Active member
- Joined
- Jul 31, 2024
- Messages
- 97
👌👌👌👌👌👌👌👌👌👌👌😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒வெற்றுடம்பாய் கட்டிலில் கவிழ்ந்து உறங்கியிருந்தவனின் முதுகில் வரி வரியாய் தழும்புகள் இன்னும் அழியாமல்..
ஒவ்வொரு தழும்பிலும் ஈர இதழால் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் மதி.. அந்த காயங்களை கண்டு கண்ணீர் அடங்காமல் வழிய.. சொட்டு சொட்டென்று தெறித்த கண்ணீர் துளிகளில் என்ன உணர்ந்தானோ.. எதிர்பாராத நேரத்தில் பாயும் வேங்கையாக விருட்டென எழுந்து அவள் கழுத்தை இறுக பற்றியிருந்தான்..
அவன் திடீர் தாக்குதலில் விதிவிதிர்த்து போனாள் மதி.. கண்களை உருட்டி பற்களை நறநறவென கடித்தபடி அவன் குரல்வளையை பிடித்திருந்த விதம் கண்டு ஒட்டு மொத்த உடலும் குலுங்க.. கண்ணெதிரே விழி பிதுங்க துடித்துக் கொண்டிருந்த காரிகையின் அச்சத்திலே.. தன்னிலை உணர்ந்தவனின் பார்வை.. சீற்றம் தணிந்து கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி மென்மையாக அவள் மீது படிய.. கரங்களும் மெதுவாய் தளர்ந்து அவள் மார்பை வருடி.. பின்னோடு சென்று முதுகில் அழுத்தமாய் படிந்து தன்னோடு அணைத்துக் கொண்டது..
விரிந்த அவன் மார்பினில் தலை வைத்தவள்.. படிக்கட்டாய் இறங்கிய அவன் வயிற்றை வருடிக் கொண்டே.. "ஏன் இவ்வளவு கோபம்.. வந்த முதல் நாளே கேட்கனும்னு நினைச்சேன்.. அ.. அது என்ன தழும்பு".. என்றாள் மென்று விழுங்கி..
அவள் எதிர்பார்த்தது போலவே "உன் வேலையை பார்.. தேவையில்லாத விஷயத்துல தலையிடாதே".. என்றான் இறுகிய குரலில்..
அவன் தெறித்த விழிகள் எதிர்பக்கத்தை வெறித்திருக்க.. அன்றொரு நாள் பன்னிரண்டு வயது சிறுவனாக.. ரத்த வெளாறாக.. காயங்களுடன் அழுது கொண்டிருந்த வேளையிலே..
"அச்சோ.. ஹரி.. வலிக்குதா".. என்று கண்ணீர் உகுத்த குட்டி பெண் சாருமதி.. ஒவ்வொரு காயத்தையும் தன் பிஞ்சு விரலால் தடவி தடவி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.. அவள் அழுகையில் அவன் வலியும் துடிப்பும் அடங்கியது.. தனக்காக அழும் அந்த பிஞ்சு மழலையை நிமிர்ந்து முகம் பார்த்தவனுக்கு இதழில் வலியை மீறிய புன்னகை..
"ஹரிஷ்".. என்று பெண் குரலொன்று வெளியே கேட்க.. "அய்யோ.. உங்க அம்மா என்னை பார்த்துட்டா.. அப்புறம் எங்க வீட்ல சொல்லிடுவாங்க.. நான் போறேன்".. என்று பிரில் கவுனில் துள்ளி குதித்து ஓடிவிட்டாள் சாருமதி..
இதோ சில மாதங்களுக்கு முன்பு கூட சட்டை போடும் முன். அவன் வெற்று முதுகில் வரி வரியாக படித்திருந்த அந்த தழும்புகளை கண்டு கட்டிப்பிடித்து கதறி அழுதாளே.. "ஒண்ணும் இல்லடா குட்டிமா".. என்று அவளை விலக்கி பெண்ணவளை கண்ணீர் விட வைக்கும் தழும்புகளை மறைத்து வேகமாக சட்டையை போட.. தனக்காகவே துடித்து ஓடி வந்து அணைத்துக் கொண்ட அந்த பெண்மையின் முகம் இப்போதும் கூட கல்வெட்டில் செதுக்கி வைத்த ஓவியம் போல் தெள்ளத் தெளிவாக அவன் இதயத்தினுள்.. மூச்சு முட்ட காதலித்தவளை மறப்பதும் இறப்பதும் ஒன்றுதான்.. இறக்கும் உரிமையை கூட பறித்துக் கொண்டாளே ராட்சசி..
