• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 11

Well-known member
Joined
Nov 20, 2024
Messages
109
"அம்மாஆஆ".. என்ற அழைப்பே.. வெளியேற துடித்த அவள் உயிரை இழுத்து பிடித்து நிறுத்துவதாய்.. நெஞ்சில் ஈரம் கசிந்தது.. வலியை மீறிய புன்னகை கல்யாணியின் இதழில் உதயமாக.. விழிகளும் அதற்கு நேர் மாறாக கலங்கி நின்றது.. அவனே பதட்டத்துடன் ஓடி வந்து ஓய்ந்து சரிந்திருந்த அன்னையை தாங்கி பிடித்து கட்டிலில் அமர வைத்தான்.. இதுவரை அழுத்திக் கொண்டிருந்த மன சஞ்சலங்களை மறந்து போனவன்.. என்னாச்சு உங்களுக்கு.. நெஞ்சு வலிக்குதா.. என்று மேஜை மீதிருந்த வாட்டர் பாட்டிலிலிருந்து கண்ணாடி குவளையில் தண்ணீர் ஊற்றி அவரிடம் கொடுக்க.. குவளையை கூட பிடிக்க வலுவில்லாமல் கைகள் நடுங்குவதை கண்டு கொண்டவன் அவனே நீரை பருகவும் வைத்தான்..

"அம்மாஆஆ".. என்று தன்னையறியாமல் அடிமனதிலிருந்து கிளர்ந்தெழுந்த தாய்ப்பாசத்துடன் தவிப்பாக அழைத்தவன்.. அடுத்து செய்வதறியாது தலையை கோதியப்படி வேகமாக துடிக்கும் இதயத்துடன் கதவை பார்த்தான்.. யார் இப்படி ஒரு வேலை பார்ப்பது என்று கோபம் வேறு ஏகத்துக்கும் தலை தூக்க.. வேகமாக கதவருகே சென்று.. "ஹேய் மதி கதவை திற.. என்ன இது விளையாட்டு அறிவில்லையா உனக்கு".. என்று அடி குரலில் சீறியவன் ஓங்கி கதவை தட்ட.. "ஹரிஷ்.. கண்ணா".. கைகளை நீட்டி அழைத்த கல்யாணியின் பலவீனமான குரல் அவன் காதுகளில் தெளிவாகவும் விழவும்.. அவளையும் கதவையும் மாறி மாறி பார்த்தவன் "யாராவது கதவை திறங்களேன்" என்ற தவிப்புடன்.. மீண்டும் மீண்டும் கதவை தட்டிக் கொண்டிருந்தான்..

"ஹரிஷ்.. நா.. நா.. நான் உன்னை வெறுக்கலப்பா.. நீ அடி வாங்கினதை பார்த்து நான் ஒன்னும் ரசிச்சுட்டு இல்லை.. உண்மையிலேயே என் மனசு துடிச்ச துடிப்பு.. அந்தக் கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்".. திக்கி திணறி வெளிவந்த அன்னையின் குரலில் அவன் கரங்கள் கதவோடு ஒட்டிக்கொள்ள கால்கள் வேரோடி சிலையாக நின்றான் ஹரிஷ்..

கட்டிலில் சாய்ந்தவாறு நெஞ்சை பிடித்துக் கொண்டு அவள் மேற்கொண்டு பேச ஆரம்பித்திருந்தாள்.. "சத்தியமா நான் பொய் சொல்லல.. உங்க அப்பா இறந்த பிறகு.. உனக்கும் எனக்கும் தண்ட சோறு போட முடியாதுன்னு எ.. என்.. புகுந்த வீட்ல என்னையும் உன்னையும் துரத்தி விட்டுட்டாங்க.. வேற வழி இல்லாம என்னோட பிறந்த வீட்டுக்கு வந்தேன்"..

