள்.. செய்தாளோ அல்லது தனக்குள் உந்தி தள்ளிய உள்ளுணர்வால் செய்ய வைக்கப்பட்டாளோ..

அதற்காக அவள் மெனக்கிடவில்லை.. அவள் அவளாக இருந்தாள்.. மனதில் புதைந்திருந்த ஆசைகளை பட்டும் படாமலும் வெளிப்படுத்தினாள்..
அவனுக்கே தெரியாது அவன் மீது மனைவிக்கான தனது உரிமையை எடுத்துக் கொண்டாள்.. எதையும் யாரும் திணிக்கவில்லை.. இயல்பாகவே அந்த பழக்கம் வருகிறது.. அதிலும் ஒருவர் மீது வெறுப்பு இருந்தால் விலகலாம்.. இங்கு ஆசையும் எதிர்பார்ப்பும்தானே நிறைய இருக்கிறது..

அன்று இரவில்.. தலை நிறைய வைத்திருந்த மல்லிகை பூவை எடுத்து டேபிள் மீது ஓரமாக வைத்துவிட்டு படுக்கைக்கு வந்தாள் பத்மினி..

அறைக்குள் அவள் நுழைந்த அரவத்தில் திரும்பி பார்த்தவன் மல்லிகை சரத்தை கூந்தலிலிருந்து பிரித்து மேஜை மீது வைக்கும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான்.. பிறகு அவள் பார்வை தன்னை நோக்கி திரும்பவும் அலைபேசியை அணைத்து ஓரமாக வைத்துவிட்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான்..

அவனைப் பார்த்துக் கொண்டே
அலைபேசியில் ஒரு பாடலை மிதமான சத்தத்தில் வைத்துவிட்டு பத்மினி படுத்துக் கொண்டு விழிகள் மூட..

ஏதோ நடுராத்தியில் வீட்டுக்குள் ஸ்பீக்கர் கட்டி பாட்டு போட்டது போல் டென்ஷன்.. வழக்கம்போல் புயலடிக்க ஆரம்பித்துவிட்டது..

"ஏய்.. என்ன இது..? அறிவில்ல.. எதுக்காக இப்படி ராத்திரியில் தொந்தரவு பண்ற.." சீற்றத்துடன் இரைந்தான் அவன்..

ஆரம்பிச்சுட்டார்.. பத்மினியிடம் சலிப்பு "என்ன தொந்தரவு செஞ்சுட்டேன்..!! நான் உங்களை எதுவும் பண்ணலையே.."

"இப்படி சத்தமா பாட்டு வச்சா நான் எப்படி தூங்கறது.."

"சத்தமா ஒன்னும் வைக்கல.. ரொம்ப குறைவான சத்தத்தில்தான் வச்சிருக்கேன்.. இதனால உங்க தூக்கம் எந்த வகையிலும் கெட்டுப்போகாது.. எனக்கு தூக்கம் வரல.. இப்படி ஏதாவது பாட்டு கேட்டாதான் தூக்கம் வரும்.."

"உனக்கு பாட்டு கேக்கணும்னா இயர் போன் வெச்சு கேளு.. எதுக்காக என் உயிரை வாங்கற.."

"இயர் போன் வச்சு கேட்டா காது வலிக்குது.. நடுராத்திரியில் தூக்கம் கெட்டு போகுது..!! இப்படித்தான் கேட்பேன்.. உங்களுக்கு பிடிக்கலைன்னா எழுந்து வெளியே போயிடுங்க..!!"

"அதெப்படி..? இவள் என் அறையில் உல்லாசமாக தூங்குவாளாம்.. நான் மட்டும் எழுந்து வெளியே செல்ல வேண்டுமா.." என்ற ஈகோ அவனை தடுக்க பத்மினியை முறைத்தபடி அமைதியாக படுத்துக் கொண்டான்.. அவன் குற்றம் சாட்டுவதை போல் காதுகளை உறுத்தும் வகையில் சத்தமாக ஒன்றும் பாட்டு வைக்கவில்லை.. நெஞ்சை இதமாக்கும் மெல்லிய சத்தம்தான்..

மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடி கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னமோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி மஞ்சம் தேடி
மாலை சூடி மஞ்சம் தேடி
காதல் தேவன் சன்னதி

காண காணக் காணக் காண..

ஒரு பெண்ணின் காதல் ஏக்கம்.. வலிய காதில் வந்து விழும் கீதா உபதேசம் பாமரனையும் ஞானியாக்குவதை போல்.. அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக காதில் வந்து விழுந்த சங்கீதமும் அதில் சொல்லப்பட்ட வரிகளும்.. அவனையும் மீறி உடலுக்குள் கிளர்ச்சி ஏற்படுத்தத்தான் செய்தன..

"ப்ச் கொஞ்சம் பாட்டை ஆஃப் பண்றியா..?" மீண்டும் எரிந்து விழுந்தான்..

"என்ன சார் எவ்வளவு நல்ல பாட்டு.. எதுக்காக இப்படி எரிஞ்சு விழறீங்க..? அழகான பாட்டுக்கு நடுவுல உங்க குரல் அபஸ்வரமா கேக்குது.. ஒருவேளை உங்களுக்கு வேற ஏதாவது பாட்டு பிடிக்குமா..!! பாட்டை மாத்தவா.."

"கடுப்பை கிளப்பாதே.. நான் பாட்டு கேக்கறது இல்ல.. பாட்டு கேக்கறது.. படம் பாக்கறது.. சோசியல் மீடியாவிலேயே மூழ்கி இருக்கிறது.. இதெல்லாம் வேஸ்ட் ஆப்ஃ டைம்..!! எனக்கு பிடிக்காது.."

"என்ன சார் இப்படி சொல்றீங்க.. மத்ததை கூட ஒத்துக்குவேன்.. ஆனா பாட்டு கேக்கறதை வேஸ்ட் ஆஃப் டைம்னு சொல்றதை என்னால் ஏத்துக்கவே முடியாது.. மிருகங்களுக்கு கூட இசை பிடிக்கும்.. நீங்க எந்த வகையறா தெரியலையே..!!" என்றவளை கோபத்தோடு திரும்பி பார்த்தான்..

"உண்மையை சொன்னேன் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது.. மியூசிக் பிடிக்காது.. பாட்டு பிடிக்காதுங்கிற மனுஷனை இப்பதான் பார்க்கிறேன்.."

"என் பர்சனல் கேரக்டரை விமர்சனம் பண்ண உனக்கு எந்த உரிமையும் இல்லை.. இத்தோட நிறுத்திக்கிட்டா நல்லது.." வார்த்தைகளை பற்களில் கடித்து துப்பினான்.. பத்மினி அமைதியாகி விட்டாள்.. ஆனால் அவள் பேச்சு அவன் தன்மானத்தை நிச்சயம் சீண்டி பார்த்திருக்க வேண்டும்.. அதன் பிறகு பாட்டை நிறுத்த சொல்லி கத்தவில்லை..

"அந்த மல்லிகை பூ எதுக்காக எடுத்து இங்க வச்சிருக்க.. குப்பை கூடையில் போட்டு தொலைய வேண்டியது தானே..!! எனக்கு தலை வலிக்குது.." வேறு பேச்சோடு புருவங்களை ஏற்றி இறக்கினான்..

"வாடாம பிரெஷா இருக்கிற மல்லிகை பூவை எப்படி குப்பை கூடையில் போட முடியும்.. வாங்கி கொடுத்த ரமணியம்மா மனசு வேதனை படாதா..!!"

"இப்படி தேவையில்லாம மேஜையில் வச்சிருந்தா மட்டும் அவங்க மனசு வேதனை படாதா..?"

"அதுக்காக தூங்கும்போது எப்படி பூவை தலையில் வச்சுக்க முடியும்.. கட்டில்ல மல்லிகை பூ கசங்கனும்னா அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கணும்..!!"

ஏளனமாக இதழ் வளைத்தான்.. "அனுபவமா இல்லை ஆர்வமா..?"

