சூர்ய தேவ் அங்கிருந்து சென்ற பிறகு கீழே இறங்கி வந்தாள் கமலி..
தண்ணீரில் அழிந்த போதும் மெல்லிய கோடாக இழையோடிய கோலத்தின் அடையாளத்தை சோகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் சிங்காரம்..
"என்னண்ணா உங்க டாக்டர் இப்படி பண்ணிட்டு போயிட்டாரு..? அவள் கோபமான குரலில் நிமிர்ந்தார் சிங்காரம்..
"இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல.. எவ்வளவு கஷ்டப்பட்டு கோலம் போட்டேன் தெரியுமா..!! முதுகெலும்பு வின் வின்னு வலிக்குது.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அழகான கோலத்தோட அருமை தெரியாம இப்படி அலங்கோலமாக்கிட்டு போறார்.. நிஜமாவே இவர் மனுஷன் தானா..?"
கமலியின் ஆக்ரோஷமான கடைசி வார்த்தைகளில்..
"நிறுத்துமா.. டாக்டர இப்படியெல்லாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது.." கோபமாக அதட்டியவர் அடுத்த கணம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு..
"நீ எதுக்குமா இந்த வேலையெல்லாம் செய்ற.. இந்த வீட்டுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.. டாக்டருக்குன்னு ஒரு உலகம் உண்டு.. அதுக்குள்ள நுழைய யார் முயற்சி செஞ்சாலும் அவருக்கு பிடிக்காது..!! எதுக்காக அவரையும் கோபப்படுத்தி நீயும் மனச கஷ்டப்படுத்திக்கிற..?" என்றார் கவலையான முகத்தோடு..
"கோலம் போடறதும் பாட்டு பாடுறதும்.. சந்தோஷமா இருக்கிறதும் தப்பா..? இதை செய்யக்கூடாது அதை செய்யக்கூடாதுன்னு சொல்றது கை கால உடைச்சு வச்சு என்னை நகரக்கூட விடாமல் தடுக்கற மாதிரி இருக்கு.." தொண்டைக் குழியை அழுத்தி பிடித்து மூச்சு விட முடியாமல் செய்யற மாதிரி இருக்கு.. இப்படியெல்லாம் என்னால வாழ முடியாதுண்ணா.. டாக்டருக்கு ஒரு உலகம் உண்டுன்னா என்னோட உலகம் அதுக்கு நேர்மாறானது.." என்றவள் விழிகளை சோர்வாக மூடி திறந்து..
பலவித பிரச்சனைகளுக்கு மத்தியில என் மனநிம்மதிக்காக ஒரு மாற்றத்தை தேடி இங்க வந்துருக்கேன்.. ஆனா உங்க டாக்டர் என்னை மறுபடியும் இருட்டுக்குள்ளே தள்ளி டிப்ரஷனுக்கே கொண்டு போயிடுவார் போலிருக்கு..!!" என்று படபடத்தவள் படியில் வேகமாக ஏறி தனது போர்ஷனுக்கு செல்ல.. செய்வதறியாது அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டார் சிங்காரம்.
ஜாகிங் முடிந்து அவன் திரும்பி வந்த பிறகு பெரிய பிரளயம் ஒன்று தன்னை முழுதாக விழுங்க போவதாக எதிர்பார்த்தாள்..
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.. அவன் கார் வாயில் கேட்டை தாண்டி செல்வதை கண்டு.. "என்ன..? பெருசா புயல் காத்து எதுவும் வீசல..? புயலுக்கு பின்தானே அமைதி.. இந்த புயலுக்கு முன்னாடியே அமைதி நிலவுது.. ஏதோ சரியில்ல.. ஜாக்கிரதையா இருக்கணும்.." தன்னை தானே எச்சரித்துக் கொண்டு தயாராகி மருத்துவமனைக்கு புறப்பட்டாள்..
அன்றும் அவுட் பேஷன்ஸ்(Op) பிரிவில் வேலை..