"என்னோட அம்மா எனக்கு பெத்த அம்மாவா இருக்கல.. காசுக்காக இன்னொருத்தனுக்கு என்னை விக்க பார்த்தா.. அவன் பெரிய அரசியல் புள்ளி.. எனக்கு வப்பாட்டியா இருக்கலைனா.. உன் புள்ளையை கொன்னுடுவேன்னு என்னை பயமுறுத்தினான்.. எங்க அம்மா வேற என்னை தினமும் டார்ச்சர் பண்ணவே ஆரம்பிச்சிடுச்சு.. வாழ்க்கையே நரகமா போச்சு.. கூலி வேலைக்குப் போன இடத்திலையும்.. ஆம்பளைங்க தப்பா பார்க்கிறதும் கையை பிடிச்சு இழுக்கிறதுமா.. என்னோட நிம்மதியே போச்சு.. அந்த நேரத்துல தான் மாணிக்கம் என் வாழ்க்கையில வந்தார்.. அந்த கேடு கெட்ட அரசியல்வாதி கிட்டேருந்து என்னை காப்பாத்தி.. பாதுகாப்பு கொடுக்கிறேன்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. அவர் மேல பெருசா எனக்கு அபிப்பிராயம் இல்லைன்னாலும்.. என்னோட பாதுகாப்புக்காக அவரோட வாழ முடிவு செஞ்சேன்"..

"ஆரம்பத்துல ரொம்ப நல்லவரா இருந்தாரு.. நானும் அவரை நம்புனேன்.. ஆனா என்னவோ தெரியல.. அந்த ஆளுக்கு உன்னை பிடிக்கவே இல்லைன்னு கல்யாணம் பண்ணின கொஞ்ச நாளைக்குள்ள நான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அவனைப் பொறுத்தவரை நான் உன்கிட்ட பாசமே காட்டக்கூடாது.. நான் உன்னை அன்பா பார்த்துகிட்டா சாப்பாடு ஊட்டி விட்டா.. அதையே காரணமா வச்சு உன்னை அடிக்க ஆரம்பிச்சான்.. ஏன் என் பிள்ளையை எப்படி கொடுமை படுத்துறேன்னு கேட்டதுக்கு.. இவன் யாரோ பெத்த பிள்ளைதானே இவனை எனக்கு பிடிக்கல.. நீயும் இவன் மேல பாசமா இருக்கக் கூடாதுன்னு சொன்னான்.. துடிச்சு போய்ட்டேன்.. ஒரு நரகத்திலிருந்து தப்பிச்சு இன்னொரு நரகம்.. அவன்கிட்டே இருந்து தப்பிச்சு போகவும் வழி இல்ல.. நீ எங்க போனாலும் தேடி வந்து கண்டுபிடிச்சு உன் புள்ளையை கொன்னுடுவேன்னு என்னை பயமுறுத்தி வச்சிருந்தான்"..

"உன்னை அடி அடின்னு அடிப்பான்.. என் பெத்த வயிறு எப்படி பதறும் தெரியுமா.. ஒவ்வொரு நிமிஷமும் செத்துப் பிழைச்சேன்.. ஓடி வந்து அவனை தடுக்கணும்னு நினைக்கும் போது கதவை சாத்திடுவான்.. அய்யோ என் புள்ள அழுவுறானே.. காயம் பட்டிருக்கேன்னு தவிச்சு புலம்பி உன்னை நெருங்கினா.. உன் புள்ள பக்கத்துல போனேன்னு வச்சுக்கோ.. அவனை அடிச்சே கொன்னுடுவேன்னு என்னை பயமுறுத்தினான்.. ராத்திரி எல்லாரும் தூங்கின பிறகு உன் பக்கத்துல வந்து உட்கார்ந்து உன்னை மடியில போட்டுக்கிட்டு நான் அழுவேன்.. அப்படியே உன்னை எங்கேயாவது தூக்கிட்டு போயிடலாமான்னு இருக்கும்.. ஆனா எங்கே போறது.. சொந்த ஊர்ல இருக்கும்போதே இந்த ஆம்பளைங்களோட தப்பான பார்வையில இருந்து தப்பி பிழைச்சு வாழ முடியலையே.. இதுல தெரியாத ஊருக்கு தப்பிச்சு போய் மானத்தோட பிழைக்க முடியுமான்னு பயம்"..

"அதனால உன்னை மட்டும் தனியா கவர்மெண்ட் ஸ்கூல் ஹாஸ்டலில் சேர்த்து விட்டேன்.. ஆனா அந்த காட்டுமிராண்டி.. அன்பா பேசுற மாதிரி பேசி அங்கிருந்தும் உன்னை கூட்டிட்டு வந்துட்டான்.. சுத்தமாக வெறுத்து போச்சு ஹரிஷ்.. கண் முன்னாடி நான் பெத்த பிள்ளை அடி வாங்குறதை பார்த்துகிட்டு கையாலாகாத பொம்பளையா இருக்கிறது எவ்வளவு பெரிய சித்திரவதை தெரியுமா.. நீ உடம்பால அனுபவிச்ச வலியை நான் மனசால வலியை அனுபவிச்சேன்"..

