• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 17

Active member
Joined
Jul 31, 2024
Messages
99
"இங்க வா சுப்பு. ஒரு நிமிஷம் இப்படி உட்காரு.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்." உண்டு முடித்த பிறகு அடுப்படியை ஏறக் கட்டி வைத்துவிட்டு கதவை சாத்தும் நேரத்தில் பாய் விரித்து தலையணை போட்டு வெளியே அமர்ந்திருந்தவன் சுப்ரியாவை அழைத்தான்.

"உள்ள வாங்க எப்படி உட்கார்ந்து பேசுவோம்."

"உள்ள அனலடிக்குதுமா. உட்கார முடியல. வெளிய நல்லா சில்லுனு இருக்கு.. கொஞ்ச நேரம் இப்படி காத்தாட வந்து உட்காரு." அவன் அழைக்க மறுப்பில்லாமல் வெளியே வந்து அவனுக்கு சற்று தள்ளி பாயில் அமர்ந்தாள்‌.

நீண்ட மூச்செடுத்து அவளை பார்த்தான் தர்மன்.

"என்னைக்காவது நான் சாப்பாட்டு விஷயத்துல கணக்கு பார்த்துருக்கேனா..? எதுக்காக என்னை பாத்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட.. இன்னும் கொஞ்சம் சோறு போட்டுக்கட்டுமான்னு நீ கேட்டதும் என் மனசு எப்படி துடிச்சு போச்சு தெரியுமா..? அளவு தாண்டி சாப்பிடக்கூடாது.. இந்த விஷயம் தான் செய்யணும் இதை செய்யக்கூடாதுன்னு நான் என்னைக்காவது உன்னை கட்டுப்படுத்தி இருக்கேனா.?" அவன் மென்மையாக கேட்க..

"ஐயோ அப்படியெல்லாம் நீங்க சொன்னதில்ல தர்மன்." சுப்ரியா பதறினாள்..

"அப்புறம் ஏன் என்னை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட.. என்னை அவமானப் படுத்தறதுக்காகவா..?"

"நீங்க என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க.!"

"நீதான் என்னை தப்பா புரிஞ்சுட்டு இருக்க..! அன்னைக்கு என்னடான்னா நோய் வந்தவ.. அதனாலதான் என்னை தொட தயங்கறீங்கன்னு சொன்ன.. இப்ப சாப்பாட்டுக்கு கணக்கு பார்க்கறவன் மாதிரி சோறு போட்டுக்காம பயந்து என்கிட்ட அனுமதி கேக்கற.. என்னை பத்தி உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க.. நீ இப்படி பண்றதெல்லாம் என் மனசை கஷ்டப்படுத்தனும்னு உனக்கு தெரியுதா இல்லையா..?" மிக நிதானமாக அதே நேரத்தில் கூர்மையான த்வனியில் கேட்டான்.

"தப்புதான் தர்மன். சில நேரத்துல எது பேசணும் எது பேச கூடாதுன்னு எனக்கு ஒன்னும் புரியறதுல்ல. ராஜேஷ் இப்படித்தான் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கணக்கு பார்ப்பான். அவனோட குடும்பத்துக்கு மட்டும் கணக்கில்லாம கேட்டதை எல்லாம் வாங்கித் தருவான். எனக்கு கடுகு பெருமானமுள்ள பொருள் வாங்கி தந்தாலும் விலைவாசியை பத்தி நீளமா ஒரு லக்சர் கொடுப்பான். செருப்பு அறுந்து போச்சுன்னா கூட புது செருப்பு வாங்கறதுக்கு அவன் கிட்ட அத்தனை பேச்சை கேக்க வேண்டியிருக்கும். அதுக்கு பயந்துட்டு அறுந்த செருப்பை தச்சு தச்சு போட்டுகிட்ட நாட்களெல்லாம் உண்டு. சாப்பாட்டுக்கு ரொம்ப கணக்கு பாப்பான். என்னமோ ஒரு மூட்டை அரிசியையும் நான்தான் முழுங்கற மாதிரி அரிசி இந்த விலை காய்கறி அந்த விலைன்னு நாட்டு பொருளாதாரத்தை பற்றி ரொம்ப கவலைப்பட்டு பேசுவான். அவனுக்கு பயந்து நான் அளவாத்தான் சாப்பிடுவேன். எத்தனையோ நாள் ரோஷப்பட்டு பசியில சாப்பிடாம கூட இருந்திருக்கேன். ஆனா எத்தனை நாள் பசிக்க தாங்க முடியும். சொல்லுங்க"