தொடர் சங்கிலி நினைவுகளாய் எங்கோ ஆரம்பித்த நிகழ்வு சாருமதியில் வந்து முடிவுற.. அவள் இறந்த தருணம்.. பேயாய் கண்முன்னே பயமுறுத்தியது..
அன்று
அவசரமான போன் கால் வரவே காரை நிறுத்திவிட்டு.. அருகே உறங்கிக் கொண்டிருந்த சாருவின் நெற்றியில் முத்தமிட்டு.. அவள் உறக்கம் கலையாத வண்ணம்.. ஆள் இல்லாத சாலையில் மும்முரமாக பிசினஸ் கால் பேசிக் கொண்டிருந்தான் ஹரிஷ்..
அந்நேரம் கட்டுப்பாட்டை மீறிக் கொண்டு மிக வேகமாக வந்த லாரியை திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்த ஹரிஷ் கவனிக்கவில்லை.. லாரி மிக நெருங்கியிருந்த அந்த நொடிப் பொழுதில்.. அவனை தள்ளி விட்டு.. எதிரே வந்த லாரியில் மோதி தூக்கி எறியப்பட்டாள் சாருமதி..
"சாருஊஊ".. என கத்தியவன் கடைசியாக பார்த்தது.. ரத்த வெள்ளத்தில் இறுதியாக ஒரு முறை தன்மீது பார்வையை பதித்து விட்டு கண்களை நிரந்தரமாக மூடிய சாருமதியைதான்.. அதன் பிறகு மூன்று மாதம் கோமாவில் தான் இருந்தான்..
குணமாகி விழித்தெழும் வேளையில் சாரு தன்னுடன் இல்லை என்ற விஷயம் மூளையில் சம்மட்டியால் அடிப்பதை போல் உரைக்க.. அன்றிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் தூக்கம் துறந்தான்.. சில காலங்கள் சாரு தன்னுடன் இல்லை என்பதை நம்ப இயலாமல் தவிர்த்தவன்.. ஒரு நிலையில் தன்னையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்காக.. ஊழியர்களுக்காக தன்னை மீட்டெடுத்து சரிந்து போன தொழிலை கவனிக்க முனைந்தான்.. தூக்கம் தொலைத்தான்.. இரவில் சாரு அவனை ஆக்கிரமிக்க.. பகலில் தொழிலை அவன் ஆக்கிரமித்தான்.. கண்ணில் சொட்டு தூக்கமில்லாத நிலை.. விதவிதமான பயங்கரமான இல்யூஷன்ஸ் கண்முன்னே தோன்ற மனதளவில் டிஸ்டர்ப் ஆனவன்.. மனநல மருத்துவர் பாஸ்கரை சென்று சந்தித்தான்.. தூங்கினால் மட்டுமே இந்த பிரச்சனையை சரியாகும்.. இல்லாது போனால் ரத்த குழாய்கள் வெடித்து மாரடைப்பு ஏற்பட்டு அவன் உயிருக்கே ஆபத்து என்று அவர் சொன்னது மனதுக்குப் புரிந்தாலும் தூக்கம் வரவில்லையே.. ஆழ்ந்த உறக்கம் மட்டுமே அவனை அமைதி படுத்த முடியும்.. யோகா உடற்பயிற்சி.. தியானம் எதுவுமே பலனளிக்கவில்லை.. இந்நிலையில் மன நோய்க்கு மனித மருந்தாக வாய்த்தவள்தான் மதி..
ஆனாலும் சிறுவயதிலிருந்து ஊனோடு உறைந்து தன் உயிரில் கலந்து போன சாருமதியை மறப்பதா.. அவள் இறந்து விட்டாளா.. அய்யோ.. அதை நினைக்க நினைக்க உடல் நடுங்கவே.. தன் கைவளைவில் இருந்தவளை இறுக அணைத்துக் கொண்டான்.. அவன் உரமேறிய கைகள் அணைத்த விதத்தில்.. எலும்புகளை உடைப்பது போல் உடல் வலிக்க.. "சார் வலிக்குது".. என்றாள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து..