கல்யாணியின் பேச்சினில் ஹரிஷ் மொத்தமாக அடிபட்டு நெகிழ்ந்த மூங்கிலாக பேச்சற்று நின்றிருந்தான்..

"அவன் கூப்பிடற நேரம் அவனோடு சந்தோஷமா இருக்கணும் இல்லைன்னா அதுக்கும் உன்னைதான் அடிப்பான்.. அதனால நேரம் காலம் இல்லாம.. என் புள்ள முன்னாடியே அவனோட அறைக்குள்ளே போய் சாத்திக்கிட்டு".. என்று மேற்கொண்டு பேச முடியாமல் கதறியவள் தலையில் அடித்துக் கொள்ள.. நெஞ்சம் கலங்கிட ஓடி வந்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டான் ஹரீஷ்.. அவன் விழிகளும் கலங்கிப் போக.. பார்வையோ.. வெறும் பாசத்தை மட்டும் பிரதிபலிப்பதாக..

பெண்ணினத்திற்கே அவமானம்.. இரக்கமற்ற ராட்சசி.. என்று இதுவரை இழிவாக எண்ணிக் கொண்டிருந்த தன் தாயின் மறுபக்கத்தில் ஜீரணிக்கவே முடியாத கசப்பான சம்பவங்கள் நிறைந்திருக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை அவன்.. இத்தனை வருடங்களாக தவறான கோணத்திலேயே சித்தரிக்கப்பட்ட தாய் தெய்வமாக தெரிந்தாள் இப்போது.. பெற்ற அன்னையின் மீதான அன்பின் சுவடு அடிமனதிலிருந்து முளைத்து மீண்டும் ஆழமாய் வேரூன்றுவதாய் உணர்ந்தான் அவன்..

வதங்கிய கொடியாக சாய்ந்திருந்தவளை கண்டு உயிர் பதறியது..

உயிர்போகும் முன் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற அவசரத்துடன் "அதுக்குள்ள உன் தங்கச்சிகளும் பிறந்துட்டாங்க.. அவங்க உன்கிட்ட பேசினா கூட அந்த ராட்சசன் வந்து உன்னைதான் அடிப்பான். எல்லா கோபத்தையும் உன்மேல தான் காட்டுவான்.. இருபத்தி நாலு மணி நேரமும் என்னை உன்கிட்டே நெருங்க விடாம கண்காணிச்சான்.. அவனுக்கு பிறந்த குழந்தைகளுக்கு மட்டும்தான் நான் அம்மாவா இருக்கனுமாம்.. அவனோட போராடி போராடி சோர்ந்து போயிட்டேன் ஹரிஷ்.. ஒருவேளை நாங்க எல்லாம் உன்கிட்டேருந்து ஒதுங்கி இருந்தா அப்பவாச்சும் உன்னை கொடுமை படுத்த மாட்டான்னு நினைச்சேன்.. நான் நினைச்ச மாதிரி நான் வெறுப்பை கக்கின சமயங்களில் அவன் சந்தோஷப்பட்டு உன்னை அடிக்கிறது கொஞ்சம் குறைஞ்சது.. அப்பப்போ சாப்பாடு கூட ரகசியமா அந்த பக்கத்து வீட்டு குட்டி பொண்ணு சாருமதி கிட்ட கொடுத்தனுப்பினது நான்தான்.. அவகிட்டே மருந்து வாங்கி கொடுத்து உன் காயங்களுக்கு போட்டு விட சொன்னதும் நான்தான்.. நேரடியா காட்ட முடியாத பாசத்தை அவள் மூலமா உனக்கு காட்டினேன்.. அண்ணா அண்ணா அண்ணான்னு உன்கிட்ட வர துடிச்ச உன் தங்கச்சிகளை வேணும்னே பிரிச்சு வைச்சேன்.. என் நிலைமை யாருக்குமே வரக்கூடாது கண்ணா.. பெத்த தாயா.. உனக்கு தனிமையை மட்டும் பரிசா கொடுத்த எனக்கெல்லாம் மன்னிப்பே இல்லை".. என்று பலமாக மூச்சுகளை இழுத்து அழ முடியாமல் தவித்தவளை கண்டு.. "அம்மாஆஆஆஆ".. என்று அணைத்துக் கொண்டு பரிதவித்தான் ஹரிஷ்.. தாய் பாசம் காணாது இறுகிப் போயிருந்த அவன் மனம்.. அன்னைக்காக உருக ஆரம்பித்திருக்க.. விழிகளில் அதன் தொடக்கமாக கண்ணீர் பெருகியிருந்தது..