நிச்சயமாக இந்த கோலப் பஞ்சாயத்துக்காக தன்னை அழைத்து வாய்க்கு வந்தபடி பேசப்போகிறான்.. கடுமையாக சாடப் போகிறான் என்று எதிர்பார்த்தாள்.. மனதோடு பயமும் நடுக்கமும் நிலவிய போதிலும்.. அப்படி கட்டுப்பாடுகளோடு அடங்கி வாழ வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது..
பணியில் உண்மையாக இருக்கிறேன் நேர்மையாக இருக்கிறேன் கொடுக்கப்பட்ட வேலையில் ஒரு குறை சொல்ல முடியாதபடி சரியாக செய்கிறேன்.. அதை தாண்டி வேறு எந்த அடக்கு முறையையும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது..
ஒருவேளை நீ இந்த வேலைக்கு தகுதி இல்லாதவள் என்று சொல்லி.. பணியிலிருந்து தூக்கியெறிந்தால்..?
நீக்கட்டும்.. அதனால் பெரிதாக என்ன பாதகம் வந்துவிடப் போகிறது.. இந்த இடமில்லை என்றால் ஆயிரம் ஃபெசிலிட்டிஸ்.. ஆயிரம் வேலை..
பணத்தை தாண்டி இந்த வேலையில் ஆத்ம திருப்தியை மட்டுமே எதிர்பார்க்கும் என் உழைப்பையும்.. அர்ப்பணிப்பை இவர்கள் புரிந்து கொள்ளாமல் போனால்.. போகட்டும்.. இழப்பு அந்த டாக்டருக்கு தான்.. தொழில் நேர்மையும் அதனால் உண்டான கர்வமும் அவளுக்கு தைரியத்தை தந்திருந்தது..
பாத்துக்கலாம்.. என்று அவனை எதிர்கொள்ளும் திடத்தோடு தன் வேலையில் மூழ்கினாள்..
ஆனால் சூர்ய தேவ் அன்று முழுவதும் அவளை அழைக்கவில்லை..
மாலை நேரத்தில் மாயா தான் போனில் அழைத்திருந்தாள்..
"என்னடி..? டாக்டர் போன் பண்ணி உன் மேல புகார் மேல புகாரா சொல்றாரு.. போன இடத்துல கைய கால வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா.. உனக்கு ஏன் தேவை இல்லாத வேலை..?" மாயா சற்று கோபமான குரலில் கேட்டாள்..
"கைய கால வச்சுக்கிட்டு சும்மா இருக்கனும்னா பொம்மையா தான் இருக்கணும்..!! பாட்டு கேட்க கூடாது டான்ஸ் ஆடக்கூடாது.. அக்கம் பக்கத்து சின்ன பசங்களை கூட்டிட்டு வந்து பேசக்கூடாது.. கோலம் போடக்கூடாது செடிகளை தொடக்கூடாது.. ரோஜாவை பறிக்கக் கூடாது.. இதைவிட கொடுமை மாடிப்படியிலிருந்து இறங்கி வரும் போது துள்ளி குதிச்சு ஓடி வர கூடாதாம்.. என்னடி இதெல்லாம்.. பிளான் போட்டு எனக்கு கொண்டு வந்து ஜெயில்ல தள்ளிட்ட இல்ல நீ..?" கோபத்தில் அவளும் படபடக்க மாயா நிதானித்தாள்..
"சரிடி கொஞ்சம் அனுசரிச்சுதான் போயேன்..!! டாக்டர் தனியாவே வாழ்ந்து பழகிட்டார்.. அவர் நம்மள மாதிரி இல்லடி.. இந்த மாதிரி ஆட்டம் பாட்டம் அரட்டை கச்சேரி.. இதெல்லாம் அவருக்கு சுத்தமா பிடிக்காது.. இங்கிருந்து கிளம்பும்போதே நான் உனக்கு படிச்சு படிச்சு சொன்னேன்.. அவரை தொந்தரவு பண்ற மாதிரி விஷயங்களை செய்யாதேன்னு.."