சட்டென கோபம் முகிழ்த்தது.. "என் பர்சனல் கேரக்டரை பற்றி கேவலமா விமர்சனம் பண்ண உங்களுக்கும் உரிமையும் இல்லை சார்.. அனுபவமோ ஆர்வமோ.. என்னோட சொந்த ஒப்பினியனை சொன்னேன்.. உங்களுக்கு என்ன வந்துச்சு..!!" படபடவென பொரிந்துவிட்டு விழிகளை மூடினாள்..

என்ன பேச்சு இது..!! சாதாரண வார்த்தைகளுக்கு கூட இப்படி ஒரு அர்த்தம் கற்பிப்பானா இவன்.. மனம் ஆறவில்லை.. மூன்றாம் நபர் பேசினால் கடந்து போகலாம்.. இவனிடம் அப்படி விட்டுக் கொடுக்க மனமில்லை.. அவன் தன்னை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஏனோ ஒரு துடிப்பு..

"இந்த வயசுலயும் அனுபவசாலியா ஏதேதோ நினைப்போட இந்த மல்லிகை பூவை என் தலையில் வச்சு விட்ட உங்க அம்மாவுக்கு ஆண்களை மயக்கறதுல என்னென்ன அனுபவம் இருந்திருக்குமோ..!!" அவள் கேட்டது தான் தாமதம்..

"பத்மினி.." என்று கர்ஜனை குரலோடு எழுந்து அமர்ந்தவனின் கண்கள் சில நொடிகளுக்குள் தீப்பிழம்பாக சிவந்துவிட்டது.. அந்த விழிகள் தகித்து அவளை நெருப்பாக சுட்டெரித்தன .. கடுமையான கோபம்தான்.. எதிர்கொள்ள தயாராக இருக்கிறாள்..

"சந்தோஷம்.. அம்மா மேல நிறைய நம்பிக்கை வச்சிருக்கீங்க.. அதை நம்பிக்கை அடுத்த பெண்கள் மீதும் வைக்கணும்..!! நம்பிக்கை வைக்கலைனா கூட பரவாயில்லை.. யாரையும் கேவலமான கண்ணோட்டத்தோட பார்க்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.. அடுத்தவங்களை ஜட்ஜ் பண்ற பழக்கத்தை முதல நிறுத்துங்க.. உங்களை மாதிரி எல்லோருக்கும் இதயம் இரும்பால செய்யல" ஃபோனை அணைத்துவிட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.. ஐ அம் சாரி ரமணியம்மா.. மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு விழிகளை மூடிக்கொண்டாள்..

ஓரிரு நிமிடங்கள் கழித்து.. "ஐ அம் சாரி.." அவன் குரல் இறங்கி ஒலித்தது.. பத்மினி உறங்கியிருந்தாள்..

மற்றொரு நாள் கட்டிலுக்கு அடியிலிருந்த பையை இழுத்து ஆசைகளை எழுதி வைத்திருந்த ஸ்கிப்பிங் பேடை கட்டிலின் ஓரத்தில் வைத்துவிட்டு தனக்கான இரவு உடையை தேடி எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் பத்மினி..

உடையை எடுத்துக் கொண்டவள் துணிப்பையை கட்டிலுக்கு அடியில் உள்ளே தள்ளி வைக்க மறந்துவிட்டாள்..

உதய் கிருஷ்ணாவிற்கு முன்பாகவே அவள் வந்து கட்டிலில் படுத்து விட.. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் விடியல் விளக்கின் வெளிச்சத்தில் கட்டிலுக்கடியில் தலையை நீட்டிக் கொண்டிருந்த பை தெரியாமல் கால் தடுக்கி அவள் மீதே மொத்தென விழுந்தான்..

அம்மா என்று இவள் கத்த.. ஆஆஆ.. என்று அவன் கத்த.. நெஞ்சம் நெஞ்சுமாக மோதி கொண்டனர் இருவரும்..

ஒரு பெண்ணின் அதீத மென்மை.. பெண் வாசனை அனைத்தையும் இன்றுதான் உணர்கிறான்.. விவரம் தெரிந்த நாளிலிருந்து அம்மாவின் ஸ்பரிசத்தை கூட அனுபவித்ததில்லையே.. அம்மாவின் வாசனை மறந்து வெகு நாட்களாகிவிட்டது..