அம்மா கொஞ்சநேரம் அமைதியா இருங்க.. என்று கையைப் பற்றிக் கொண்ட மகனின் உள்ளம் தனக்காக நெகிழ்வதை கண்டு நிம்மதியுடன் ஆழ்ந்த மூச்சை பலவீனமாக இழுத்து விட்டவள்..

"எ.. எ.. எப்படியாவது அந்த ராட்சசன்கிட்டேருந்து உன்னை காப்பாத்தி.. டவுன்ல ஒரு ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறதுக்கு நம்ம ஊர் டீக்கடை நாயர் மூலமா ஏற்பாடு செஞ்சு வச்சிருந்தேன்.. கடவுள் புண்ணியத்துல அவர் நல்லவரா இருந்ததால உன் மேல இரக்கப்பட்டு எல்லா செலவையும் அவரே பார்த்துகிறதா சொன்னார்.. ஆனா அதுக்குள்ள நீயே அந்த ஆளோட கொடுமை தாங்க முடியாம ஊரை விட்டு ஓடி போயிட்டே.. எங்கே தேடியும் உன்னை கண்டுபிடிக்கவே முடியல.. எங்க போய் எப்படி கஷ்டப்படுறியோ நெனச்சு என் ஈரக்குலையே அறுந்து போச்சு.. நான் நிம்மதியா தூங்கி பல வருஷம் ஆச்சு கண்ணா.. உன் பெரிய தங்கச்சி வயசுக்கு வந்த நேரத்துல மாணிக்கம் குடிச்சு குடிச்சு குடல் அழுகி இறந்து போயிட்டார்.. கூலி வேலை பார்த்து என் பொண்ணுங்களை காப்பாத்தினேன்.. கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து வைச்சு மாதவிக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்.. எப்படியாவது என் பையன் என்கிட்டே வந்துட மாட்டானான்னு காத்துகிட்டு இருந்தேன்.. தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் விவரம் சொல்லி உன்னை தேட சொல்லி இருந்தேன்.. சாகறதுக்குள்ள உன் முகத்தை ஒரு தடவையாவது பார்க்கணும்னு உயிரைப் புடிச்சுகிட்டு உனக்காகதான் காத்துட்டு இருந்தேன்.. மாதவி புருஷன் சரியில்லாமல் வீட்டுக்கு நிறைமாசமா வீட்டுக்கு வந்துட்டா.. அப்புறம்.. அப்புறம்".. என்று திணறியவளுக்கு மூச்சு இழுக்க ஆரம்பித்தது..

"அம்மாஆ.. என்ன ஆச்சு.. என்று பதறி துடித்த ஹரிஷ் அவளை நெஞ்சில் சாய்த்துக் கொள்ள.. ஆதுரமான பார்வையுடன் அவன் கன்னம் வருடியவள்

"எ.. எ.. எப்படியோ உன்னை பார்த்து உண்மையை சொல்லிட்டேன்.. இனி உயிர் போனாலும் நிம்மதியா".. என்று வார்த்தைகளை முடிக்காமலேயே மயங்கியிருந்தாள்.. "அம்மாஆஆ.. அம்மாஆ".. என்று நெஞ்சம் பதற அவர் கன்னத்தை தட்டி உலுக்க அந்நேரம் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தாள் மதி..

"என்ன.. என்னாச்சு".. அம்மாவுக்கு.. மயங்கி கிடந்த கல்யாணியை கண்டு பதட்டத்துடன் கேட்க..