சாருவின் நினைவுகளினால் அலை கடலில் மாட்டிக் கொண்ட.. காகித கப்பலாக அலைகழிக்கப்பட்டவன்.. கண்களை மூடி ஏதோ நெருப்பு பந்துக்குள் சுழல்வது போல்.. தலையை உலுக்கினான்..
.
"சார்".. என்று மீண்டும் அவன் முகம் பார்த்தவளுக்கு.. கீழுதட்டை பற்களால் அவன் கடித்திருந்த விதம் ஏதோ விபரீதத்தை உணர்த்துவதே தோன்ற.. அவன் கன்னம் பற்றி உலுக்கினாள் அவள்..
"என்னை விட்டு போயிடாத சாரு.. என்னை விட்டு போயிடாதே ப்ளீஸ்".. என்று கையை காற்றில் நீட்டி பிதற்றியவனோ.. அருகே கிடந்த மேஜையை ஒற்றைக் கையால் ஓங்கி குத்த.. மேஜையிலிருந்த கண்ணாடி கோப்பை உடைந்து.. கைகளில் ரத்தம் கொட்டியது..
"அய்யோ சார்".. என்று உயிர்வரை பதறி அலறியவள்.. இதயம் வேகமாக துடிக்க அடிபட்ட அவன் கையைப் பற்றி கொண்டாள்.. உயிர் போகும் கடைசி தருணத்தில் பார்த்த குருதியில் குளித்த சாருவின் முகம் மீண்டும் அவனை மூர்க்கமாய் மாற்றியிருக்க வெறி பிடித்தவன் போல் கத்தினான் அவன்.. யாருமற்ற நிலையில் அனைத்துமாக இருந்த சாருவின் இழப்பு கிட்டத்தட்ட அவனை மிருகமாகவே மாற்றியிருந்தது..
கையை உதறிக் கொண்டு ஒரு நிலையில் இல்லாமல் தவித்தவனை அடக்கவே முடியவில்லை அவளால்..
உயிருக்கு உயிராய் நேசித்த ஒரு பெண்ணின் இழப்பு அவனை எந்த அளவு பாதித்திருக்கிறது என்று புரிந்து கொண்டாலும் இயலாமையுடன்.. கண்ணீர் பெருக்கெடுக்க அவனை இழுத்து அணைத்துக் கொண்டவள்.. "சாரும்மா.. சாரும்மா".. என்று தவிப்புடன் உளறியவனை தலையை வருடி கொடுத்து.. தன் மார்பு சூட்டின் கதகதப்பை கொடுத்து.. கட்டுக்குள் கொண்டு வந்தாள்..
"சாரு வரமாட்டாளா.. சாரு திரும்பி எனக்கு கிடைக்க மாட்டாளா".. என்று இரவெல்லாம் அவளை புரட்டி எடுத்ததில்.. ஒரு வழியாகிப் போனாள் மதி..
மறுநாள் காலையில்.. அவன் தான் முதலில் எழுந்தான்.. எப்போதும் அவனுக்கு முன்னதாகவே எழுந்து மென்மையாக நெற்றியில் முத்தமிட்டு எழுப்பும் மதியின் ஸ்பரிசம் கிடைக்காது போகவே.. விழிகளை சுருக்கி அருகே பார்த்தான்..
போர்வையை கழுத்து வரை போர்த்திக் கொண்டு.. முனங்கிக் கொண்டிருந்தாள் மதி..
"என்னாச்சு இவளுக்கு".. என்று யோசனையுடன் அருகே சென்றவனுக்கு.. அவள் மேனியின் சூடு அனலாய் அவனையும் ஸ்பரிசிக்க.. பதறிப் போனவன் அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.. காய்ச்சல் கொதித்துக் கொண்டிருக்க.. அரை மயக்க நிலையில் உளறிக் கொண்டிருந்தாள் அவள்..