தர்மன் மனதில் ஈரம் சுரந்து கவலையோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

"நான் உங்கள தப்பா நினைக்கல.. ஆனா நீங்களும் விலைவாசி உயர்வைச் சொல்லி கணக்கு பார்க்கும் போது எனக்கு ராஜேஷ் நியாபகம் தான் வந்தது அன்னைக்கு கூட மூட்டை அரிசி தங்கம் விலை விக்குதுன்னு சொன்னிங்களே.. ராஜேஷ் கூட இப்படித்தான் சொல்லுவான்."

"அதனால என்னையும் அவனையும் ஒப்பிட்டு பாத்தியாக்கும்.." தர்மன் குரலில் கோபம்.

"இல்ல இல்ல நான் அப்படி சொல்ல வரல.. நான் எல்லாருக்குமே பாரமாத்தான் இருக்கேன். உங்களுக்கு கஷ்டம் கொடுத்து இப்படி உங்க உழைப்புல உட்கார்ந்து சாப்பிடறது எனக்கு ரொம்ப சங்கடமா இருக்குது."

"கஷ்டம்னு யார் சொன்னா.? இவ்வளவு நாள் வீட்ல தனியா இருந்தேன். வீட்டுக்கு ஏண்டா வரேன்னு இருக்கும். இப்ப? வீட்டுக்கு போனா ஒரு பொண்ணு இருப்பாங்கற நினைப்பு மனசுக்கு எவ்வளவு இனிமையா இருக்கு தெரியுமா. அப்படியே வீட்டுக்குள்ள புதுசா ஒரு வாசம் வீசற மாதிரி தோணுது. நான் உனக்காக செலவு பண்றதுக்கு என்னைக்குமே கணக்கு பார்த்ததில்லை சுப்பு. நீ இந்த மாதிரி சங்கடமா ஃபீல் பண்ணிட கூடாதுன்னு தான் நீ காசு திரும்பி தரேன்னு சொன்ன போது கூட சரின்னு சொன்னேன். ஆனா நீ வழக்கம்போல என்னை தப்பா தான் நினைச்சிருக்க."

"இல்ல நான் உங்கள தப்பா.."

"ஒரு நிமிஷம் இரு.. நான் பேசி முடிச்சிடறேன். நான் ஆசிரமத்துல வளர்ந்தவன் சுப்பு. ஒரு பருக்கை சோறு மதிப்பும் பசியோட வலியும் எனக்கு தெரியும். யார் கண்ணுல பசி தெரிஞ்சாலும் உடனே உடனே போய் சாப்பாடு வாங்கி கொடுப்பேன்.. இதுதான் என்னோட குணம்.‌ கணக்கு பாக்கறதும் விலைவாசி உயர்வை சொல்லி புலம்பறதும் கஞ்சத்தனம்னு ஏன் நினைக்கிற. பையன் பொறுப்பா இருக்கானேன்னு இன்னொரு கோணத்தில் கூட பார்க்கலாமே..? அவனவன் தண்ணி அடிக்கிறானுங்க.. தம்மடிக்கிறானுங்க.. எப்படி எப்படியோ சீரழிஞ்சு போறானுங்க. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இருக்கற காசை அளவா செலவு பண்ணிட்டு மிச்சத்தை சேர்த்து வைக்கறேன்.. இது ஒரு தப்பா.? நீ என்னை பாராட்டலைனா கூட பரவாயில்லை இப்படி கேவலமா நினைச்சிருக்க வேண்டாம்." உதட்டை குவித்து கண்களில் கோபத்தோடு வேறு பக்கம் திரும்பிக் கொள்ள..