"அவரை ஒன்னும் நான் தொந்தரவு பண்ணல.. என் மன நிம்மதிக்காக நான் செய்யற விஷயங்கள் அவருக்கு தொந்தரவா இருக்குன்னா நான் என்ன செய்ய முடியும்.. எனக்கு பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும்.. எவ்வளவு நேரம் இயர் போன் மாட்டிகிட்டு பாட்டு கேட்க முடியும்.. காது வலிக்குது.. டிவியை போட்டு சத்தம் வராம ஊமை படம் பார்க்க சொல்றியா..? சரி நிம்மதியா பால்கனியில நடக்கலாம்னா ராத்திரி நேரத்துல டம்மு டம்முன்னு என்ன சத்தம்ன்னு சிங்காரம் அண்ணாவை மேல அனுப்பி வேவு பாக்கறார்.. இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் நான் என்ன கொள்ள கூட்ட தீவிரவாதியா..? நிம்மதியை தேடி இங்க வந்து எனக்கு இருக்கிற நிம்மதியும் போச்சு..!! ஓ மை காட் ஐம் டோட்டலி டீவாஸ்டட்.." உச்ச கட்ட கோபத்தோடு பொறுமை இழந்து கத்தினாள்..
"சரி சரி டென்ஷன் ஆகாதே.. நீ சந்தோஷமா இருக்கணும் அதுக்குதான் நானும் ஆசைப்படறேன்.. டாக்டரோட கட்டுப்பாடுகள் உன் சந்தோஷத்தை கெடுக்குதுனா நீ அங்க இருக்க வேண்டாம்.. ஹாஸ்டலுக்கு ஷிப்ட் ஆகிடு.." என்றாள் மாயா..
"ம்ம்.. ஹாஸ்டல் பாத்துட்டுதான் இருக்கேன்.. ஹாஸ்பிடல் பக்கத்துல ரெண்டு மூணு பிஜி ஹாஸ்டல்ல கேட்டு வச்சிருக்கேன்..!!" இவளும் சற்று தணிந்தாள்..
"பக்கத்திலேயே ஐடி கம்பெனி இருக்கறதுனால ரெண்டு ஹாஸ்டல்லையும் இடம் இல்லயாம்.. மூணு பேர் ஸ்டே பண்ண வேண்டிய இடத்துல நாலு பேரா கேர்ள்ஸ் தங்கி இருக்காங்களாம்.. யாராவது ரூம் வெக்கேட் பண்ணா இன்ஃபார்ம் பண்றேன்னு சொல்லி இருக்காங்க..!!"
"அப்படி நாலஞ்சு பேர்ல ஒருத்தரா ரூம் ஷேர் பண்ணிட்டு.. அட்ஜஸ்ட் பண்ணி இருக்கணும்னு என்னடி அவசியம்..? நீ கம்ஃபர்ட்டபிளா இருக்கணும்னு தான் அங்க தங்க அரேஞ்ச் பண்ணினேன்.. இப்ப முதலுக்கே மோசம் ஆகிடுச்சி.." மாயா வருத்தப் பட்டாள்..
"நாலு பேர்ல ஒருத்தரா தங்கறதுல என்ன கஷ்டம் இருக்க போகுது.. கூட தங்கறவங்களும் நம்மள மாதிரி மனுஷங்க தானே.. இங்க தனியா உட்கார்ந்து மோட்டு வலையை பாக்கறதுக்கு.. ஹாஸ்டல்ல அட்லீஸ்ட் நம்ம கூட தங்கி இருக்கிறவங்க கூட மனம் விட்டு பேசி சிரிக்கிற வாய்ப்பாவது கிடைக்குமே..!! அது போதாதா.. ஆஸ்ரமத்துல 20 பேர் ஒண்ணா தங்கி இருந்த பெரிய ஹால்ல கூட நம்ம சந்தோஷமாதானடி இருந்தோம்.."
"ப்ச்.. பைத்தியம் மாதிரி உளறாதே கமலி.. அந்த காலகட்டம் வேற.. இப்போ இந்த நிமிஷத்துல நமக்கு தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கிற அளவுக்கு நம்மகிட்ட பணம் இருக்கு.. நான் வேணும்னா டாக்டர் கிட்ட சொல்லி உனக்கு ஏதாவது வாடகை வீடு பார்க்க சொல்லட்டுமா..?" மாயா பேச்சில் எரிச்சலானாள் கமலி..