எல்லாம் இரவில் தான் நடந்து கொண்டதன் விளைவால் வந்த வினை.. என்பதை உணர்ந்து கொண்டவனோ "ஷிட்".. நெற்றியில் ஓங்கி அறைந்து கொண்டான்.. "சே.. என்ன பண்ணி வச்சிருக்க ஹரிஷ்".. என்று தன்னையே பலமாக கடிந்து கொண்டவன்.. வேகமாக அவளுக்கு உடைகளை மாற்றி விட்டு தூக்கி காரில் போட்டு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தான்..
அன்று வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டவன்.. மருத்துவமனையில் அருகிலிருந்து அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டான்.. சாதாரண காய்ச்சல் என்பதால் ஒரு நாளிலேயே டிஸ்சார்ஜ் செய்துவிட அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில்..
"இங்க பாரு.. என்னாலதான் உனக்கு இப்படி ஆச்சு.. அதனாலதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் பார்த்தேன்.. மத்தபடி உன் மேல இருக்கிற அக்கறைன்னு தவறா புரிஞ்சுகிட்டு நீயா ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.. நான் செஞ்ச தவறுக்கான பிராயச்சித்தம் இது புரிஞ்சுதா".. என்று கடுமையான குரலில் கேட்க.. வெற்று பார்வையுடன் புரிந்தது என்ற தலையசைத்தாள் அவள்.. அதன்பின் இரண்டு நாட்கள் அவளை விலகி இருந்தவன் மீண்டும் பசையாக ஒட்டிக் கொண்டான்..
இப்படியே ஒரு மாதங்கள் ஓடியிருக்க.. மன சஞ்சலங்கள் நீங்கி ஓரளவு இயல்பாகி இருந்தான் ஹரிஷ்.. மதியை விலக்கவில்லை.. அதே நேரத்தில் சாருவையும் மறக்கவில்லை.. சாருவை மனம் தீவிரமாக தேடும் நேரத்தில் மதியிடம் வடிகால் தேடிக் கொண்டான் சுயநலமாக..
அலுவலகத்தில் ஒரு மாதிரியும் வீட்டில் வேறு மாதிரியும் நடந்து கொண்டான்.. அவ்வப்போது இதழைத் துடைத்துக் கொண்டு வெளியே வரும் மதியை கண்டு.. "தூ.. இந்த பொழப்புக்கு தூக்கு மாட்டிகிட்டு தொங்கலாம்".. என்று வெளிப்படையாகவே கரித்துக் கொட்டினாள் ஜோதி.. நெருங்கிய தோழியிடமிருந்து இது போன்ற வார்த்தைகளை கேட்டு கொதிக்கும் வெந்நீரை துடிக்க துடிக்க தன் மேல் ஊற்றியதைப் போல துடித்துப் போனாள்..
இதற்கு மேல் தாங்காது.. அனைவரின் இழிச்சொல்லுக்கு ஆளாவதை விட.. அவன் ஏற்றுக் கொள்கிறானோ புறக்கணிக்கிறானோ.. தன் காதலை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.. சாருமதியின் மீது அவன் கொண்ட காதலுக்கு.. தன் காதல் எந்த விதத்தில் குறைந்து போனது.. என்ற எண்ணத்துடன் திடமான ஒரு முடிவுக்கு வந்தவள் அன்று வேலை முடிந்து அவனுக்கு முன்னதாக சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிட்டாள்.. எங்கிருந்து தன் காதல் ஆரம்பித்தது.. எப்படி சொல்ல வேண்டும்.. என்று பிரத்தியேகமாக பயிற்சி எடுத்துக் கொண்டு அவனுக்காக பேராலுடன் காத்திருக்க..
காலிங் பெல் அடிக்கும் ஓசை..
தன் மன்னவன் தான் வந்து விட்டான் என்று.. ஆனந்த உற்சவமாக துள்ளி குதித்து ஓடியவள் ஆசையாக கதவை திறக்க.. வெளியே..
மூன்று பெண்கள் விழிகளில் கலக்கத்துடன் நின்றிருந்த கோலத்தை பார்த்து அவர்கள் யார் என்று புரியாமல் விழித்தாள் மதி..
"நீ.. நீங்க".. அவள் விழிகள் கேள்வியாக மூவரையும் ஆராய..