"நீங்க ஒரு ஜென்டில்மேன் தர்மன்..‌ தப்பான மனுஷங்களோட பழகி பழகி என் மனசும் குறுகிப்போச்சுன்னு நினைக்கறேன்.. அதனாலதான் அப்படி பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்."

"இங்க பாரு சுப்பு. இனிமே சாப்பாட்டுக்கு கணக்கு பாக்காதே உனக்கு எவ்வளவு தோணுதோ சாப்பிடு. என்ன வேணுமோ கேளு. நான் வாங்கி தருவேன். இப்படித்தான் ஏதாவது அரிசி பருப்பு யானை விலை குதிரை விலைன்னு புலம்புவேன்.. அதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா எடுத்துக்காதே. என் குணமே அப்படித்தான். சட்டுனு என்னை மாத்திக்க முடியாது.‌ என் வாய் கண்டமேனிக்கு ஏதாவது உளறுச்சுன்னா பொறுத்துக்கோ. அதை மனசுல வேற மாதிரி எடுத்துக்காதே."

சுப்ரியா சிரித்துக் கொண்டே சரியென தலையசைத்தாள்.

"சரி போய் படு. எனக்கும் தூக்கம் வருது." என்று பாட்டிலை திறந்து தைலத்தை எடுத்து தலையிலும் கழுத்திலும் தேய்த்துக் கொண்டான்.

"நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே.?"

"அப்ப கோவப்படுற மாதிரி ஏதோ சொல்ல போறேன்னு தெரியுது.. என்ன விஷயம்." தைலத்தை ஆழ்ந்து மூக்கில் உறிஞ்சிய படி கேட்டான்.

"இ.. இல்ல.. நான் வேணும்னா ஏதாவது வேலைக்கு போகட்டுமா. உங்க ஹாஸ்பிடலையே ஏதாவது வேலை வாங்கித் தாங்களேன்.."

அவளை கூர்ந்து பார்த்தான் தர்மன்.

"இன்னும் நீ என்னை நம்பலையா சுப்பு."

"ஐயோ இது அப்படி இல்ல தர்மன். நானும் வேலைக்கு போனா நம்ம ரெண்டு பேருக்குமே உதவியா இருக்குமே.?"

"உனக்கே ஒருத்தரோட உதவி வேணும்.. நீ ரொம்ப பலவீனமா இருக்க சுப்பு. போன முறை செக்அப் போன போது காயத்ரி டாக்டர் என்னை தனியா கூப்பிட்டு என்ன சொன்னாங்க தெரியுமா.? நீ ரொம்ப வீக்கா இருக்கியாம்.. உடம்புல இரத்தம் ரொம்ப கம்மியா இருக்குதாம். சத்தான ஆகாரம் கொடுக்கணுமாம். நல்லா ஓய்வெடுக்க சொல்லனுமாம்.. டாக்டர் இப்படி சொல்றாங்க.. நீ என்னடான்னா வேலைக்கு போகட்டுமான்னு கேக்கற. முதல்ல நல்லபடியா குழந்தையை பெத்து எடு.. மத்த கதைய அப்புறம் பாத்துக்கலாம். குழந்தையை வயித்துல வச்சு வளர்க்கறதே பெரிய வேலை தான். அதை ஒழுங்கா செய். என்ன..? நான் சொல்றது புரியுதா..?"

"புரியுது நான் தூங்க போறேன்." சுப்ரியா எழுந்து கொள்ள.