"அம்மா தாயே மறுபடி டாக்டரா..? இந்த ஊர்ல அவரை தாண்டி உனக்கும் வேறொன்னும் தெரியாதா..? தயவு செஞ்சு திரும்பத் திரும்ப அவரை என்கூட கோர்த்து விடாதே.. ஹாஸ்பிடல்ல ஸ்டிரிக்ட்டான சுப்பீரியர் கிட்ட வேலை பார்க்கலாம்.. வீட்லயும் ஜெயில் கைதி மாதிரி என்னால வாழ முடியாது.."
"சரி.. பாருடி..!! ஏதாவதுன்னா எனக்கு போன் பண்ணு.. உன்னால முடியல கஷ்டமா இருக்குதுன்னா புறப்பட்டு ஊருக்கு வந்துடு.. எதுனாலும் பாத்துக்கலாம்.."
கமலி அவசரமாக மறுத்தாள்..
"இல்லடி.. வேற ஏதாவது ஆல்டர்னேட்டிவ் வழி இருக்குதான்னு தேடி பார்க்கிறேன் ஆனா நிச்சயமா ஊருக்கு வர மாட்டேன்..!! அப்புறம் டாக்டர் உன்கிட்ட என்ன சொன்னாரு..?" என்றாள் ஒருமாதிரியான குரலில்..
தடுமாறிய மாயா "ஒ.. ஒன்னும் இல்லையே..!!" என மழுப்பினாள்..
"என்னடி ஒன்னும் இல்ல..!! போன் பண்ணி என்னைப் பத்தி கம்பிளைன்ட் பண்ணியிருக்கார்.. என்ன விஷயம்னு சொல்ல மாட்டேங்கற..? நீ எனக்கு பிரண்டா இல்ல அவருக்கு விசுவாசியா..?" மீண்டும் குரல் உயர்த்தினாள்..
"ஏய் லூசு அப்படியெல்லாம் எதுவும் சொல்லல.. உங்க பிரண்டு கிட்ட சொல்லி வைங்க.. தேவையில்லாம எனக்கு ரொம்ப தொல்லை தராங்க.. என் ரேஞ்சுக்கு.." என்றதோடு நிறுத்தி விட்டு "சரி விடு ஒன்னும் இல்ல நான் போனை வைக்கிறேன்.." கத்தரிக்க முயன்றாள்..
"சொல்ல வந்ததை சொல்லிட்டு ஃபோன வை.." என்றாள் கமலி அழுத்தமாக..
"அ..து.. என் ரேஞ்சுக்கு குழாயடி சண்டை மாதிரி இறங்கி அந்த பொண்ணோட சண்டை போட முடியாது.. உங்களுக்காக தான் பாக்கறேன்.. நான் அவங்களை வீட்டை விட்டு போக சொல்ல மாட்டேன்.. ஆனா ஹாஸ்பிடல்லையும் இந்த மாதிரி லெதாஜிக்கா ஒர்க் பண்றதை பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன்.. அப்படின்னு சொன்னாருடி.." என்றாள் மாயா தயக்கத்தோடு..
மறு முனையில் கமலியின் ரத்தம் கொதித்தது.. மூச்சு வாங்கிய படி சில கணங்கள் அமைதியாக இருந்தாள்..
"அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக்கிட்டு நீ அமைதியாவா இருந்த..?" குரலில் அனலடிப்பதாய்..
"இல்லடி.. நீங்க கமலிய பத்தி அண்டர்எஸ்டிமேட் பண்ணி வச்சிருக்கீங்க.. அவ எவ்வளவு எபிசியன்டான ஸ்டாப்னு உங்களுக்கு புரிய வரும்.. அன்னைக்கு நீங்க சொன்னது தப்புன்னு உணர்வீங்க.. அப்படின்னு சொன்னேன்.."
"அவர் அலட்சியமா அதையும் பார்க்கலாம் அப்படின்னு சொல்லிட்டு போன வச்சுட்டார்.." மாயா சொல்ல கமலி பேசவில்லை..