பெண் மேனி தீண்டியதும் ஒரு ஆணுக்குள் இயல்பாக நடக்கும் வேதியல் மாற்றங்கள் அவனுக்குள்ளும் நடக்கத்தான் செய்கிறது.. இது இயற்கை யாராலும் தடுக்க முடியாது..!!

நவகிரகம் போல் வெவ்வேறு பக்கங்களில் முகத்தை திருப்பியிருந்தவர்கள் ஒரே நேர்கோட்டில் ஒருவரை ஒருவர் பார்க்க இதழும் இதழும் மோதிக்கொண்டது அழகான இனிய விபத்து.. பற்களை கடித்தான் உதய் கிருஷ்ணா.. அவள்தான் திணறினாள்.. அவனுக்குள் என்ன நிகழ்ந்தனவோ..?

எப்போதும் கீழே விழுந்தவர் ஒரு அழுத்தத்தை தன்னை தாங்கியிருந்த பொருளின் மீது கொடுத்து தான் எழுந்திருக்க முடியும்.. தன்னையும் அறியாமல் அப்படியான ஒரு விசையை அவள் நெஞ்சின் மீது அழுத்தி எழ முயற்சித்தான் உதய்.. மூச்சு முட்டியதில் மீண்டும் அம்மாஆஆ.. என்று முனகியவளை திடுக்கிட்டு திரும்பி பார்த்தான்.. இரு கைகளை மெத்தையின் மீது ஊன்றி குனிந்தபடி எழுந்தவனுக்கு என்ன தெரிந்ததோ.. விழிகளை மூடியபடிதான் எழுந்து நின்றான்.. தொடர்ச்சியான தடுமாற்றம்.. பெண்ணின் உடற்கூறுகள் தெரியாமல் ஒன்றும் நாற்பது வயதை தொட்டு விடவில்லை.. இன்று மனக்கட்டுபாடுகளின் கட்டமைப்பில் ஏதோ குளறுபடியாக இருந்திருக்க வேண்டும்..

சற்று நிதானித்த பிறகுதான் அவன் இயல்பான குணம் தலைத் தூக்கியது..!!

"அறிவே இல்லையா உனக்கு.."

"மேல வந்து விழுந்தது நீங்க..!! அறிவில்லையான்னு என்னை பார்த்து கேக்கறீங்க..!!" மாராப்பை சரி செய்து கொண்டு பத்மினி எழுந்து அமர்ந்தாள்.. சேலை விலகுவதெல்லாம் சில சமயங்களில் இயற்கையாக நிகழ்வது.. ஒன்றும் செய்வதற்க்கில்லை.. இது அவனுக்கும் தெரியும்..

"பையை இப்படித்தான் கால் தடுக்கிற மாதிரி வைப்பியா..? தெரியாம செஞ்ச மாதிரி தெரியல..

"வேணும்னு செஞ்சேன்னு சொல்ல வர்றீங்களா.. இப்படி சீப் டெக்னிக்கை ஃபாலோ பண்ணிஉங்களை வசியம் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..!! நல்லவேளை உங்களை நான் தாங்கினேன்... நீங்க விழுந்த வேகத்துக்கு இன்னும் கொஞ்சம் தள்ளி சைடுல விழுந்திருந்தீங்கன்னா.. என்ன ஆகியிருக்கும் யோசிச்சு பாருங்க.." என்று கட்டில் விளிம்பை காட்டினாள்..

நான் தாங்கினேன்.. என்ற வார்த்தையில் அவன் உலகம் ஸ்தம்பித்து விட கண்கள் சுருக்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

"எதுக்காக அப்படி பாக்கறீங்க.. நான் எதையும் வேணும்னு செய்யல.. பையிலிருந்து என் துணியை எடுக்கும் போது கொஞ்சம் களைப்புல தவறுதலா அப்படியே வச்சிட்டேன்..!! இனிமே இப்படி நடக்காது.." என்றுவிட்டு அவள் படுப்பதற்கு ஆயத்தமாக..