"சரி.. பாத்ரூம் போறதுன்னா லைட் போட்டுக்கோ.." என்று விட்டு தலையணையில் விழுந்து கண்கள் மூடினான் தர்மன்.

"டேய்.. தர்மா இங்க வா.." காலையில் அவன் வேலைக்குப் தயாராகி கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டு உரிமையாளர் ராஜி அவனை அழைத்தார்.

"என்னக்கா..?" வாசலில் போய் நின்றான் தர்மன்..

"இந்த லைட் மின்னி மின்னி எரியுது.. என்னன்னு கொஞ்சம் பாருடா.! சாயங்காலம் உன்னை புடிக்க முடியல. எப்ப வர்ற.. எப்ப போற ஒன்னும் புரிய மாட்டேங்குது."

தர்மன் தனது கை கடிகாரத்தை பார்த்துவிட்டு உள் வரை சென்று அவனாகவே உரிமையோடு ஒரு ஸ்டூலை எடுத்து போட்டு மேலே ஏறினான்.

"அக்கா.. டெஸ்டர் குடுங்க.. அதோ அந்த செல்ஃப்ல இருக்கு பாருங்க.. போனவாட்டி ஃபேன் மாட்டும்போது அங்கதான் வச்சிட்டு போனேன்." அவன் சொன்ன இடத்திலிருந்து டெஸ்டரை எடுத்து வந்தார் ராஜி.

ஐம்பதை தொட்டு ஆங்காங்கே முடிகள் நரைத்திருக்க சற்று கனத்த சரீரத்தோடு இடுப்பை பிடித்துக் கொண்டு நின்றிருந்தவர் நடப்பதற்கே சிரமப்பட்டார்.

முதுமையின் ஆரம்பத்தால் எதிர்கொள்ள வேண்டிய மெனோபாஸ் முதுகு வலி இடுப்பு வலி என பலவித தொந்தரவுகளால் தர்மன் கொடுக்கும் வாடகை பணம் மொத்தமும் மருத்துவமனைக்கே செலவழிகிறது.

ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்தாயிற்று. கணவன் அரசாங்க வேலையிலிருந்து ரிட்டயர்மென்ட் வாங்கிக் கொண்டு தொலைக்காட்சி செய்தித்தாள் என வீட்டுக்குள்ளேயே அடங்கிவிட.. வெளி வேலைகளுக்காக அவர்களுக்கு சிக்கிய அடிமை.. அன்பு மகன் அனைத்தும் இந்த தர்மன்தான்.

"தர்மா கடைக்கு போறியா..? அப்படியே இந்த லிஸ்ட்ல இருக்கிறதையெல்லாம் வாங்கிட்டு வந்துடறியா..?"

"தர்மா அக்கா வீட்டுக்கு போகணும். இவரை தொந்தரவு பண்ண முடியாது.. எழுந்தா கை வலி கால் வலின்னு அனத்துவார். வேலைக்கு போகும்போது ஒரு குரல் கொடு அப்படியே போற வழியில நானும் இறங்கிக்கறேன்.."

அன்றொரு நாள் அர்த்த ராத்திரியில் கதவைத் தட்டி. கலைந்த தலையும் அழுத கோலமுமாக "தர்மா அவர் நெஞ்சு வழியில் துடிக்கிறார் வந்து என்னன்னு பாரேன். எனக்கு பயமா இருக்கு..!" என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு சொன்னபோது எங்கெங்கோ ஓடி ஆட்டோவை அழைத்து வந்த தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்து சபரி வாசன் குணமாகும் வரை அங்குமிங்குமாய் அலைந்தது தர்மன்தான்

அன்று தர்மன் மட்டும் இல்லையென்றால் இன்று கண்ணாடியை சரி செய்து கொண்டு கூடத்தில் கால் மேல் கால் போட்டு பேப்பர் படிக்கும் சபரி வாசன் இல்லை. ராஜியின் கணவர் சபரிவாசன் பெரிதாக யாரிடமும் கலந்து பேசிக் கொள்வதில்லை. ஆனால் தர்மனை பார்த்தால் மட்டும். "வா தர்மா என்ன ஆளையே காணோம்.." வார்த்தைகளை முடித்து ஒரு புன்னகையோடு நிறுத்திக் கொள்வார்.