"கமலி நான் சொல்றேன்னு நீ தப்பா எடுத்துக்காதே.. அவர் உன்னோட சேர்த்து என்னையும் பழி வாங்கறார் அவமானப்படுத்தறார்.. ஒரு தகுதி இல்லாத ஆளை நான் ரெக்கமண்ட் பண்ணிட்டதா அவர் என்னையும் சேர்த்து குத்தி காட்டறார்.."
"அதனாலதான் சொல்றேன்.. உன்னோட சேர்த்து நீ எனக்கும் பெருமை தேடி தரணும்.. மாயா சரியான ஆளை ரெபர் பண்ணி இருக்காங்கன்னு அவர் புரிஞ்சுக்கணும்.. ஏதாவது ஒரு காரணம் கிடைக்கட்டும் உன்னை வேலையை விட்டு வெளியே அனுப்பறேன்னு சொன்ன அதே ஆள் .. நீ வேலையை விட்டு போனா இழப்பு அந்த ஹாஸ்பிடலுக்கு தான் ஃபீல் பண்ணனும்.. சோ உன்னோட முழு திறமையை வேலையில் காட்டு கமலி.. நீயா வேலையை ரிசைன் பண்ணிட்டு வெளியே வந்தா பொறுப்புகளுக்கு பயந்து ஓடிப் போயிட்டதா அர்த்தமாகிடும்.." என்றாள் பொறுமையாக..
"எனக்கு புரியுது மாயா.. நிச்சயமா என்னோட வேலையில் 100% அர்ப்பணிப்பை தருவேன்.. என்னைப் பொறுத்தவரை என் கடமையில் நான் உண்மையாய் இருக்கேன்.. அதை மத்தவங்களுக்கு புரிய வைக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.." கோபத்தில் போனை அணைத்து விட்டாள்..
உண்மைதானே..!! நான் ஒழுங்காக வேலை செய்கிறேன் என்று அடுத்தவருக்கு புரிய வைக்கும் முயற்சி போலியான நடிப்பு என்று நினைக்கிறாள்.. அங்கு வேலை செய்யும் அத்தனை செவிலியர்களில் என் திறமையை தேடி கண்டுபிடித்து அவர் புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை..
சிபாரிசில் வேலையில் சேர்ந்த பெண் என்று அவர் ஆழ்மனதில் பதிந்து விட்ட காரணத்தால்.. எத்தனை அர்ப்பணிப்போடு பணியாற்றினாலும் என்னை பற்றி அவருக்கு புரிந்து கொள்ள போவதில்லை.. புரியவைக்க முயற்சிப்பது முட்டாள்தனம்..
கடமையை செய். பலனை எதிர்பாராதே.. அவ்வளவுதான்..
நான் நானாகத்தான் இருப்பேன்.. அடங்கி ஒடுங்கி மற்றவருக்கு ஏற்றார் போல் என்னை வளைத்துக் கொண்டு வாழ்ந்ததெல்லாம் போதும்.. இனியாவது என் இஷ்டப்படி வாழனும்..
நம்பிக்கை துரோகமும்.. எதிர்பாராத சஞ்சலங்களும்.. துன்பங்களும் துயரங்களும் நர மாமிச பட்சினியாய் அவளை தின்று தீர்த்து விட்டிருக்க.. மிச்சமிருந்த கமலினி துகள்களாய் ஒன்று சேர்ந்து மீண்டெழுந்து தன் வாழ்க்கையை தன் இஷ்டப்படி வாழ நினைக்கிறாள்..
அதிலும் அந்த அஷோக் சொல்லிவிட்டு சென்ற ஒரு வார்த்தை.. நான் இல்லைனா நீ ஏங்கி ஏங்கி செத்துடுவடி.. பைத்தியம் பிடிச்சு திரிவ..!! அரக்க சிரிப்போடு பயமுறுத்தும் இந்த வார்த்தைகள் இதயத்திற்குள் சுருக் சுருக்கென்று குத்துகிறது..
