"டேய் வருண்.. எழுந்திருடா..!" கன்னத்தைத் தட்டி உலுக்கி எழுப்பிய பிறகுதான் மெல்ல உறக்கம் களைந்து கண்களைத் திறந்தான் வருண்..
வெண்மதி பதட்டமாக அவன் கண்முன்னால் நின்றிருந்தாள்..
"காலங்காத்தால ஏன் இப்படி டென்ஷனா மூஞ்சிய வெச்சிருக்க..! பாக்கவே பயமா இருக்குது.." உறக்க கலக்கத்துடன் கொட்டாவி விட்டபடி எழுந்தவன் சோபாவை இரு கைகளால் பற்றி வசதியாக அமர்ந்தான்..
"என்னடா இங்க வந்து படுத்திருக்க..! உனக்கும் திலோத்தமாவுக்கும் ஏதாவது பிரச்சனையா என்ன..?"
வெண்மதி கேட்ட பிறகுதான் தான் சோபாவில் அமர்ந்திருப்பதையும் முந்தைய நாள் இரவு நடந்ததையும் நினைவு கூர்ந்தவன் பதில் சொல்லத் தெரியாமல் திக்கென ஒரு விழிப்புடன் வெண்மதியை பார்த்தான்..
"கேட்டதுக்கு பதில் சொல்லுடா..! புருஷன் பொண்டாட்டி பிரச்சினை எதுவா இருந்தாலும் ரூமுக்குள்ளயே பேசி தீர்த்துக்கங்க..! இப்படி வெளிய வந்து தனியா படுக்கறதெல்லாம் சரியே இல்லை தம்பி.. பாவம் அந்த பிள்ளை எவ்வளவு ஃபீல் பண்ணுச்சோ.. எழுந்திரு போய் அவளை சமாதானம் பண்ற வழிய பாரு.. இல்லனா நான் போய் பேசட்டுமா..!"
"ஐயோ அக்கா ஒரு நிமிஷம் இரு..!" எனும்போதே திலோத்தமா அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்திருந்தாள்..
"அந்த பொண்ணு உங்ககிட்ட ஏதோ பேசணுமாம் உங்களை கூப்பிடுது..!" திலோத்தமாவின் சிடுசிடு குரலில் "எந்த பொண்ணு?" என்றபடி வெண்மதி வருணை புரியாமல் பார்க்க..
"போச்சுடா.." தலையை தலையை கோதியபடி உருவங்களை உயர்த்தினான் வருண்..
"என்னடா சொல்றா இவ? எந்த பொண்ணு உங்க ரூம்ல இருக்கா..! எனக்கு ஒண்ணுமே புரியலையே..?" வெண்மதியின் விசாரணை வெற்றிகரமாக தொடங்கியது.
"இப்போதைக்கு ஒன்னும் புரிய வேண்டாம்.. நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க..!" என்று முடித்து தனதறைக்கு ஓடினான் வருண்..
கிடைத்த இடைவெளியில் "என்னமா நடக்குதிங்க? வெண்மதி திலோத்தம்மாவிடம் கேட்க..
"அதையும் உங்க தம்பி கிட்டையே கேளுங்க..!" புடவை முந்தானையை உதறிக் கொண்டு அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள் திலோத்தமா..
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் வருண்..!
முந்தைய நாள் இரவில் கையிலேந்தி கொண்டு வந்து காரில் கிடத்தியவன் எந்த யோசனையுமின்றி அவளை தனது வீட்டிற்குதான் அழைத்து வந்திருந்தான்..
அனைவரும் உறங்கியிருந்த நிலையில் வருண் ஒரு பெண்ணோடு வீட்டுக்குள் வந்ததையோ அவளை தன் அறைக்குள் தூக்கி சென்றதையோ யாரும் பார்க்க வில்லை..
தன் அறைக்கு வெளியே வருண் தும்மினால் கூட விழித்து விடும் குணம் கொண்ட திலோத்தமா மட்டும்.. கதவை திறந்து கொண்டு வருண் வெளியே சென்றது முதல் அவன் வரும் வரை கட்டிலில் அமர்ந்து காத்திருந்தாள்..
ஒரு பெண்ணை தூக்கிக் கொண்டு உள்ளே வந்த வருணை கண்டு திகைத்து திடுக்கென எழுந்த திலோத்தமா..