"இன்றும் அப்படித்தான்.! வாடா தர்மா இந்த டியூப்லைட் தான். ரொம்ப மக்கர் பண்ணுது என்னன்னு பாரு." என்றவர் படுக்கையறைக்குள் நுழைந்து கொள்ள தர்மனுக்கு தேவையான உபகரணங்களை எடுத்து தந்தது ராஜி தான்..

"ஷார்ட் சர்க்யூட்..‌ பியூஸ் போயிடுச்சுக்கா.. புதுசு தான் மாத்தணும்.‌ சாயந்திரம் வரும் போது புது டியூப்லைட் வாங்கிட்டு வரேன் நாளைக்கு காலைல மாட்டிடலாம்." என்றபடியே இறங்கினான்.

"இரு பணம் கொண்டு வரேன் ராஜி" உள்ளே சென்றார்..

"தர்மா புது டியூப்லைட் எவ்வளவுடா வரும்.?"

எல் இ டி னா.. இருநூத்தி ஐம்பது இல்லைன்னா முந்நூறு ரூபாய் வரும்க்கா.."

ராஜி பணத்தை எடுத்து வந்து கொடுக்க வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு "சரி வரேன்" என்று அவன் நகர போன நேரத்தில்..

"தர்மா ஒரு நிமிஷம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.." என்று அவனை நிறுத்தினார் ராஜி.

"சொல்லுங்கக்கா..!"

"உன் கூட தங்கிருக்கிற பொண்ணு யாருடா..? தயக்கத்தோடு மீண்டும் அந்த கேள்வியை கேட்டார்."

"அதான் சொன்னேனே..! எனக்கு தெரிஞ்ச பொண்ணு. வீட்ல கொஞ்சம் பிரச்சனை அதனால என் கூட வந்து தங்கி இருக்காங்கன்னு."

"சரிதான் தம்பி. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு.. ஆனா அக்கம் பக்கத்துல வேற மாதிரி பேசுவாங்களே கண்ணா.. கல்யாணமாகாத ஒரு பொண்ணும் பையனும் ஒண்ணா இருக்கிறதை ஏத்துக்கற அளவுக்கு நம்ம மனுஷங்களோட மனசு இன்னும் விசாலம் அடையலையே?"

தர்மனின் முகம் மாறியது. "இப்ப என்ன பண்ண சொல்றீங்கக்கா.. வீட்டை காலி பண்ண சொல்றீங்களா..?"

"ஏன்டா இப்படி பேசற..! நீ என் புள்ள மாதிரி.. உன்னை போய் வீட்டை காலி பண்ண சொல்லுவேனா.. அந்த பொண்ண வேற ஏதாவது பாதுகாப்பான இடத்துல தங்க வைக்கலாமே.?"

"வேற எந்த இடமும் கிடைக்கலக்கா. எத்தனையோ ஹாஸ்டல்ல கேட்டு பாத்துட்டேன். ஃப்ரெண்ட் வீட்டுல கூட தங்க வைக்கலாம்னு நினைச்சேன்.. எதுவும் செட் ஆகல. அவ இப்ப பெரிய பிரச்சனையில் இருக்கா. ஆதரவில்லாம எங்க போறதுன்னு தெரியாம இருக்கிறவளை அப்படியே நடுரோட்ட தவிக்க விட சொல்றீங்களா..?"