"நான்.. ஹரிஷோட அம்மா.. இவங்க ரெண்டு பேரும் அவனோட தங்கைகள்.. இது ஹரிஷ் வீடு தானே உள்ளே வரலாமா".. என்று தயக்கமும் சங்கடமுமாக கேட்டாள் அந்த நடுத்தர வயது பெண்மணி..
சட்டென முகம் மலர்ந்து போனவளோ.. "அய்யோ உள்ளே வாங்க".. என்று வரவேற்றாள் முகம் கொள்ளா புன்னகையுடன்..
முதலில் ஹரிஷின் தாய் உள்ளே வர.. அவளைத் தொடர்ந்து வந்த இரு பெண்களில் ஒருத்தி திருமணமாகாத இளம் பெண் என்று கண்டு கொண்டாள் மதி.. இன்னொருத்தியோ நிறை மாத கர்ப்பிணியாக.. வயிற்றை தள்ளிக் கொண்டு பொறுமையாகவே நடந்து வந்தாள்..
மூவரை அமர வைத்து.. களைப்பாக இருந்தவர்களுக்கு குடிக்க பழரசம் கொடுத்தாள் மதி..
அவர்களை பேசட்டும் என்று காத்திருக்க.. மூவரும் ஒருவித தர்ம சங்கடத்துடன் கையை பிசைந்தபடி அமர்ந்திருந்தனர்..
அந்நேரம் தன் கையில் உள்ள இன்னொரு சாவியால் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ஹரீஷ் ராகவேந்தர்..
எப்போதும் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக்கொள்ளும் மதியை அவன் எதிர்பார்த்திருக்க.. கண்முன்னே கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியூட்டுவதாய்..
அவன் தாய் கல்யாணி.. தங்கைகள் சத்யா மற்றும் மாதவி..
நொடிப்பொழுதினில் அவன் தாடை இறுகியது.. உடல் வில்லேற்றிய நாணாக வளைந்து நிற்க..
ஆறடி உயரத்தில் கம்பீரமும் ஆளுமையும் பொருந்திய மகனை கண்டதும் பெருமிதத்தில் கண்கள் பனிக்க "கண்ணா".. என்று கல்யாணி அழைக்கும் முன்னே..
"யார் நீங்க? ஏன் இங்கே வந்தீங்க.. பெத்து வளர்த்த பையன் உயிரோடு இருக்கானா செத்தானான்னு பார்க்க வந்தீங்களா.. இல்லை அவன் வசதியா இருக்கான்னு ஒட்டிக்க வந்தீங்களா" என்று மீசை துடிக்க சீற்றமாய் உறுமினான் ஹரிஷ்..
"அய்யோ.. அப்படியெல்லாம் பேசாத கண்ணா.. சத்தியமா இவ்வளவு நாள் நீ எங்க இருக்கேன்னு தெரியாம போச்சு... அதான் உன்னை தேடி வரல.. என் அம்மாவை நீ மன்னிக்க கூடாதா.. தெரிஞ்சு உனக்கு எந்த துரோகமும் பண்ணல.. என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருடா".. என்று கல்யாணி கண்ணீருடன் கையேந்தி கெஞ்சி நிற்க..
"எதுவும் பேச வேண்டாம் நீங்க எனக்கு செஞ்ச துரோகத்தை என்னால மறக்கவே முடியாது.. என்னைப் பொறுத்த வரைக்கும் என்னை பெத்த தாய் எப்பவோ தொலைஞ்சு போயிட்டாங்க.. இப்போ நிக்கிறது இதோ இந்த ரெண்டு பொண்ணுங்களோட அம்மா மட்டும் தான்.. மரியாதையா மூன்று பேரும் வெளியே போயிடுங்க".. என்று எஃகு குரலில் கர்ஜித்த மகனை ஏக்கத்துடன் பார்த்திருந்தவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு தன் பெண்களை அழைத்துக் கொண்டு இயலாமையுடன் அங்கிருந்து வெளியேறப்போக.. ஒரு நிமிஷம் நில்லுங்க.. என்று மூவரையும் தடுத்து நிறுத்தினாள் விண்மதி..
தொடரும்..