"என்னங்க இது.. யார் இந்த பொண்ணு.. இந்த நேரத்துல இவளை எதுக்காக இங்க தூக்கிட்டு வந்திருக்கீங்க.. நீங்க என்ன சட்டை இல்லாம நிக்கறீங்க.. உங்களோட ஷர்ட்டை இவ போட்டிருக்கா.. டிரஸ் கூட மாத்தாம அப்படி எங்க போயிட்டு வரீங்க.." ஏகப்பட்ட கேள்விகளோடு அவன் கையிலிருந்தவளை முகத்தை உற்றுப் பார்த்த பிறகு..
"இது.. இ.. இவ அந்த திருடி..! என்னங்க நான் ஒரு முறை உங்ககிட்ட சொல்லி இருக்கேனே..!" என்று கூச்சலிட
"ஷட் அப்.. முதல்ல கத்தறதை நிறுத்து.." பற்களை கடித்தபடி தேம்பாவை கட்டிலில் படுக்க வைத்தான் வருண்..
"என்னாச்சு இவளுக்கு பொணம் மாதிரி கிடக்கறா.."
வருணிற்கே திலோத்தமாவின் வாய் சுத்திகரிக்கப்படாத குப்பைகளை வார்த்தைகளாக கொட்டுவதில் ஆத்திரம் எல்லை மீறியது..
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவசரமாக தன் கபோர்ட்டை திறந்து வேறு ஒரு டி-ஷர்ட் எடுத்து அணிந்து கொண்டான்..
அருவருப்பாக முகத்தை சுளித்தபடி "என்ன டிரஸ் இது கன்றாவி..!" எனும்போதே ஒரு போர்வையை எடுத்து கழுத்து வரை போர்த்தி விட்டு திலோத்தமாவை முறைத்தான்..
"இவங்க வீட்ல யாரும் இவளை தட்டிக் கேட்க மாட்டாங்களா.. குடிச்சிருக்காளா.. நாத்தம் குடலை புடுங்குதே..! ஐயோ இவளை எதுக்காக இங்க தூக்கிட்டு வந்தீங்க உங்களுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா..!"
"ஏய் நான் உன்ன பேசாதன்னு சொன்னேன்.. ஐ நோ வாட் ஐ அம் டூயிங்..!"
"ஐயோ இவ ஒரு திருடி..!"
"இவ திருடி இல்ல..! அது ஒரு டிஸ்ஆர்டர்.. தெரியாம வாய்க்கு வந்தபடி எதையாவது உளராத..! இதோ இப்ப நீ ஓயாம வாய் பேசிட்டு இருக்கற மாதிரி இதுவும் ஒரு வேண்டாத பழக்கம்.. அவ்வளவுதான்.." என்றபடியே தேம்பாவின் கரத்தை பற்றி நாடித்துடிப்பை பரிசோதித்தான்..
"ஓஹோ என்னையே குறை சொல்றீங்களா..! முதல்ல இவ யாரு.. அத முதல்ல சொல்லுங்க..! இல்லன்னா வீட்ல இருக்கிறவங்களை எழுப்பி கூட்டிட்டு வந்து இங்க நிக்க வைப்பேன்.." என்றவளை கண்டுகொள்ளாமல் தனது மருத்துவ பெட்டியை எடுத்து வந்து மருந்தை சிரிஞ்சில் செலுத்தி அவள் நரம்பை தேடி கண்டுபிடித்து ஊசி குத்தவும் திலோத்தமா ஒன்றும் புரியாமல் விழித்திருந்தாள்..
"என்னாச்சு..? எதுக்காக இன்ஜெக்ஷன் போடுறீங்க.."
"மயக்கத்துல இருக்கா..! ஒரு எமர்ஜென்சி சப்போர்ட் அவ்வளவுதான்..'
"புரியல..!"
"உனக்கு எதையும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை.. இங்க பாரு.. இவ என்னோட பேஷன்ட்" என்று சொல்ல வந்தவன்.. ஒருவேளை அப்படி சொன்னால் திலோத்தமா தேம்பாவணியை மனநிலை சரியில்லாதவள் என்ற முத்திரை குத்தி மேலும் நோகடிப்பாள் என்பதை கருத்தில் கொண்டு
"இவ என்னோட கெஸ்ட்..! ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து இவளை காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு தேம்பா இங்கதான் இருக்க போறா.. வீட்ல நான் பேசிக்கறேன்.. நீ கொஞ்ச நேரம் வாயைத் திறக்காம இரு.." என்றிருந்தான்..