"புரியுதுடா.. இப்ப என்ன..? அவள பாதுகாப்பா தங்க வைக்கிறதுதானே உனக்கு பிரச்சனை. இவரோட தாய் மாமன் பொண்ணு சாரதா வொர்க்கிங் உமன் ஹாஸ்டல்ல வார்டனா வேலை பார்க்கறா.. ஹாஸ்டல் அட்ரஸ் அவளோட போன் நம்பர் தரேன் போய் பேசி பாரு. நானும் ஒருவாட்டி போன் பண்ணி எனக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லி வைக்கறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும்."

ஒரு சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்திருந்தவன் பிறகு..

"சரிக்கா நான் போய் என்னன்னு பாக்கறேன்.." சுரத்தில்லாத குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

மாலையில் ராஜி சொன்ன ஹாஸ்டலுக்கு சென்று வார்டனை சந்தித்து ஹாஸ்டல் பற்றி விசாரித்து விவரங்களை தெரிந்து கொண்டு வர நேரமாயிற்று..

"ஏன் இவ்வளவு நேரம்" மாடிப்படியின் விளிம்பில் நின்றிருந்தாள் சுப்ரியா.

"ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு. எதுக்காக இங்க வந்து நிக்கற.. அதுவும் இருட்டுல.."

"இல்ல எவ்வளவு நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது ரொம்ப போர் அடிச்சது. வெளியில நல்ல காத்து அதனாலதான் இங்க வந்தேன்."

"கர்ப்பமா இருக்குற பொண்ணு நேரங் கெட்ட நேரத்தில இப்படி வெளியில நிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. காத்து கருப்பு அடிச்சிடுமாம்."

"அட இதையெல்லாம் கூட நீங்க நம்பறீங்களா..?" சுப்ரியா சிரித்தாள்.

"இதுவரைக்கும் எதுலயும் நம்பிக்கை இருந்ததில்லை.. ஆனா நமக்குன்னு வரும்போது நல்லது கெட்டது எல்லாத்தையும் நம்பணும்னு தோணுது."

இருளில் பளிரென தெரிந்த அவன் விழிகளை ஆழ்ந்து பார்த்தாள் சுப்ரியா..

"பார்த்து நடந்து வா.. வெளி லைட் போட்டுக்க வேண்டியதுதானே..?"

"நான் இங்க வரும்போது வெளிச்சமாத்தான் இருந்தது திடீர்னு இருட்டி போச்சு. கையில என்னது.?"

"ஹவுஸ் ஓனரக்கா டியூப் லைட் வாங்கிட்டு வர சொன்னாங்க. கதவு சாத்திட்டு படுத்துட்டாங்க போலிருக்கு.. நாளைக்கு காலையில போய் மாட்டி கொடுக்கணும்.."

டியூப் லைட்டை ஒரு ஓரமாக வைத்துவிட்டு கட்டிலில் கைகளை பின்பக்கமாக ஊன்றி சாய்ந்து அமர்ந்தான்.

"உட்காரு, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்."

சுப்ரியா அவனுக்கு சற்று தள்ளி அதே கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

"ஹவுஸ் ஓனர் காலையில் என்னை கூப்பிட்டு பேசினாங்க. ஒரு ஹாஸ்டல் அட்ரஸ் கொடுத்து போய் பார்க்க சொன்னாங்க. அந்த ஹாஸ்டல் வார்டன் அக்காவுக்கு சொந்தக்காரங்களாம்.."

சுப்ரியாவின் முகம் மாறியது.

"நானும் சாயந்திரம் வேலையை முடிச்சுட்டு ஹாஸ்டல் போய் பார்த்தேன். வசதியெல்லாம் திருப்திகரமாக இருந்தது. எந்த குறையும் இல்லை. நீ கர்ப்பமா இருக்கறதையும் வேலைக்குப் போக முடியாததையும் ஹாஸ்டல் வார்டன் கிட்ட சொல்லிட்டேன். அவங்களுக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்லையாம். மாசா மாசம் ஒழுங்கா பணம் கட்டினால் போதும்னு சொன்னாங்க."