எத்தம் தின்னால் பித்தம் தெளியும் என்பதைப்போல்.. அவன் இறுமாப்போடு சொன்ன உண்மைகளை பொய்யாக்க.. சரிதான் போடா உன்ன முழுசா மறந்துட்டேன் என்று தன்னிடமே கர்வபட்டுக்கொள்ள மாறுதல்களையும் சந்தோஷத்தையும் தேடி ஓடுகிறாள்..
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. என்பதைப் போல் அவள் சின்ன சின்ன சந்தோஷங்களுக்கு தடை விதிக்கும் இந்த சூரியதேவை பார்க்கும் போது பிபி எகிறுகின்றது..
மாயாவிடம் எவ்வளவு திமிராக பேசியிருக்கிறார் இந்த ஆளு.
ரேஞ்ச்.. என்ன பெரிய ரேஞ்ச்.. கடவுளா என்ன? சாதாரண மனுஷன் தானே.. இல்ல இந்த ஆளை மனித வகையில் சேர்த்துக் கொள்வதே தவறு.. இது ஏதோ பெயர் தெரியாத ஜந்து..
எது எப்படியோ போகட்டும்.. ஹாஸ்டல் கிடைச்சதும் ஷிப்ட் ஆகிடனும்.. அதுவரைக்கும் இந்த வீட்ல என் இஷ்டப்படிதான் இருப்பேன்.. மை லைஃப் மை ரூல்ஸ்..!!
அன்றொரு நாள் காலையில் மாடியில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்தாள்..
தினமும் ஸ்கிப்பிங் குதிப்பதில்லை.. என்றாவது ஒரு நாள்.. எனக்கு ஏதாவது கடினமான வேலை கொடென் என்று தேகம் கேட்கையில்.. ஒரு மாற்றத்திற்காக.. மனதுக்குள் நூல் விட்டு விரியும் அந்த உற்சாகத்திற்காக.. இசையோடு சேர்த்து அரை மணி நேரம் ஸ்கிப்பிங் குதிப்பாள்..
ஒரு கிளி உருகுது…
உரிமையில் பழகுது…
ஒ மைனா மைனா…
குறும்புகள் தொடருது…
அரும்புகள் மலருது…
ஒ மைனா மைனா…
தலிரிது மலரிதுதானா…
இது ஒரு தொடர்கதை தானா…
தலிரிது மலரிதுதானா…
இது ஒரு தொடர்கதை தானா…
இரு மனம் இணையுது…
இரு கிளி தழுவுது…
ஒ மைனா… ஒ மைனா
பாடலைக் கேட்டபடி.. கயிற்றை சுழற்றி நுழைவாயிலாக முன்னும் பின்னும் குதித்துக் கொண்டிருந்தாள் கமலி..
அவன் எதிர்பார்த்தபடி படிகளில் வேகமாக மேலேறி வரும் காலடி ஓசை..
ஆனால் வந்து நின்ற நபர் அவள் எதிர்பாராத ஆள்..
சுடிதாரில் துப்பட்டாவை மார்பை மறைத்து கட்டிக்கொண்டு.. வேகமாக ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்தவள்.. எதிரே நின்றிருந்த விடியா மூஞ்சி டாக்டரை கண்டு குதிப்பதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்..
"டாக்டர்..?"
"கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா..? மாடியில நின்னு இப்படி ஸ்கிப்பிங் குடிச்சா கீழ மண்ட உடையற மாதிரி சத்தம் கேட்கும்னு உங்களுக்கு தெரியாதா.. இல்ல தெரிஞ்சு தான் இதெல்லாம் பண்றீங்களா..? குரலும் கண்களும் சிறுத்தை போல் சீறியது..
"வேற எங்க போய் ஸ்கிப்பிங் குதிக்க சொல்றீங்க.. நான் கீழ வந்தா உங்க கண்ணுல பட வேண்டியிருக்கும் உங்களுக்கு பிடிக்காது.. அதுக்கும் கத்துவீங்க..? நான் வேற என்னதான் செய்யறது டாக்டர்..!!" கமலி அசரவில்லை..