"நீங்க இந்த பொண்ண கொண்டு வந்து உங்க வீட்ல தங்க வைக்கறதும்.. அதுக்கு உங்க வீட்டுல இருக்கறவங்க சம்மதிக்கறதும் இரண்டாம்பட்சம்.. ஆனா இவளை எதுக்காக பெட்ரூம் வரை தூக்கிட்டு வந்தீங்க..!"
தன் முழங்கால்களில் கை வைத்து குனிந்து தேம்பாவணியை பார்த்துக் கொண்டிருந்தவன் திலோத்தமாவின் கேள்வியில் தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று மார்பின் குறுக்கே கைகட்டி அவளைப் பார்த்தான்..
"என் பெட்ரூம்ல படுக்க வைக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை..?"
"அ.. அது.. உங்க வீட்டு ஆளுங்க கேள்வி கேப்பாங்களே.. உங்க படுக்கையறை வரை ஒரு பொண்ணு வந்திருக்காளே அவ யாருன்னு கேட்டா நான் பதில் சொல்ல வேண்டாமா.. உங்க கெஸ்ட்னா தனி ரூம்ல படுக்க வைங்க..!"
"ரொம்ப கவலைப்படாத அவங்க கேள்விக்கு நான் பதில் சொல்லிக்கறேன்.. ஷீ இஸ் ஸ்லீப்பிங்.. டோன்ட் டிஸ்டர்ப் ஹேர்..! போய் உன் ரூம்ல படு..!" அலட்சியமாக சொல்லிவிட்டு முன்னே நடந்தான்..
"அப்ப நீங்க..?" அவசரமாக கேட்டாள் திலோத்தமா..
"நான் ஹால்ல சோபால படுத்துகிறேன். ஏதாவதுன்னா என்னை கூப்பிடு..!" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவன் சோபாவில் படுத்து உறங்கி இதோ இப்போது வெண்மதியிடம் மாட்டிக் கொண்டான்..
திலோத்தமா தனது உள்ளறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த கணம் முதலில் பார்த்த காட்சி போர்வைக்குள் சம்மணமிட்டு அமர்ந்தபடி அழுது கொண்டிருந்த தேம்பாவணியைத்தான்..
தேம்பாவணிக்கும் ஓட்டலில் பார்த்த அந்த குடும்பத்தில் ஒருத்தியை இங்கு கண்டதில் அதிர்ச்சி தான்.. அதுவும் இந்த கோலத்தில்.. கூனிக்குறுகி போர்வைக்குள் முகத்தை நுழைத்துக் கொண்ட நேரம்..
திலோத்தமா எதுவும் பேசாமல் இதோ நேரடியாக வருணிடம் வந்து விஷயத்தை சொல்லியிருக்க.. அனைவரையும் ஓரந் தள்ளிவிட்டு அறைக்குள் ஓடியிருந்தான் அவன்..
"என்னாச்சு பேபி ஏன் அழற..!"
பக்கத்தில் அமர வந்தான்..
"கிட்ட வராதீங்க பக்கத்துல உட்காராதீங்க ப்ளீஸ்.." முகத்தை மூடிக்கொண்டு விம்மினாள் தேம்பாவணி..
"ஏன் இப்படி கத்தி அழற.. யாராவது கேட்டா என்னைத்தான் தப்பா நினைப்பாங்க.. பி மெச்சூர்ட்.. விஷயம் என்னன்னு சொல்லு..! ஏதாவது கனவு கண்டியா எதையாவது பார்த்து பயந்துட்டியா..?"
"அ.. அதெல்லாம் இல்ல..! ஐ வெட் த பெட்.. ஹாய் ஃபீல் எம்பாரேஸ்ட் அபௌட் மை செல்ப்.. இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல..! வேணும்னு பண்ணல எப்படி நடந்ததுன்னு தெரியல.."
"அவ்வளவுதானா..!" அவன் மிக இயல்பாக கேட்க.. அழுகை சட்டென நின்றது.. மெதுவாக முகத்தை மூடியிருந்த கரத்தை விலக்கினாள்..
"உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா..?"
"ஏன் கோபம் வரணும்..! தூக்கத்துல நீ பயந்து போயிருக்கணும் இல்லைனா நேத்து எடுத்த டிரக்ஸ்ல கான்ஷியஸ் இல்லாம இப்படி பண்ணியிருக்கணும்..! இது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை.. நீ நெனச்சா மாத்திக்கலாம்.. கொஞ்சம் மன பயிற்சி வேணும் அவ்வளவுதான்..!" தூசி தட்டுவது போல் சாதாரணமாக சொல்ல இமைதட்டி விழித்தாள் அவள்..