"கபோர்டுல இன்னொரு ராக் ஃப்ரீயாதான் இருக்கு.. அதுல உன்னோட துணிமணிகளை அடுக்கிக்கோ.." என்றவனை கண்கள் விரித்து பார்த்தாள் பத்மினி..

"இனி காலையிலும் ராத்திரியிலும்.. துணி எடுக்கிறேன்னு என் கண் முன்னாடி பேய் வந்து நின்னு உயிரை வாங்காதே..!!" என்றான் அசைவில்லாமல் நின்றபடி.. கண்கள் கூர்மையாக எதை பார்க்கின்றன தெரியவில்லை.. முகமா.. இதழா.. இடையா.. அல்லது? ஈர்க்கப்படுவது இயற்கை.. ஆணுக்கு அறுபதிலும் ஆசை வரும்.. இவன் நாற்பதுதானே..

"ஆமா நான் பேய்தான்.." உதட்டை சுழித்தாள் பத்மினி..

"இப்ப எதுக்காக உதட்டை சுழிக்கிற.." எரிந்து விழுந்தான் மீண்டும்..

அவன் சத்தத்தை சகித்துக் கொள்ள முடியாமல் கண்களை இறுக மூடித் திறந்தாள்.. "என்னதான் சார் உங்களுக்கு பிரச்சனை.. ஏன் இப்படி என்னையே இப்படி பார்த்துட்டு இருக்கீங்க.. நான்தான் தெரியாம செஞ்சிட்டேன்னு சொன்னேனே.." பத்மினி சொன்ன பிறகும் இருளில் பிரம்ம ராட்சதன் போல் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் உதய்..

"இவர் மேல விழுந்ததுல என்னோட இடுப்பெலும்புதான் உடைஞ்சு போச்சு.. எதுக்காக இப்படி முறைச்சிட்டு நிக்கிறாரு.." கடுப்பாக இருந்தது அவளுக்கு.. முன்பே தெரிந்திருந்தால் அடிபட்டு மூக்கு உடையட்டும் என்று உருண்டு தள்ளி போயிருப்பாள்..

"வந்து படுங்க சார்.. எனக்கு தூக்கம் வருது.." கால்களை மடக்கி உதய் அந்தப் பக்கம் செல்வதற்காக இடம் விட்டு காத்திருந்தாள்..

அவளை முறைத்துக் கொண்டு சுற்றி வந்து கட்டிலில் அமர்ந்தவன்.. தலையணையை சரி செய்து கொண்டே பக்கத்திலிருந்த போர்வையை எடுக்க..

"அம்மா ஆஆஆ.." மீண்டும் அவளிடமிருந்து அலறல்.. சட்டென திரும்பி பார்த்தான்.. போர்வை என்று நினைத்து அவள் இடுப்பு சதையை கொத்தாக பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.. கால்கிலோ கறி கையோடு வந்திருக்கும்..

"ஷிட்.." என்று சட்டென அங்கிருந்து கரத்தை விடுவித்துக் கொண்டவன்.. "சாரி" என்றான் மீண்டும் இறுகிய குரலில்..

"நீங்க ஷிட்டுனு சொல்லி அருவருப்பு படறபடற அளவுக்கு என் இடுப்பு ஒன்னும் கேவலமான பொருள் இல்லை.. தப்பு செஞ்சது நீங்க.. என்னை எதுக்காக அசிங்க படுத்தறீங்க.." என்று புடவையை இழுத்து விட்டுக் கொள்ள.. அவள் இடுப்பை ஒரு முறை பார்த்து விட்டு அவளை முறைத்தவன்.. எதுவும் பேசாமல் முதுகு காட்டி திரும்பி படுத்து கொண்டான்..

காப்பு காய்த்து கொப்பளித்து போன விரல்களில் பூ வாசனை.. உணர்கிறான்.. ஆனால் ரசிக்கிறானா தெரியவில்லை..!!

தொடரும்..
🤣🤣🤣
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
129
1💜💜💛💛💛💛🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵💙🩵💙💙💙💙💙💙💙💙💙💙💙💙👍👍💥💥🩵🩵💙💙👍👍🩵🩵💙👍👍🩵🩵💙💙👍💥🩵🩵🩵
 
Top