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்…
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது…
ஒ மைனா… ஒ மைனா…
அவன் சற்று மௌனம் காத்த நேரத்தில் பாடலில் இந்த வரிகள் ஓடிக் கொண்டிருக்க..
"முதல்ல அந்த பாட்ட நிறுத்தி தொலைங்க..!!" அவன் பற்களை கடிக்க அலைபேசியில் பாட்டை நிறுத்தினாள் கமலி..
"இங்க பாருங்க மிஸஸ் கமலினி.."
"கமலினி.." மீண்டும் அவள் திருத்தினாள்..
"வாட்எவர்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நீங்க வேற இடம் பாத்துக்கோங்க.. என்னால இந்த நியூஸன்ஸ பொறுத்துக்க முடியல.. உங்களால் என் நிம்மதி போச்சு.. சொல்லப்போனா ஒவ்வொரு விஷயத்துக்கும் இந்த மாதிரி உங்க முன்னாடி வந்து நின்னு ஆர்க்யூ பண்றது எனக்கு பிடிக்கல.. யூ நோ வாட்.. திஸ் இஸ் நாட் மை கேரக்டர்.." என்றான் அழுத்தமாக..
"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் டாக்டர்.. நிச்சயமா நானும் இங்கிருந்து போயிடுவேன்.. ஒரு பாதுகாப்பான இடம் கிடைக்கற வரைக்கும் வேற வழியில்லாமல் நான் இங்க தங்க வேண்டியதா இருக்குது.. இங்கே இருக்கிற வரைக்கும் நான் என் இஷ்டப்படிதான் இருப்பேன்.. இதை மனசுல வச்சுக்கிட்டு நீங்க என்னை வேலையை விட்டு டெர்மினேட் செஞ்சாலும் பரவாயில்லை.. ஐ டோன்ட் கேர்.. பட் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க..!!" என்றாள் அவள்..
வீட்டை காலி செய்கிறேன் என்று அவள் சொன்னதே.. சூர்ய தேவ்வை சற்று சமன்படுத்தி இருந்தது..!!
பெருமூச்சோடு கண்கள் மூடித் திறந்தான்.. "உங்கள மாதிரி ஒரு இரிடேடிங் கேரக்டரை நான் பார்த்ததே இல்லை.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டை காலி பண்ணிடுங்க.. அதுவரைக்கும் என் கண்ணுல படாம என்னை தொந்தரவு செய்யாம இருந்தா நல்லது... ஒன் மோர் திங்.. வீட்ல நடக்கிறதை கொண்டு வந்து வேலையில சேர்த்து கன்ப்யூஸ் பண்ணிக்க வேண்டாம்.. அது வேற இது வேற.. இந்த மாதிரி உங்க திமிரையும் அலட்சியத்தையும் வேலையில காட்டாம உங்க திறமையை காட்டி நல்ல பேர் வாங்க முயற்சி பண்ணுங்க..!!" இதற்கு மேல் உன்னிடம் பேச ஒன்றுமில்லை என்பது போல் அவன் கீழே இறங்கி சென்று விட்டான்..
"காது புளித்துப் போகுமளவிற்கு திரும்பத் திரும்ப ஒரே வார்த்தை.. ஒழுங்கா வேலை செய்.. திறமையை காட்டு.. இப்ப நான் என்ன ஒழுங்கா வேலை செய்யல.. அப்படி என்ன என்கிட்ட குறை கண்டுபிடிச்சாரு இவரு.." கமலி கோபத்தில் சிவந்தாள்..
"கண்முன்னாடி வர கூடாதாம்.. எனக்கென்ன ஆசையா இவர் முன்னாடி போய் நிக்கணும்னு.. இந்த மனுஷன் என்ன பத்தி என்ன தான் நினைச்சுட்டு இருக்காரு.. ஐயோ கடவுளே..!!" கமலிக்கு தலை வலித்தது..
கமலியும் லேசு பட்ட ஆள் இல்லையே.. சூரிய தேவ் விடாக்கண்டன் என்றால் கமலி கொடாக்கண்டி.. நியாயமான சூழ்நிலைகளில் அனுசரித்துப் போவாள்.. அதே நேரத்தில் அடக்கு முறையை கையாள நினைத்தால் விதண்டா வாதத்திற்கேனும் ஏதேனும் ஒன்று செய்து வைப்பாள்..