"நீங்க என்னை கேவலமா நினைப்பிங்களா..?"
"அடேய்..!" அவள் கன்னத்தை தட்டி சிரித்தான் வருண்..!
"இதுல கேவலமா நினைக்கறதுக்கு என்ன இருக்கு.. ஐம் எ டாக்டர்.. என்னை பொருத்தவரைக்கும் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.."
"ஓஹோ நீங்க டாக்டர் அதனால தான் சாதாரணமா எடுத்துக்கிட்டீங்க.. இல்லைனா கண்டிப்பா என்னை திட்டி இருப்பீங்க.."
"நான் டாக்டரா இல்லாம போனாலும் இப்படித்தான் பேசியிருப்பேன்.. இதையே நினைச்சு கில்ட்டி யா ஃபீல் பண்ணாத..! 15 வயசு வரைக்கும் படுக்கையில் பாத்ரூம் போறதா என்கிட்ட நிறைய குழந்தைகளை கூட்டிட்டு வந்திருக்காங்க..! உனக்கு ஒரு நாலு வயசு கூடுதல் நீயும் குழந்தை தானே..! விடு பாத்துக்கலாம்.."
"இப்ப என்ன பண்றது..! யாராவது இப்படியே என்னை பார்த்தா என்ன நினைப்பாங்க..?"
"நான் அம்மாகிட்ட போய் விஷயத்தை சொல்லி ஏதாவது டிரஸ் கிடைக்குமான்னு பார்க்கறேன்..!"
"அப்புறம் மத்த விஷயத்தை பேசிக்கலாம்" என்று அவன் எழுந்து வெளியே வர..
இரண்டு பெண்களும் காளி தேவதையாக மாறி இடுப்பில் கை வைத்து அவனுக்காக காத்திருந்தனர்..!
அதிலும் சாரதா அல்ட்ரா அவதாரமாக நின்று கொண்டிருந்தார்..
"என்னடா நடக்குது.. வெண்மதி சொல்றதெல்லாம் உண்மையா..? ஏதோ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து உன் பெட் ரூம்ல படுக்க வச்சிருக்கியாம்.. யாருடா அது.. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னவன் இப்ப சின்ன வீடும் சேர்த்து வச்சிருக்கியா..?"
"ஆஆஆ.. அம்மா பேசி முடிச்சிட்டியா..! என்ன ஏதுன்னு பொறுமையா கேக்கற பழக்கமே கிடையாதா உங்களுக்கு.. வாய்க்கு வந்தபடி உங்க இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போறீங்க.. அந்த பொண்ணு என்னோட கெஸ்ட்.. மத்த ரூமெல்லாம் ஆக்குபைடு.. ஒரே ஒரு ரூம்தான் ஃபிரியா இருக்கு.. அதுவும் டஸ்ட்டா இருக்கு.. அதனாலதான் அவளை கூட்டிட்டு வந்து என் ரூம்ல படுக்க வச்சேன்.. போகக்கூடாத இடத்துக்கு போய் விபரீதமான பிரச்சனைகள்ல சிக்கிக்கிட்டா..! அவளை காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்..!"
"அப்படியா அய்யோ அவசரப்பட்டு நான் தப்பா பேசிட்டேனே..?" குற்ற குறுகுறுப்பில் அசடு வழிந்தாள் சாரதா..
"லாஜிக்கா யோசிக்கவே மாட்டீங்களா.. நான் சோஃபாவுலதான படுத்து இருந்தேன்.. திலோத்தமாவும் அந்த பொண்ணு மட்டும் தானே உள்ள இருந்தாங்க..!"
"சாரிடா மன்னிச்சுக்க.. அப்படி என்னடா பிரச்சனை அந்த பொண்ணுக்கு..?"
"அதெல்லாம் நான் அப்புறம் சொல்றேன்.. முதல்ல நம்ம நிவியோட பழைய டிரஸ் ஏதாவது இருந்தா தேடி எடுத்துட்டு வாங்க..!"
"அவ போகும் போதே எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போய்ட்டாளே.. ஏதாவது தேறுமான்னு பாக்கறேன்.." சாரதா அவ்விடம் விட்டு நகர்ந்து செல்ல..