தவிப்பும் பதட்டமும் கலந்திருந்த முகத்தில் சடுதியில் கோபம் குடியேறி கொள்ள.. "யாரு கதவை லாக் பண்ணினது".. என்றான் பற்களை கடித்து ருத்ரமூர்த்தியாக..

குற்ற உணர்ச்சியுடன் ஒரு கணம் அமைதியாக தலையை தாழ்த்திக் கொண்டவள்.. நான்தான் என்றாள் கண்களை மூடி திறந்து..

அவன் விழிகள் அனல் காக்கும் அக்னி சூரியனாக நிறம் மாறியிருக்க.. "இல்ல சார்.. நான்".. என்று ஏதோ சொல்ல வருவதற்கு முன்.. ஓங்கி பளாரென அறிந்திருந்தான் அவளை..

"அறிவிருக்கா உனக்கு.. எதுல விளையாடனும்னு தெரியாதா.. எதுக்குடி இப்படி ஒரு காரியத்தை பண்ணுனே.. கொஞ்ச நேரத்துல எங்க அம்மாவை கொல்ல பாத்துட்டியே.. சீ தள்ளு".. என்று தீ சொற்களால் வெறுப்பை உமிழ்ந்தவன்.. கோப பார்வையை அவள் மீது வீசிவிட்டு அன்னையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்..

சகலமும் ஸ்தம்பித்த உணர்வுடன் அங்கேயே கட்டிலில் தொப்பென அமர்ந்தாள் மதி..

அடி வாங்கிய கன்னம் காந்தியது.. அதை விட அவள் இதயம் அளவுக்கு அதிகமாக வலி கொடுக்க.. யோசிக்க மறந்து போன சிலையானாள்..

ஹரிஷ் தனக்கு நடந்த கொடுமைகளை அவன் வாயால் கேட்டு அறிந்து கொண்டவள் .. கல்யாணியின் வாயைக் கிளறி நடந்த உண்மைகளை விளக்கமாக கேட்டுக் கொண்ட பிறகு இருவர் மீதும் குற்றமில்லை.. சந்தர்ப்ப சூழ்நிலையே குற்றவாளி என்பதை தெளிவாக புரிந்து கொண்டாள்.. தாயையும் மகனையும் மனம் விட்டு பேச வைப்பதற்காக.. கல்யாணியை அவன் அறைக்குள் விட்டு அவன் வந்த பிறகு கதவை சாத்தியிருந்தாள்.. ஆனால் இப்படி ஒரு விபரீத சம்பவம் நடக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. தன் அறையில் அன்னையை கண்டு கோபத்தில்தான் கத்துகிறான் என்று நினைத்தாள்.. அம்மாவுக்கு நெஞ்சுவலி.. கதவைத் திற என்று சொல்லியிருந்தால் அடுத்தகணமே கதவை திறந்து விட்டிருக்க மட்டாளா?..

நன்மை நடக்க நினைத்தாள்.. நல்லதே நடந்தது.. ஆனால் அவப் பெயர் மட்டும் அவளுக்கு..

தொடரும்..
ஹரி நடக்கும் எல்லாத்துக்கும் மற்றுமொரு பக்கம் இருக்கும் அத நீ பார்க்க தவறி விட்டுவிடுற உன்னோட அம்மா செய்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதை போல மதி உன்னோட அம்மா வை உன்னோட சேர்த்து வைக்க இப்படி ஒரு வேலை பார்த்து விட்டா ப்ளிஸ் அவள புரிஞ்சுக்க முயற்சி பன்னு 😔😔😔
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
114
இந்த மரமண்டைக்கு எப்ப எது புரிஞ்சிருக்கு. எல்லாவற்றிலும் அவசரம்.
 
Active member
Joined
May 3, 2025
Messages
96
உனக்கு அடிக்கிறது ஒன்னும் புதுசு இல்லையே....என்ன பண்ணினாலும் ஒன்னும் பேசமாட்டானு பண்றையா...
எல்லாமே அவசரம், கோவம்.....
மதி பக்கம் இருந்து எப்போதான் யோசிக்க போரயோ....


மதி இருந்தாலும் இவளோ பொறுமை ஆகாது..... உள்ள வெச்சு அழுத்தி அழுத்தி ஏதாவது ஆக போகுது.....
உன்னோட அருமை தெரியாது நீ பக்கத்துல இருக்க வரைக்கும்....
 
Top