அன்றிலிருந்து தினமும் வாசலில் கோலம் போட்டு வைக்கிறாள்..
முந்தைய நாளை விட அன்று அதிக கோபத்தோடு.. சிங்காரத்தை அழைத்து கோலத்தை கலைக்க சொன்னான்..
அடுத்த நாள் கலர் பொடிகளை தூவி ரங்கோலி கோலம் போட்டிருந்தாள்.. அதையும் அழித்தான்..
சிங்காரம் கமலியிடம் எவ்வளவோ சொல்லி பார்த்து அவள் அடங்கவில்லை என்றதும் சலித்து போய் விட்டுவிட்டார்..
ஆனால் முதலில் சூரிய தேவ் கடும் கோபத்தால் பயந்து.. கமலியின் கலாட்டாக்களால் கலவரமானவருக்கு இப்போது.. இருவரின் மறைமுகமான மோதல்கள் பதட்டத்தையும் படபடப்பையும் தாண்டி ஏதோ ஒரு சுவாரசியத்தை தந்திருந்தது..
பாடல் சத்தம் டிவி சத்தம் எதையும் டாக்டரால் தடுக்க முடியவில்லை..
என்ன சொன்னாலும் எவ்வளவு கடுமையாக எச்சரித்தாலும் சரி சரி என்று தலையசைப்பவள் திரும்பத் திரும்ப அவனை எரிச்சல் மூட்டும் அதே வேலையை தானே செய்கிறாள்..
பெண்களிடம் வேலை விஷயமாக பேசுவதுண்டு.. கண்டிப்பதுண்டு.. தண்டிப்பதும் கூட உண்டு.. பெண் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுண்டு.. மற்றபடி ஒரு பெண்ணுடன் நேருக்கு நேராக நின்று வாதிடுவதோ சண்டை போடுவதோ அவனுக்கு பழக்கம் இல்லை.. இம்மாதிரியான தேவையில்லாத விவாதங்கள் அவன் தரத்தை குறைப்பதாக நினைத்தான்..
மாயாவின் மீது கொண்ட மரியாதை.. அத்தோடு கூடிய சீக்கிரம் இந்த வீட்டை காலி செய்து விடுகிறேன் என்று கமலி கொடுத்த வாக்கு என சில காரணங்களுக்காக அவளை சகித்துக் கொண்டான் சூரிய தேவ்..
ஒரு படத்தில் அப்பாவி என நினைத்து.. ரவுடிகளை வீட்டில் வாடகைக்கு விட்டு முழி பிதுங்கும் டெல்லி கணேஷ் நிலை போல் டாக்டரின் சூழ்நிலை..
அவள் ரவுடியுமல்ல இவன் அப்பாவியும் அல்ல.. இருவரின் எண்ணங்களும் ஒத்துப் போகவில்லை அவ்வளவுதான்..
அவள் மீதான கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு மருத்துவமனையில் அவள் செய்யும் வேலைகளை குறை சொல்வது.. மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவது.. மட்டம் தட்டுவது என எந்த விதத்திலும் பழிவாங்கவில்லை சூர்யதேவ்..
அந்த விதத்தில் சூர்ய தேவ் மேல் கமலிக்கு கொஞ்சமாய் நல்ல அபிப்பிராயம் உருவாகி இருந்தது..
ஆனால் வீட்டுக்கு வந்த பின்.. கமலி தன் கூட்டுக்குள் சந்தோஷமாக இருப்பதை.. அராஜகமாக நினைத்தவன்.. அவள் அராஜகத்தை தாங்க இயலாமல்.. ஒரு கட்டத்தில் உச்சகட்ட மன அழுத்தத்தோடு அவன் நண்பன் சைக்கியாட்ரிஸ்ட் வருண் பிரசாத் முன்பு அமர்ந்திருந்தான்..
விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்த நண்பனை தீ பார்வையால் முறைத்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..
தொடரும்..