"டேய் வருண்.. நான் போய் அந்த பொண்ண பார்த்துட்டு வரேன்" என்று உள்ளே நுழைய போன வெண்மதியை தடுத்து நிறுத்தினான் வருண்..
"நீ அவளை பார்க்க வேண்டாம்..! ரொம்ப பயந்து போயிருக்கா.. புது மனுஷங்களை கண்டா மிரளுவா.. அவ டிரஸ் மாத்திக்கிட்டு பிரஷ்ஷாகட்டும்.. டிபன் சாப்பிட வெளியே வரும்போது பாத்துக்கோ..!"
"எல்லாம் சரிதான்டா.. உள்ள இருக்கிறது ஒரு பொம்பள பொண்ணு.. திலோத்தமாவே வெளியே இருக்கும்போது எதுக்கெடுத்தாலும் நீ இப்படி தடுக்கி விழுந்து உள்ள ஓடி போறது நல்லாவா இருக்குது.."
"வேற என்ன செய்ய சொல்ற..!"
"அந்த பொண்ணுக்கு எது செய்யணும்னாலும் திலோத்தமாவ கூப்பிட்டு அவகிட்ட செய்ய சொல்லேன்..!"
டென்ஷனாக நெற்றியை நீவியபடி கண்களை மூடினான் வருண்..
"அக்கா நான் ஒரு டாக்டர்.. எனக்கு ஆம்பள பொம்பள பேதமெல்லாம் கிடையாது..! இந்த நேரத்துல அவளுக்கு உதவி வேணும். அதைத்தான் செஞ்சுட்டு இருக்கேன்.." என்றான் கடுப்பாக..
"என்னடா பிரச்சனை அவளுக்கு..?"
"அ.. அது.. எனக்கு தெரிஞ்ச பொண்ணு.. ராத்திரி தனியாக வரும்போது ரவுடிங்க வழி மறிச்சு பிரச்சினை பண்றாங்கன்னு போன் செஞ்சா.. நான்தான் போய் காப்பாத்தி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்.. அவளோட அப்பா பிசினஸ் விஷயமா வெளிநாடு போயிருக்காராம்..! தனியா இருக்கறதுக்கு பயப்படுறா.. அதனால இந்த பொண்ணு கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்லதான் இருப்பா.."
"இருக்கட்டும் இருக்கட்டும்.. தாராளமா எத்தனை நாள் வேணும்னாலும் நம்ம வீட்ல இருக்கட்டும்.. ஆனா தெரிஞ்ச பொண்ணுன்னு சொன்னியே, எப்படி தெரிஞ்ச பொண்ணு..!"
"வெண்மதிஇஇஇஇ..! ஒரு நிமிஷத்துல எத்தனை கேள்வி கேட்ப.. உன்னையெல்லாம் கட்டி மேய்க்கற உன் புருஷன் இன்னும் பரதேசம் போகாம இருக்கறதே பெரிய ஆச்சரியம் தான்.. தயவு செஞ்சு இங்கிருந்து போ..!" அவன் காட்டுகத்தலில்
"ஏன்டா காலங்காத்தால இப்படி கோச்சிக்கிற.. கேட்டு தெரிஞ்சுக்கறத்துல என்ன தப்பு.. தெரிஞ்ச பொண்ணுன்னா எப்படி.. சொந்தமா.. பிரண்டா.. தங்கச்சியா..?"
"நீ இன்னும் வாய மூடலையா..?"
"இதோ மூடிட்டேன்..!" வெண்மதி அங்கிருந்து ஓடிவிட சாரதா ஒரு சுடிதாரோடு வருணிடம் வந்திருந்தாள்..
"அம்மா நீயே இதை அந்த பொண்ணு கிட்ட கொடுத்து போட சொல்லு.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. அவ படுக்கையை வெட் பண்ணிட்டா.."
"என்னது..!"
ப்ச்..! பிடரியை வருடியபடி.. "பெட்ல பாத்ரூம் போய்ட்டா.. தயவு செஞ்சு எதுவும் கிண்டல் பண்ணி சிரிச்சிடாதே.. திட்டி அமர்க்களம் பண்ணிடாத.. பாவம் சின்ன பொண்ணு பயத்துல ஏதோ செஞ்சுட்டா..!"