"அதுவுமில்லாம ஹவுஸ் ஓனர் அக்காவுக்கு தெரிஞ்சவன்னு சொன்னவுடனே ஹாஸ்டல் வார்டன் உன்னை தன் கூடவே தன்னோட ரூம்லயே தங்க வச்சுக்கறதா சொன்னாங்க. நீ மாசமா இருக்கிறதுனால துணைக்கு கூடமாட ஒரு ஆள் இருக்கிறது நல்லதுன்னு சொன்னாங்க. இதைவிட நல்ல இடம் கிடைக்கும்னு தோணல நீ என்ன சொல்ற சுப்பு..?"

தவிப்பும் பதட்டமுமாக அவளை பார்த்தான் தர்மன்..

சில கணங்கள் மௌனத்திற்கு பின் "உங்களுக்கு ஓகேவா..?" என்று கேட்டாள் சுப்ரியா..

"ம்ம்.. பாதுகாப்பான இடம். எந்த குறையும் இல்ல. நீ என்ன சொல்ற..? உன்னோட பதிலும் விருப்பமும்தான் முக்கியம்."

"உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே. நான் எப்ப இங்கருந்து கிளம்பனும்."

தர்மனுக்கு நா வறண்டது. தொண்டை அடைத்து பேச முடியாமல் போக.. எச்சில் விழுங்கி குரலை செருமிக் கொண்டவன்.

"உனக்கு ஓகேன்னா நாளைக்கு கூட இங்க இருந்து கிளம்பலாம்.." என்றான் குரல் கமற..

"அப்ப சரி நான் எல்லாத்தையும் பேக் பண்ணி வச்சுடறேன். நீங்க வேலை முடிச்சுட்டு வந்து என்னை கூட்டிட்டு போங்க.!"

"நீ ஹாஸ்டல்லை பார்க்க வேண்டாமா சுப்பு.? ஒருவேளை உனக்கு பிடிக்கலைன்னா.!"

"நான்தான் சொல்லிட்டேனே உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே.! உங்க விருப்பம் தான் என் விருப்பம். நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு வாங்க." அவள் எழுந்து சென்றுவிட மனம் வறண்டு கற்சிலையாக அமர்ந்திருந்தான் தர்மன்..

தொடரும்.
கொஞ்சம் பழைய டயலாக் தான் ஆனாலும் வொர்க் அவுட் ஆகும் தர்ம்ஸ் நீ போக வேணானு சொல்லு சுப்புமா நான் போகலனு சொல்லு சோ சிம்பிள் சரியா போயிடும் 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉இந்தா ராஜி அக்கா அவன் உன் வூட்டு வாசல்ல பல்பு மாட்டி பிரகாசமாக்குனா நீ அவன் வாழ்க்கையிலயே பீஸ் புடுங்க பாக்குறியே நல்லாகுதா இது 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
166
Pogathey pogathey.....🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹😭😭😭😭😭😭😭😭😭😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌
 
Member
Joined
Feb 26, 2025
Messages
74
இன்னும் house owner க்கு உன்னோட முழு விவரம் தெரியாதே சுப்பு... அதுக்கு பிறகு அவுங்க வேற என்ன சொல்லுவங்களோ....
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
118
ஐய்யோ இது என்ன இப்படி ஆகிப் போச்சு. ஹவுஸ் ஓனரம்மா பீஸ் புடுங்கிவிட்டுருச்சே உன் சந்தோஷ வெளிச்சத்துக்கு. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

இரண்டு பேருக்கும் மனதில் உள்ளதை சொல்ல தயக்கம். அதான்ப்பா தர்மன் வேண்டாம்ன்னு சொல்லனும். சுப்பு போக மாட்டேன்னு சொல்லனும். 🥺🥺🥺🥺🥺🥺🥺 இது எப்படி முடியுமோ. 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Top