"ஏன்டா என்னை பார்த்தா ராட்சசி மாதிரி தெரியுதா..! இந்த சின்ன பிரச்சனையை நான் சமாளிக்க மாட்டேனா.. இதை கூட நீ சொல்லித்தான் அனுப்பனுமா.. நான் உன்னோட அம்மா.. எத்தனை குழந்தைகளை வளர்த்திருக்கேன்..! எனக்கு தெரியாதா இந்த மாதிரி நேரத்துல எப்படி பேசணும்னு என்ன செய்யனும்னு"
"நீ என்னோட செல்லக்கட்டி மம்மி உனக்கு தெரியாத விஷயம் என்ன இருக்கு சாரும்மா.." அவள் கன்னத்தைக் கிள்ளி ஐஸ் வைத்தவன்.. "அவ கொஞ்சம் ஆக்வேர்டா ஃபீல் பண்ணாலும் நீ சமாளிச்சு மெல்ல பேச்சு கொடுத்து நார்மல் ஆக்கிடு..!" என்று சொல்லி தன் தாயை அறைக்குள் அனுப்பினான்..
இன்னும் போர்வைக்குள் சுருண்டு அமர்ந்திருந்தாள் தேம்பாவணி..
மாற்று உடையோடு உள்ளே வந்த சாரதா.. டால்ஃபின் மீன் குட்டி போல் விழித்துக் கொண்டிருந்த தேம்பாவணியை கண்டு திகைத்துப் போனாள்..
"ஆன்ட்டி நீங்களா..?"
"நீயா பொண்ணே..?"
"என் பையன் சொல்ல சொல்ல கண்ணு முன்னாடி உன் முகம் தான் வந்து போச்சு..! ராத்திரியில வீட்டுக்குள்ளார படுத்து உறங்காம வெளியில போய் என்னத்த ஊர் சுத்தற வேலை உனக்கு..!
தேம்பாவணி உதட்டை இறுக்க மூடியபடி அமைதியாக இருந்தாள்..
"சரி அதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் குளிச்சு இந்த டிரஸ்ஸ மாத்திட்டு வா.. உள்ளுடுப்பும் இருக்கு.. உனக்கு சரியா இருக்கும்னு நினைக்கிறேன்.."
"இல்ல என்னால எழுந்துக்க முடியாது நான் வருண் சார பாக்கணும்.." தேம்பா உள்ளிறங்கிய குரலில் சொன்னாள்..
"அதெல்லாம் எழுந்துக்கலாம் வருண் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டான்.. இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல.. நீ முதல்ல எழுந்திரு..!" என்று போர்வையை விலக்கிவிட்டு அவளை எழுப்பி நிற்க வைத்தவள்.. முழங்காலோடு நின்றுவிட்ட அந்த உடையை கண்டு பெரிதாக கண்களை விரித்து மோவாயில் கைவைத்தபடி.. "அடியே பாப்பா என்ன டிரஸ் இது.. இங்க இருக்கிற வரைக்கும் இப்படியெல்லாம் அரைகுறையா உடுத்த கூடாது.. ஒழுக்கமா டிரஸ் பண்ணனும் புரியுதா.. ஆனாலும் நல்லாத்தான் இருக்குது.. பொம்மையாட்டம்" என்று நகர்ந்து படுக்கை விரிப்பில் கைவைக்க..
"ஆன்ட்டி அந்த பெட்ஷீட்ட தொடாதீங்க.." என்றாள் அவசரமாக..
"அட இப்ப என்ன..? நீயே எதுக்கு ஊர கூட்டற.. என் மரும வர்றதுக்கு முன்னாடி இதை எடுத்துட்டு போய் அலசி போட்டுடறேன்..! அவ பார்த்துட்டா ஏதாவது ஏடாகூடமா பேசுவா.. உன் மனசு கஷ்டப்படும்.. நீ போய் குளி.." போர்வையை சுருட்டி கையில் எடுத்துக் கொண்டாள் சாரதா..
"உங்களுக்கு அருவருப்பா இல்லையா..?"
"என்ன அருவருப்பு.. சகிப்புத்தன்மை இல்லனா இத்தனை புள்ளைங்களுக்கு அம்மாவா இருக்க முடியுமா..! நீ ஏன் சின்ன விஷயத்தை போய் பெரிசு பண்ற.. போ போய் குளிச்சிட்டு வா.. டிபன் ரெடியா இருக்கு.. சாப்பிடலாம்..!" சொல்லிவிட்டு படுக்கை விரிப்பை எடுத்துக்கொண்டு வெளியே சென்று சாரதாவை இமைக் கொட்டாமல் பார்த்தாள் தேம்பாவணி..
தொடரும்..